வெளியிடப்பட்ட நேரம்: 13:56 (24/10/2018)

கடைசி தொடர்பு:14:23 (24/10/2018)

ஒரே நேரத்தில் அன்பாக்ஸிங்...ஒன்ப்ளஸின் கின்னஸ் முயற்சி!

இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போன்களில் ஒன்றான 'ஒன்ப்ளஸ் 6T' அக்டோபர் 30-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி, புதிய முயற்சி ஒன்றைக் கையில் எடுத்துள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம். ஒரே நேரத்தில் அதிக நபர்கள் அன்பாக்ஸ் செய்யும் கின்னஸ் சாதனைக்கு வாடிக்கையாளர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது அந்நிறுவனம். இதைத் தனது வாடிக்கையாளர் ஃபோரம் தளத்தில் பதிவு செய்துள்ளது ஒன்ப்ளஸ்.

கின்னஸ்

நவம்பர் 1-ம் தேதி, மும்பையில் நடக்கும் இதில் பங்குபெறுவோருக்கு, மற்றவர்களைவிட ஒரு நாள் முன்னதாகவே மொபைல் கைக்கு வரும். டைப்-சி புல்லெட்ஸ் ஹெட்போன்கள் இலவசமாகக் கிடைக்கும். மற்றும் 1500 ரூபாய் மதிப்பிலான அமேசான் கிஃப்ட் வவுச்சர் கிடைக்கும் என்று பல சலுகைகளையும் அறிவித்துள்ளது ஒன்ப்ளஸ். இதில் எப்படிப் பங்குபெறுவது என்ற வழிமுறையைப் பார்ப்போம்.

முதலில் 'Amazon Prime Now' கணக்கு ஒன்றைத் தொடங்கி, ஆப்பை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். பின்பு insider.in தளத்தில் அக்டோபர் 26-ம் தேதி பதிவுசெய்ய வேண்டும். இது சரியாக முடிந்துவிட்டால், அக்டோபர் 31 அன்றே ஒன்ப்ளஸ் 6Tயை ப்ரைம் நாவ் ஆப்பில் வாங்க முடியும். ஒன்ப்ளஸ் குறிப்பிட்ட டெலிவரி முகவரியைக் கொடுத்துவிடலாம். பிறகு, அந்த முகவரியில் சென்று கின்னஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று, போனை அன்பாக்ஸ் செய்து வாங்கி வந்துவிடலாம். மொத்தம் எத்தனை பேர் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க