`மோடியின் அந்த 4 கனவுகள் நனவாகும்!' - முகேஷ் அம்பானி உறுதி | Modi's 4 goals will be realised says Mukesh Ambani

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (25/10/2018)

கடைசி தொடர்பு:21:30 (25/10/2018)

`மோடியின் அந்த 4 கனவுகள் நனவாகும்!' - முகேஷ் அம்பானி உறுதி

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி இன்று டெல்லியில் நடந்த இந்தியன் மொபைல் காங்கிரஸ் தொடக்க விழாவில் சிறப்புரை ஆற்றினார். இதில் இந்தியாவில் இப்போது ஏற்பட்டுவரும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் பிரதமர் நரேந்திர மோடியின் நான்கு முக்கிய இலக்குகளை அடையச் செய்யும் என்று தெரிவித்துள்ளார் அம்பானி. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவது, ஆயுஷ்மான் பாரத் திட்டம், தரமான கல்வி மற்றும் கூடுதல் வேலைவாய்ப்புகள் ஆகியனதான் இந்த நான்கு இலக்குகள்.

முகேஷ் அம்பானி

``இந்த உலகத் தர தொழில்நுட்பக் கட்டுமானத்தின் மூலம் நல்ல வளர்ச்சிகள் மட்டுமல்லாமல் உலகின் நான்காவது தொழிற்புரட்சியை ஆரம்பித்து வைக்க முடியும். 130 கோடி இந்தியர்களும் இந்தப் புரட்சியில் பங்குபெறலாம். மனித குலத்தில் இருக்கும் முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வை இங்கு இந்தியாவில் முதலில் காணலாம்" என்றும் அவர் தெரிவித்தார்.

2020-ம் ஆண்டில் 4G இந்தியா முழுவதும் கிடைக்கும் வண்ணம் வளர்ந்துவிடும் என்றும் எந்த ஒரு நாட்டுக்கும் முன்பு இந்தியா 5G-க்கு தயாராகும் என்றும் கூறினார். மேலும், ஜியோவின் ஃபைபர்நெட் சேவையான ஜிகாஃபைபர் வந்தவுடன் இன்று பிராட்பேன்ட் உபயோகத்தில் உலகில் 135 வது இடத்தில் இருக்கும் இந்தியா முதல் 3 இடங்களுக்கு முன்னேறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் முகேஷ் அம்பானி.

பாரதி ஏர்டெல் நிறுவனமும் இந்த இந்தியன் மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் தங்களது 5G பிளான்கள் என்னவென்று தெரிவித்தது. இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் உடன் இயங்கும் வீடு, கனெக்ட்டேட் கார் மாடல் எனப் பல விஷயங்களைத் தங்கள் பூத்தில் காட்சிக்கும் வைத்துள்ளது ஏர்டெல். மற்ற மொபைல் நிறுவனங்களும் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது திட்டங்களை இங்கு காட்சிக்கு வைத்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க