வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (30/10/2018)

கடைசி தொடர்பு:18:55 (30/10/2018)

`என்ன சொல்றீங்க ட்விட்டர்ல லைக் பட்டன் இல்லையா? - அப்டேட் பரிதாபங்கள்!

பிரபல சமூக வலைதளமான ட்விட்டர், தங்கள் தளத்திலிருந்து லைக் பட்டனை நீக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், உடனடியாக எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரியவந்துள்ளது.

ட்விட்டர்

தங்களது தளத்தில் நடக்கும் உரையாடல்களை மேம்படுத்த இது உதவும் என நம்புகிறது ட்விட்டர். ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரி ஜக் டார்சி, ஒரு தனியார் ஊடகத்துக்குப் பேட்டியளித்தபோது, தனக்கு இந்த லைக் பட்டன் பிடிக்கவில்லை, சீக்கிரம் அதை நீக்கவுள்ளோம் என்று தெரிவித்திருந்தார். அதிலிருந்துதான் இதுபற்றிய செய்திகள் வரத்தொடங்கின.

ஆனால், இந்த விவாதம் ஆரம்பகட்டத்தில்தான் இருக்கிறதாம். லைக் பட்டன் தூக்கப்படுவது உறுதியானாலும், அதைச் செயல்படுத்த கொஞ்சக் காலம் ஆகுமாம். 'சமீபத்தில்தான் ட்விட்டர் தனது லுக்கை மாற்றியமைக்கத் தொடங்கியது. மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு, ஆரோக்கியமான உரையாடல் நடக்கும் இடமாக ட்விட்டர் மேம்படும்' என்று ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், லைக் இல்லாமல் எப்படி ஒருவர் கருத்தைப் பாராட்டமுடியும், துணை நிற்க முடியும் என ட்விட்டர்வாசிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

பல முக்கியப் பிரச்னைகளுக்கு இன்னும் தீர்வு காணாமல், தேவையில்லாத விஷயங்களில் ட்விட்டர் கவனம் செலுத்துகிறது என்ற குற்றச்சாட்டும் மக்களிடையே உள்ளது. சமீபத்தில்கூட, அபாயகரமான அச்சுறுத்தும் தகவல்களை வெளியிட்ட ஒரு கணக்கைத் தடுத்து நிறுத்துவதில் மெத்தனம் காட்டிவிட்டதாக மன்னிப்புக்கேட்டது ட்விட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க