வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (06/11/2018)

கடைசி தொடர்பு:07:35 (07/11/2018)

5G வசதி ஐபோன்.... மற்ற நிறுவனங்களைவிட பின்தங்குகிறதா ஆப்பிள்?

 

ஐபோன்

5G வசதி கொண்ட முதல் ஐபோனை 2020-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தக்கூடும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

தகவல் தொழில்நுட்பத்தில் 4G-க்கு அடுத்தகட்டமாக 5G தொழில்நுட்பம் கூடிய விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் 4G - தொழில்நுட்பம் சற்று தாமதமாகத்தான் அனைவரையும் சென்று சேர்ந்தது. அதைப் போல இல்லாமல் 5G வேகமாகவே அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் அறிமுகமாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் 5G வசதி இருக்கும் என்பதை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் பல நிறுவனங்கள் உறுதி செய்திருக்கின்றன. ஆனால், ஐபோனில் 5G எப்போது வரும் என்ற தகவல்கள் பெரிய அளவில் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில்தான் 5G வசதி கொண்ட முதல் ஐபோன் 2020-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், அந்த ஐபோனில் இன்டெல் நிறுவனத்தின் Intel’s 8161 என்ற 5G மோடம் இதில் பயன்படுத்தப்படும் என்றும் தெரிகிறது. கூடுதலாக மற்றொரு புராஸசர் தயாரிப்பு நிறுவனமான மீடியாடெக்கிடமும் ஆப்பிள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிற நிறுவனங்கள் அடுத்த வருடமே 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதற்குத் தயாராகிவிட்ட நிலையில், ஆப்பிள் ரசிகர்கள் கூடுதலாக சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.