வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (07/11/2018)

கடைசி தொடர்பு:10:15 (07/11/2018)

ப்ரைவேட் ரிப்ளை, புதிய பேக்அப் விதிமுறைகள்... வாட்ஸ்அப்பில் புதிய மாற்றங்கள் என்னென்ன?

ப்ரைவேட் ரிப்ளை, புதிய பேக்அப் விதிமுறைகள்... வாட்ஸ்அப்பில் புதிய மாற்றங்கள் என்னென்ன?

வாட்ஸ்அப் பேஸ்புக் நிறுவனத்தின் கைகளுக்குச் சென்ற பிறகு அதில் சேர்க்கப்பட்ட வசதிகள் சற்று அதிகம்தான். பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக பல வசதிகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வாட்ஸ்அப்பில் சேர்க்கப்படுகின்றன. கடந்த மூன்று மாதங்களுக்குள்ளாக வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய வசதிகள் மற்றும் கூடிய விரைவில் வாட்ஸ்அப்பில் சேர்க்கப்படவுள்ள வசதிகள் இவைதாம்.

பிரைவேட் ரிப்ளை

வாட்ஸ்அப்பில் அண்மையில் சேர்க்கப்பட்ட வசதிகளில் இதுவும் ஒன்று. ஒரு குரூப்பில் மெசேஜ் அனுப்பும்போது அதை அந்தக் குரூப்பில் உள்ள அனைவருமே பார்க்க முடியும். வாட்ஸ்அப்பில் குரூப் என்பதே அதற்காகத்தான் என்றாலும் சில சமயங்களில் இது சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உண்டு. எடுத்துக்காட்டாக ஒரே ஒருவருக்கு மட்டும் ஒரு தகவலை தெரியப்படுத்த வேண்டும் என வைத்துக்கொண்டால் அதை மற்றவர்களுக்குத் தெரியாமல் குரூப்பில் அனுப்புவது முடியாத விஷயம். ஆனால் தற்பொழுது பிரைவேட் ரிப்ளை வசதி மூலமாகக் குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டும் தனியாக மெசேஜை அனுப்பலாம். அதை வேறு யாரும் பார்க்க முடியாது. நீங்கள் பீட்டா (Beta) பரிசோதனையாளர் என்றால் இந்த வசதியை இப்பொழுதே பயன்படுத்திப் பார்க்க முடியும். இந்த வசதி தற்பொழுது ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டிக்கர் 

சர்கார்

கடந்த சில மாதங்களாக பீட்டா பரிசோதனையாளர்களுக்கு மட்டும் கிடைத்த இது இறுதியாகக் கொடுக்கப்பட்ட அப்டேட்டிற்கு பிறகு பெரும்பாலோனோருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக வாட்ஸ்அப்பில் எதிர்பார்க்கப்பட்ட வசதி இது. தற்பொழுது சிலருக்கு பிறர் அனுப்பும் ஸ்டிக்கர்களை பார்க்க முடிந்தாலும், அனுப்ப முடியாமல் இருக்கிறது. இது அடுத்தடுத்த அப்டேட்களில் சரி செய்யப்படும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் வந்த வேகத்திலேயே சர்கார் விஜய் வரை அப்டேட்டாக இருக்கிறது ஸ்டிக்கர்.

வாட்ஸ்அப் பேக்அப் 

வாட்ஸ்அப் சாட்களின் பேக்அப் தற்பொழுது கூகுள் டிரைவில் சேமிக்கப்பட்டு வருகிறது. அதில் வரும் 12-ம் தேதி முதல் மாற்றம் செய்யவிருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம். குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு கூகுள் டிரைவில் சேமிக்கப்படும் வாட்ஸ்அப் சாட் பைல்களின் அளவு கணக்கில் கொள்ளப்படாது. இதன் மூலம் கூகுள் டிரைவில் வாட்ஸ்அப் சாட்களின் பேக்அப் தவிர்த்து பிற பைல்களை சேமித்து வைத்துக் கொள்ள அதிக இடம் கிடைக்கும். அதே போல ஒரு வருடத்திற்கு மேல் அப்டேட் செய்யப்படாமல் இருக்கும் பேக்அப் தானாகவே நீக்கப்படும் என்ற முடிவையும் எடுத்திருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம்.

Suspicious Link Indicator 

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்பில் பரவும் ஸ்பேம் மெசேஜ்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு சேர்க்கப்பட்ட புதிய வசதி இது. ஒருவருக்குப் புதிதாக ஒரு மெசேஜ் வரும் போது அது ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சந்தேகம் எழுந்தால் அதை வாட்ஸ்அப் எச்சரிக்கை செய்யும்.

சைலைன்ட் மோட் 

தற்பொழுது வாட்ஸ்அப் சாட்டில் ஏதாவது ஒன்றை மியூட் செய்து வைத்தால் அது தொடர்பான நோட்டிபிகேஷன்கள் மறைக்கப்படும். ஆனால் படிக்காத மெசேஜ்களின் எண்ணிக்கை மொபைலின் நோட்டிபிகேஷன் பகுதியில் காட்டப்படும். ஆனால் சைலைன்ட் மோட் மூலமாக மியூட் செய்யப்பட்டுள்ள சாட்டில் எவ்வளவு மெசேஜ் புதிதாக வந்திருக்கிறது என்பதும் சேர்த்தே மறைக்கப்பட்டு விடும். இந்த வசதி ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

பிக்சர் இன் பிக்சர் வீடியோ மோட்

பிக்சர் இன் பிக்சர்

இதன் மூலமாக வாட்ஸ்அப்பில் வரும் வீடியோ லிங்க்குகளை வாட்ஸ்அப்பின் உள்ளேயே பார்க்க முடியும். இதற்கு முன்பு வரை லிங்கை கிளிக் செய்தால் அதற்குரிய ஆப்பில் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் தற்பொழுது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் யூட்யூப் வீடியோக்களை வாட்ஸ்அப்பின் உள்ளேயே பார்த்து ரசிக்க முடியும்.

ஸ்வைப் டு ரிப்ளை 

ஸ்வைப் டு ரிப்ளை 

ரிப்ளை விஷயத்தில் வாட்ஸ்அப்பில் செய்யப்பட்டுள்ள பெரிய மாற்றம் இது. வழக்கமாக ஒரு மேசேஜிற்கு ரிப்ளை செய்வதற்கு அதை சில நொடிகள் அழுத்திப் பிடிக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த புதிய வசதி மூலமாக மேசேஜை வலதுபுறமாக ஸ்வைப் செய்தால் எளிதாக ரிப்ளை செய்ய முடியும்.

ஃபார்வேர்டு மெசேஜ் லிமிட்

வாட்ஸ்அப் நிறுவனத்திற்குப் பெரிய தலைவலியாக இருப்பது இந்த ஃபார்வேர்டு மெசேஜ்கள்தான். முக்கியமாகக் காலை வணக்கம், மாலை வணக்கம் என ஒன்று விடாமல் ஃபார்வேர்டு செய்யும் இந்தியர்களுக்கு அவசியமான தேவையாகவும் இருந்தது. இதன் மூலம் ஒரே நேரத்தில் ஐந்து பேருக்கு மேல் ஒரு மெசேஜை ஃபார்வேர்டை செய்ய முடியாது.

Delete for Everyone வசதியில் மாற்றம் 

சமீப காலத்தில் வாட்ஸ்அப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட வசதிகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது இதுவாகத்தான் இருக்கும். அதில் ஒரே ஒரு சிறிய மாற்றம் மட்டும் தற்பொழுது செய்யப்பட்டிருக்கிறது. அனுப்பப்பட்ட மெசேஜை திரும்பப் பெரும் கால அளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எப்போதும் போல 1 மணி நேரத்திற்குள் தவறாக அனுப்பிய மெசேஜை 'டெலிட் ரிக்வெஸ்ட்' கொடுத்து அழித்துக் கொள்ள முடியும். அதாவது ஒரு மணி நேரத்திற்குள் அந்த மெசேஜை பெற்றவர்களும் (receiver) ஆன்லைன் வரவேண்டும். அப்போதுதான் 'டெலிட் ரிக்வெஸ்ட்' ஏற்றுக்கொள்ளப்படும். அப்படி அழிக்கும் போது இருவருக்கும் மெசேஜ் அழிந்து விடும். ஆனால், 'டெலிட் ரிக்வெஸ்ட்' கொடுக்கப்பட்டு 13 மணி நேரத்திற்குப் பிறகு மட்டுமே ரிசிவர் ஆன்லைன் வருகிறார் என்றால் உங்கள் பக்கம் மட்டுமே மெசேஜ் அழியும். மறுபக்கம் மெசேஜ் அழியாது.

வெக்கேஷன் மோட் 

வாட்ஸ்அப்பில் ஒருவரின் சாட்டை மறைத்து வைப்பதற்கு Archive செய்தால் போதும். ஆனால் அதில் ஏதாவது புதிதாக மெசேஜ் வரும்போது மறைந்திருக்கும் சாட் பகுதிக்கு அது வெளியே வந்து விடும் என்பது இதில் தற்பொழுது இருக்கும் ஒரு குறை. அதை வெக்கேஷன் மோட் மூலமாகச் சரி செய்ய முடியும். இந்த வசதி தற்பொழுது பரிசோதனையில் இருக்கிறது. இது செயல்பாட்டிற்கு வந்தால் Archive செய்த சாட்கள் புதிதாக மெசேஜ் வந்தாலும் மறைந்தே இருக்கும்.

வாட்ஸ்அப் பேமன்ட் 

வாட்ஸ்அப் பேமன்ட் 

டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதில் வாட்ஸ்அப்பும் கூடிய விரைவில் இணையவிருக்கிறது. வாட்ஸ்அப் மூலமாகப் பிறருக்கு பணம் அனுப்பும் வசதி தற்பொழுது பீட்டா பரிசோதனையாளர்கள் சிலருக்குத் தரப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பணம் தொடர்பான விஷயம் என்பதால் நீண்ட காலமாகவே பரிசோதனையிலேயே இருந்து வருகிறது இந்த வசதி. எப்படியும் இன்னும் அடுத்த சில அப்டேட்களில் இந்த வசதி அனைவருக்கும் கிடைக்கும் என்று நம்பலாம்.