வெளியிடப்பட்ட நேரம்: 00:58 (08/11/2018)

கடைசி தொடர்பு:02:43 (08/11/2018)

நான்கு வருடங்களில் இதுவே முதல் முறை - சரிவை சந்திக்கும் ஐபோன்!

ஐபோன்

கடந்த நான்கு வருடங்களில் இல்லாத அளவிற்கு ஐபோனின் விற்பனை முதல் முறையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்தத் தகவலை கவுன்ட்டர் பாயின்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. உலக அளவில் சீனாவிற்கு அடுத்த படியாக இந்தியா மிக முக்கிய மொபைல் சந்தையாகப் பார்க்கப்படுகிறது. அண்மையில் ஆப்பிள் நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு அறிக்கை வெளியிடப்பட்டது. நான்காவது காலாண்டிலும் அதே போல விற்பனை இருக்கும் எனத் தலைமை நிர்வாகி டிம் குக் தெரிவித்திருந்தார். இந்த வருடத்தில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் 2 மில்லியன் போன்களை விற்பனை செய்திருக்கிறது. இது மிகவும் குறைவான விற்பனை அளவாகவே பார்க்கப்படுகிறது. " கடந்த நான்கு ஆண்டுகளில் விற்பனை முதல் முறையாக சரிவைச் சந்தித்திருக்கிறது, இதை நீங்கள் கடந்த வருடத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் அதை அறிந்து கொள்ள முடியும்.

கடந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் 90 லட்சமாக இருந்த விற்பனை இந்த வருடம் 45 லட்சமாகக் குறைந்திருக்கிறது" என்கிறார் கவுன்ட்டர் பாயின்ட் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் நீல் ஷா. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் வேளையில் ஆப்பிளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் வருவது இல்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். புதிய ஐபோன்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது ஆனால் அதற்குத் தகுந்தவாறு அதில் வசதிகள் இல்லை என்பது மிகப்பெரிய குறையாகப் பார்க்கப்படுகிறது. மேலும் போட்டியாளர்கள் குறைவான விலையில் ஐபோனின் இருக்கும் வசதிகளைக் கொடுப்பதும் ஐபோன் விற்பனை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.