வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (08/11/2018)

கடைசி தொடர்பு:20:40 (08/11/2018)

`அருகிலிருப்பவரை நண்பராக்கும் வசதிக்குக் காப்புரிமை!’ - புதிய சர்ச்சையில் ஃபேஸ்புக்

சாதாரணமாக ஒருவரை ஃபேஸ்புக்கில் நண்பராக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் அவரது பெயராவது தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஆனால், அதுகூட இல்லாமல் பக்கத்தில் இருப்பவரை நண்பராகப் பரிந்துரை செய்யும் முறை ஒன்றுக்குக் காப்புரிமை பெற்றுள்ளது பிரபல சமூகவலைதளமான ஃபேஸ்புக்.

அருகில் இருக்கும் இருவரின் மொபைல்களிலும் இருக்கும் gyroscope, accelerometer போன்ற சென்சார்கள் மூலம் இதைச் செய்ய முயல்கிறது ஃபேஸ்புக். இதில் கிடைக்கும் தகவல்களை வைத்து ஒரு நபரும் இன்னொரு நபரும் ஒரே பாதையில் செல்கின்றனரா, சந்தித்துக் கொள்கின்றனரா போன்றவற்றை ஆராய்ந்து ஒருவரை இன்னொருவருக்கு நண்பராகப் பரிந்துரைக்கும் இந்த முறை. 

Facebook

Credits: Whatafuture.com

இன்னும் முதிர்ச்சி அடையாத ஃபேஸ்புக்கின் இந்த யோசனை ப்ளூடூத் மற்றும் NFC வசதிகளையும் பயன்படுத்துமாம். GPS தொழில்நுட்பமும் பெரும் பங்காற்றும். பெறப்பட்ட காப்புரிமையில், 'இப்போது இருக்கும் முறையில் ஒரு நபர் இன்னொரு நபரைப் பெயரை வைத்து ஒரு தளத்தில் நண்பராக்கத் தேட முடியும். ஆனால், சில சமயங்களில் அது நடக்காமல் போக வாய்ப்புண்டு. ஓர் உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் ஒரு பெரிய கூட்டத்தில் இருவர் சந்தித்துக் கொள்கின்றனர், சமூகவலைதளங்களில் இணைந்துகொள்ளலாம் என முடிவு எடுக்கின்றனர். ஆனால், பெயரை கேட்க மறந்தாலோ, இருவருக்கும் பொதுவாக இருக்கும் நண்பர்கள் குறைவாக இருந்தாலோ அவருடன் மீண்டும் இணைவது என்பது சாத்தியமற்றது. அந்தச் சிக்கலை போக்கவே இந்த முறை" என்று குறிப்பிட்டுள்ளது அந்நிறுவனம்.

ஃபேஸ்புக்

காப்புரிமை ஆவணத்தில் இருக்கும் குறியீட்டு படம் 

இன்னும் முழுமை பெறவில்லையென்றாலும் ஏற்கெனவே பலரின் தகவல்களைப் பாதுகாக்கத் தவறியதாகப் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள ஃபேஸ்புக்குக்கு இந்த தேவையில்லாத வம்பு எதற்கு எனப் பலரும் இப்போதே அந்நிறுவனத்தை சாடத்தொடங்கியுள்ளனர் நெட்டிசன்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க