வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (10/11/2018)

கடைசி தொடர்பு:20:51 (10/11/2018)

இந்தக் காலத்துல ஃபிளிப் போனா... சாம்சங்குக்கு என்னதான் ஆச்சு?!

இந்த வகை போன்களுக்கு சந்தையில் பெரிதாக வரவேற்பு கிடைப்பதில்லை. எனவே இதன் தயாரிப்பு கூடிய விரைவில் நிறுத்தப்படும் என்ற தகவல் வெளியானது. ஆனால் அதற்கு மாறாக நேற்றைக்கு இந்த வருடத்திற்கான ஃபிளிப்போனை W2019 என்ற பெயரில் நேற்று அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங்.

இந்தக் காலத்துல ஃபிளிப் போனா... சாம்சங்குக்கு என்னதான் ஆச்சு?!

'ஃபிளிப் போன்' இந்தப் பெயரை எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதா? ஒருவேளை அதை நீங்கள் பயன்படுத்தியிருந்தால் நீங்கள் நிச்சயமாக 2k கிட்ஸாக இருக்க மாட்டீர்கள் என்பதை உறுதியாகக் கூற முடியும். செல்போன்கள் அனைவரது கையிலும் பரவலாகத் தொடங்கிய கால கட்டத்தில் சந்தையில் சக்கைப்போடு போட்டவை இந்த ஃபிளிப் போன்கள். வழக்கமான வடிவமைப்பில் இருந்து கொஞ்சம் ஸ்டைலிஷாக தோற்றமளித்த காரணத்தால் மக்களுக்குப் பிடித்திருந்தது. இப்படி பலரின் விருப்ப மொபைலாக இருந்த இவை சில காலம் கழித்து முற்றிலுமாக மறைந்தே போயின. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வரத் தொடங்கிய பிறகு இந்த வகை மொபைல்களை உருவாக்குவதை நிறுவனங்கள் குறைத்துக்கொள்ளத் தொடங்கின. அதன் பின்னர் சந்தையில் ஃபிளிப் போன்களைப் பார்க்கவே முடியவில்லை.

ஃபிளிப் போன்

ஆனால் ஒரு நிறுவனம் இன்று வரை தொடர்ந்து ஃபிளிப் போனை அறிமுகப்படுத்தி வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? அந்த ஒரு நிறுவனம் சாம்சங்தான். ஆண்ட்ராய்டு யுகத்தில் அனைவருமே மாறிவிட இன்னும் சாம்சங் மட்டும் பிடிவாதமாக இந்தப் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்னால் சாம்சங் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் ஃபிளிப் போனை அறிமுகப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பலருக்கும் அது பொய்யான தகவலாக இருக்கக்கூடும் என்றே தோன்றியது. யாரவது மீண்டும் பழைய வடிவமைப்பில் போன்களை அறிமுகப்படுத்துவார்களா, எனவே ஆண்ட்ராய்டு ஃபிளிப் போன் சந்தைக்கு வருவது சாத்தியமில்லாத ஒன்று என்றே நினைத்தார்கள். ஆனால் வெளியான தகவல்களை உறுதி செய்த சாம்சங், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் ஃபிளிப் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இன்றைக்கும் சந்தையில் ஓர் ஆண்ட்ராய்டு ஃபிளிப் போனை வாங்க வேண்டும் என்று நினைத்தால் அணுக வேண்டிய முகவரி சாம்சங் நிறுவனம்தான்.

ஃபிளிப் போன் வேணுமா... சீனாவுக்குத்தான் போகணும்

ஃபிளிப் போன்

சாம்சங் தொடர்ந்து ஃபிளிப் போனை அறிமுகப்படுத்தி வருகிறது என்றால் இந்தியாவில் ஏன் அதைப் பார்க்க முடிவதில்லை? இந்தப் போன்களை சீனா, தென் கொரியா போன்ற சில நாடுகளில் மட்டுமே விற்பனை செய்கிறது. W சீரிஸ் என்ற பெயரில்தான் இந்தப் போன்கள் வெளியாகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் இந்தப் போன்கள் அறிமுகப்படுத்தப் படாமல் இருப்பதற்கான காரணம் தெரியவில்லை. கடந்த வருடம் சாம்சங் நிறுவனம் சீனாவில் கால் பதித்து 25-வருடங்களை நிறைவு செய்திருந்தது. அதைச் சிறப்பிக்கும் வகையில் W2018 என்ற பெயரில் ஒரு ஃபிளிப் போனை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த வகை போன்களுக்கு சந்தையில் பெரிதாக வரவேற்பு கிடைப்பதில்லை. எனவே இதன் தயாரிப்பு கூடிய விரைவில் நிறுத்தப்படும் என்ற தகவல் வெளியானது. ஆனால் அதற்கு மாறாக நேற்றைக்கு இந்த வருடத்திற்கான ஃபிளிப்போனை W2019 என்ற பெயரில் நேற்று அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங். வழக்கம் போல இது சீனாவில் மட்டுமே விற்பனைக்கு வரும்.

சாம்சங்

ஃபிளிப் போன் என்றால் ஏதோ சாதாரணமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். ஒரு ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட் போன்களுக்கான எல்லா வசதிகளும் இதில் உண்டு. W2019 ஸ்மார்ட்போனில் எல்லாமே டூயல்தான். இதில் மொத்தம் இரண்டு டிஸ்ப்ளேக்கள் இருக்கின்றன. வெளிப்புறம், உட்புறம் என இரண்டுமே 4.2-இன்ச் அளவுள்ள Super AMOLED வகை டிஸ்ப்ளேக்கள். அதிக செயல்திறன் கொண்ட Snapdragon 845 புராஸசர் இதில் இருக்கிறது. 6 GB ரேம் கொண்ட இது 128 GB மற்றும் 256 GB இன்டெர்னல் மெமரி என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும். 3,070 mAh பேட்டரியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் ஃபிளிப்போன் ரசிகராக இருந்து இதை வாங்க வேண்டுமென்று விரும்பினால் தாராளமாக சீனாவிலிருந்து இதை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், செலவு கொஞ்சம் அதிகமாகும். ஏனென்றால் இந்த ஃபிளிப் போன்களின் விலை ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாம்! 


டிரெண்டிங் @ விகடன்