வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (12/11/2018)

கடைசி தொடர்பு:15:47 (12/11/2018)

டியர் டிக்டோக் யூசர்ஸ்... ஃபேஸ்புக் செய்திருக்கும் காரியத்தைப் பாருங்க! #Lasso

ஏற்கெனவே இன்ஸ்டாகிராம் இருக்கும்போது எதற்காக தனியாக ஒரு ஆப்பை அறிமுகம் செய்கிறது ஃபேஸ்புக்?

டியர் டிக்டோக் யூசர்ஸ்... ஃபேஸ்புக் செய்திருக்கும் காரியத்தைப் பாருங்க! #Lasso

டிஜிட்டல் உலகில் எது எப்போது வேண்டுமென்றாலும் திடீரென வைரலாகும். திடீரென புதிய ஆப் ஒன்று எல்லோருடைய ஸ்மார்ட்போனிலும் இடம்பிடிக்கும். அதற்கு சமீபத்திய உதாரணம் டிக்டோக். மியூசிக்கலி என்ற பெயரில் தொடக்கத்தில் பிரபலமானது இந்த ஆப். ஆனால் ட்ரெண்டிங்கின் உச்சத்தில் இருக்கும் போதே இந்த ஆப்பின் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வந்தது. மியூசிக்கலி பின்னர் டிக்டோக்-குடன் இணைக்கப்பட்டது. பெயர் மாறிவிட்டதால் மியூசிக்கலி அவ்வளவுதான் காணாமல் போய் விடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அதற்குப் பிறகும் டிக்டோக்கிற்கு மவுசு குறையவில்லை.

இன்றைக்கு சோஷியல் மீடியாக்களின் ராஜா டிக்டோக்தான். மற்றவை எல்லாம் அதற்குப் பின்னால்தான் இருக்கின்றன. இப்போதைய நிலையில் இளைஞர்களின் ஸ்மார்ட்போன்களில் தவறாமல் இடம்பிடிக்கும் ஆப்களில் முதலிடமும் டிக்டோக்கிற்குத்தான். தற்பொழுது அதற்குப் போட்டியாக புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஃபேஸ்புக். லஸ்ஸோ (Lasso) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப் டிக்டோக் ஆப்பிற்கு மாற்றாக இருக்கும் என நம்புகிறது ஃபேஸ்புக்.

டிக்டோக்கைப் பார்த்து ஃபேஸ்புக்கிற்கு பயமா?

டிக்டோக்

ஃபேஸ்புக் டிக்டோக்கைப் பார்த்து பயப்படுகிறதா என்று கேட்டால் 'ஆம்' என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கெனவே வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் எனப் பலவற்றை கையில் வைத்திருக்கிறது ஃபேஸ்புக். இதன் மூலமாகச் சமூக வலைதளங்களில் பெரும்பான்மை இடத்தைக் கைப்பற்றியும் வைத்திருக்கிறது. அப்படி இருக்கும் போது திடீரென புதிய ஆப் ஒன்றைக் கையில் எடுக்கக் காரணம், டிக்டோக்கின் அசுர வளர்ச்சிதான்.

வழக்கமாக டிக்டோக் போன்ற வைரல் ஆப்கள் எல்லாம் இளைஞர்களிடம் மட்டும்தான் ஹிட்டாகும். ஆனால் டிக்டோக் அப்படிக் கிடையாது. அனைத்து வயதினருமே இதைப் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். அதற்குக் காரணம் இது பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக இருப்பதுதான். பாடலோ, நடிப்போ, நடனமோ, எதுவாக இருந்தாலும் ஒருவர் தன் திறமையை இதன் மூலமாக வெளிப்படுத்த முடியும். அப்படி அப்லோடு செய்யப்படும் வீடியோக்களுக்குக் கிடைக்கும் உடனடி அங்கீகாரமும்தான் இதை எப்போதும் ட்ரெண்ட்டிங்கிலேயே வைத்திருக்கிறது. டிக்டோக் மூலமாக ஒரு வீடியோவை மிகவும் எளிதாக உருவாக்கி அப்லோடு செய்துவிட முடிகிறது. பின்னால் ஏதோ ஒரு பாட்டை ஓட விட்டு ஆடினால் ஒரு புதிய கன்டென்ட் ரெடி. அது மிகவும் நேர்த்தியாக வர வேண்டும் என்ற அவசியம் கூட சில நேரம் இருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் இங்கே சொதப்பல்களுக்குத்தான் வரவேற்பு அதிகமாகவும் இருக்கும், தாறுமாறாக வைரலும் ஆகும். 

லஸ்ஸோ

அமெரிக்காவைப் பொறுத்தவரை கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட சோஷியல் மீடியா ஆப்களில் முதலிடம் டிக்டோக்கிற்குத்தான். தினமும் இதன் பயனாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. அதற்கு மாறாக ஃபேஸ்புக்கின் நிலைமை கடந்த சில மாதங்களாகவே சரியில்லை. தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் ஃபேஸ்புக்கின் பெயர் அடிபடுகிறது. ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவது முன்பு போல இல்லை, போர் அடிக்கிறது எனப் பலருக்கும் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. அதே விஷயத்தை மக்களிடையே எடுக்கப்பட்ட பல சர்வேக்களும் உறுதி செய்திருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இளைஞர்கள் புதிதாக ஃபேஸ்புக்கின் பக்கமே வரத் தயங்குகிறார்கள், அப்படியே வந்தாலும் அதிக நேரம் அங்கே இருப்பதில்லை. அவர்கள் வாசிப்பதை விடவும் வீடியோ பார்ப்பதையே அதிகமாக விரும்புகிறார்கள். இது போன்ற பல்வேறு காரணங்களை மனதில் வைத்துத்தான் லஸ்ஸோ-வை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஃபேஸ்புக். டிக்டோக்குக்கு போட்டி என்பதால் இதன் வடிவமைப்பும் அப்படியே இருக்கிறது. இந்த ஆப் மூலமாகப் புதிதாக வீடியோக்களை உருவாக்கவும் ஷேர் செய்யவும் முடியும். இதை ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலமாக லாகின் செய்ய முடியும். இப்பொழுதைக்கு இந்தியாவில் இதைப் பயன்படுத்த முடியாது. ஆனால் கூடிய விரைவில் இங்கே அறிமுகப்படுத்தப்படக்கூடும்.


டிரெண்டிங் @ விகடன்