வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (13/11/2018)

கடைசி தொடர்பு:16:40 (13/11/2018)

`தவறு நடக்க வாய்ப்பிருக்கு; யோசித்துக் கொண்டு வருவோம்!' - எடிட் வசதி குறித்து ட்விட்டர் சி.இ.ஓ பதில்

பெருவாரியான சமூகவலைதளங்களில் இருக்கும் ஒரு வசதி ட்விட்டரில் மட்டும் கிடையாது. அதுதான் எடிட் வசதி. இதைக் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும் எனப் பல வருடங்களாகப் பயன்பாட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துவருகின்றனர். இது வருமா. வந்தால் எப்படி வரும் என்பதைப் பற்றி தெரிவித்துள்ளார் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (C.E.O) ஜாக் டோர்சி.

ட்விட்டர்

இந்தியா வந்திருந்த அவர் நேற்று டெல்லி ஐ.ஐ.டி-யில் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது, ட்விட்டரில் #PowerOf18 என்ற ஹேஷ்டேக்குடன் மக்கள் அவரிடம் பல கேள்விகள் கேட்டிருந்தனர். இதில் பலவற்றுக்கு பதிலளித்தார் அவர். இதில் ட்விட்டரில் எடிட் வசதி கொண்டுவருவது பற்றிய விவாதமும் எழுந்தது. அதற்கு அவர், இதைச் சாதாரணமாகக் கொண்டுவந்தால் தவறுதலாகப் பயன்படுத்த வாய்ப்புண்டு. பதிவிட்ட கருத்துகளை முழுவதுமாக மாற்றிவிட விரும்புவர் சிலர். இதற்கு இடமளிக்க முடியாது. எழுத்துப்பிழைகள், தவறுதலான லிங்க் வைப்பது போன்றவற்றுக்கு எடிட் வசதி கொண்டுவருவதில் பிரச்னையும் இல்லை. இதை எப்படிச் செய்யலாம் என்றுதான் தாங்கள் யோசித்துவருவதாகவும் தெரிவித்தார்.

ட்விட்டரில் உடனே இதைக் கொண்டுவருமாறு பயன்பாட்டாளர்கள் ஆதரவு தெரிவித்துவருகின்றனர். இப்போது பதிவிட்ட ட்வீட்டில் எதையாவது மாற்ற வேண்டும் என்றால் அதை டெலீட் செய்து புதிதாக மீண்டும் பதிவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க