வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (14/11/2018)

கடைசி தொடர்பு:07:28 (14/11/2018)

`ஒன் பிளஸ் 7-னில் 5G கிடையாது' உறுதிப்படுத்திய ஒன்பிளஸ் நிறுவனம்... ஆனால்!

பீட் லாவ் ஒன்பிளஸ்

ஸ்மார்ட்போன்களில் எப்போது 5G தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அடுத்த வருடங்களில் தங்களது ஸ்மார்ட்போன்களில் 5G தொழில்நுட்பத்தைக் கட்டாயமாக அறிமுகப்படுத்துவோம் என பல மொபைல் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. அதில் ஒன்பிளஸ் நிறுவனமும் அடக்கம். இந்த வருடத் தொடக்கத்திலேயே 2019-ம் ஆண்டில் 5G ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அண்மையில் 6T ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அடுத்த வருடத் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் ஒன் பிளஸ் 7-னில் 5G இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகின.

ஆனால், அந்தத் தகவலை ஒன்பிளஸ் நிறுவனம் தற்பொழுது மறுத்துள்ளது. அதே நேரத்தில் ஒன் பிளஸ் 7-க்குப் பதிலாக வேறொரு சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதில் நிச்சயமாக 5G இருக்கும் என்ற தகவலை அந்நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக CNET இணையதளம் தெரிவித்துள்ளது. தற்பொழுது ஒன்பிளஸ் நிறுவனம் சார்பில் ஒரே ஒரு சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்தான் வெளியிடப்படுகின்றன. எனவே, அடுத்த வருடம் 5G வசதி கொண்ட வேறொரு சீரிஸ் ஸ்மார்ட்போன்களோடு சேர்த்து அடுத்ததாக ஒன் பிளஸ் 7 ஸ்மார்ட்போனும் வருமா அல்லது அது நிறுத்தப்பட்டு விடுமா என்ற தகவல்கள் தெரியவில்லை. அண்மையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஒன் பிளஸ் 6T அறிமுக விழாவில் ஒன் பிளஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லாவ் அடுத்த வருடப் பாதிக்குள்ளாகவே 5G ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் எனக் கூறியிருந்தார்.