வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (15/11/2018)

கடைசி தொடர்பு:15:46 (15/11/2018)

`மொபைல் ஒன்லி' சேவை... இந்திய நெட்ஃபிளிக்ஸின் பட்ஜெட் பரிசு?

தற்போது இந்தியாவில் இருக்கும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தா திட்டங்களின் விலை மிகவும் அதிகம். குறைந்தபட்சமாக 500 ரூபாயில் தொடங்கி 650, 800 ரூபாய் என மூன்று வடிவங்களில் வருகின்றன இந்தத் திட்டங்கள்.

`மொபைல் ஒன்லி' சேவை... இந்திய நெட்ஃபிளிக்ஸின் பட்ஜெட் பரிசு?

பிரபல ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ், மொபைலில் மட்டும் பயன்படுத்தக்கூடிய `மொபைல் ஒன்லி' சந்தா திட்டத்தை மலேசியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. வரவேற்பு எப்படி இருக்கிறது, என்ன சிக்கல்கள் இருக்கின்றன என்பதை சோதனை செய்ய இதைச் செய்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ். இது வெற்றியடைந்து இந்தியாவுக்கும் வந்தால் எப்படி இருக்கும், என்ன பலன்கள் அந்நிறுவனத்துக்கு கிடைக்கும்? என்று விரிவாகப் பார்ப்போம்.

அது என்ன மொபைல் ஒன்லி பிளான்?

மலேசியாவில் இதற்கு முன்பு மாதம் குறைந்தபட்சம் RM33 (சுமார் 550 ரூபாய்) கட்டினால்தான் நெட்ஃப்ளிக்ஸ் பார்க்கமுடியும். ஆனால் மொபைல் ஒன்லி பிளான் மூலம் RM17க்கே (ரூபாய் மதிப்பில் 300-க்கும் குறைவாக) நெட்ஃப்ளிக்ஸ் சேவை மலேசிய மக்களுக்கு இனி கிடைக்கும். ஆனால், இந்தச் சேவையை போன் அல்லது டேப்லெட் மூலம் மட்டும்தான் பெறமுடியும். மேலும் HD அல்லாமல் SD-யில் தான் நிகழ்ச்சிகளைப் பார்க்கமுடியும். ஆனால் சாதாரணமாக இருப்பதில் பாதி விலைக்கு இது கிடைக்கும் என்பதுதான் இதன் சிறப்பு.

மொபைல் ஒன்லி

இந்தியாவுக்கு வருமா இந்த மொபைல் ஒன்லி பிளான்?

தற்போது இந்தியாவில் இருக்கும் சந்தா விலைகளைக் குறைப்பதற்கான எண்ணம் எதுவும் நெட்ஃப்ளிக்ஸிற்கு இல்லை என்று சமீபத்தில்தான் தெரிவித்திருந்தார் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் CEO  ரீட் ஹேஸ்டிங்ஸ். சந்தா திட்டங்களில் இந்தியா மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் சில புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என இந்நிறுவனத்தின் முதன்மை அதிகாரி கிரெக் பீட்டர்ஸ் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இதுதான் விலைகள் குறையப்போவதாக தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் அப்படியான திட்டங்கள் எதுவும் எங்களிடம் இல்லை என்று ஹேஸ்டிங்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இருப்பினும் மலேசியாவில் இருக்கும் இந்த மொபைல் ஒன்லி திட்டம் வெற்றியடைந்தால் முதலில் இந்தியாவுக்கு வந்து சேரதான் வாய்ப்புகள் அதிகம். அப்படிச் செய்வதுதான் அந்நிறுவனத்துக்கும் நல்லது.

ரீட் ஹேஸ்டிங்ஸ்

படம்: ரீட் ஹேஸ்டிங்ஸ்

இந்தியாவில் இது சாத்தியப்பட்டால் என்ன நடக்கும்?

தற்போது இந்தியாவில் இருக்கும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தா திட்டங்களின் விலை மிகவும் அதிகம். குறைந்தபட்சமாக 500 ரூபாயில் தொடங்கி 650, 800 ரூபாய் என மூன்று வடிவங்களில் வருகின்றன இந்தத் திட்டங்கள். 500 ரூபாய்க்கு ஒருவரும், 650 ரூபாய்க்கு இருவரும், 800 ரூபாய்க்கு நால்வரும் ஒரே நேரத்தில் சேவைகளை பெறலாம், பகிர்ந்துகொள்ளலாம். இதனால் இந்தியாவின் விலை உயர்ந்த ஸ்ட்ரீமிங் சேவையாக இருக்கிறது இது. இதன் போட்டி நிறுவனங்களான அமேசான் ப்ரைம் வீடியோ மாதம் 129 ரூபாயும், ஹாட்ஸ்டார் 199 ரூபாயும்தான் வசூலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தியாவில் இன்னும் மக்கள் பலரை தங்கள் தளத்துக்குக் கொண்டுவர இந்த மொபைல் ஒன்லி திட்டம் நெட்ஃப்ளிக்ஸிற்குப் பெரிய அளவில் உதவும். 2017-ல் நடந்த ஒரு கணக்கெடுப்பில் தற்போது இருக்கும் இந்த அதிக விலையிலேயே, மொத்த பணம் கட்டி ஸ்ட்ரீமிங் சேவை பெரும் இந்தியர்களில் கணிசமான மக்கள் நெட்ஃப்ளிக்ஸைத்தான் பயன்படுத்துகின்றனர் என்று தெரியவந்தது. எனினும், மொத்த இந்திய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் பின்தங்கியே இருக்கிறது. எனவே சுமார் 250 ரூபாய்க்குள் இந்த மொபைல் ஒன்லி பிளான்கள் இந்தியாவுக்கு வந்தால் கண்டிப்பாக புதிய வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கமுடியும். முக்கியமாக இந்தியாவில் பலரும் மொபைலைத்தான் வீடியோ பார்க்கும் சாதனமாகப் பயன்படுத்திவருகின்றனர். பலரும் ஸ்மார்ட் டிவிக்கு இன்னும் மாறவில்லை. எனவே இந்திய ஸ்ட்ரீமிங் சந்தையில் இருக்கும் பெரும் வாய்ப்புகளைக் கைப்பற்ற பெரும் முயற்சியுடன் இந்தியத் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தயாரிப்புகளை இரட்டிப்பு ஆக்கியுள்ள நெட்ஃப்ளிக்ஸிற்கு குறைந்த விலையில் மொபைல் ஒன்லி சேவைகளை கொண்டுவருவதற்கு இது சரியான நேரம் என்றுதான் சொல்லவேண்டும்.

Sacred Games

விலையை உயர்த்தி வைப்பதற்கு நெட்ஃப்ளிக்ஸ் சொல்லும் காரணம் என்ன?

இந்தியா என்றில்லை; ஆசியா முழுவதுமே நெட்ஃப்ளிக்ஸின் விலை பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்துகொண்டேதான் இருக்கின்றன. இருந்தும் என்றும் தங்கள் விலையைக் குறைப்பதைப் பற்றி யோசித்ததில்லை நெட்ஃப்ளிக்ஸ். இது தொடர்பான கேள்வி எழுப்புபவரிடம் தங்கள் விலை சரிதான் என்று நியாயப்படுத்தும் அந்நிறுவனம். இந்தியாவில் இருக்கும் நிலையைப் பற்றிப் பேசுகையில் CEO ஹேஸ்டிங்ஸ், ``இந்திய நெட்ஃப்ளிக்ஸின் மூன்று திட்டங்களிலும் இருக்கும் மக்களின் சதவிகிதம் அமெரிக்காவில் இருப்பதைப் போன்றுதான் இருக்கிறது. விலை அதிகம் என்றால் ஏன் மக்கள் குறைந்த கட்டணத்தைக் கொண்ட திட்டத்தை மட்டும் தேர்வு செய்யவில்லை? எனவே விலையில் பெரிய பிரச்னைகள் இருப்பதாகத் தெரியவில்லை. யூடியூப், கேபிள் போன்றவை விளம்பரங்களை நம்புகின்றன. ஆனால் நெட்ஃப்ளிக்ஸில் விளம்பரமே கிடையாது. மாதம் 2, 3 படங்கள் பார்த்தால் ஆகும் செலவில்தான் இத்தனை படங்கள் மற்றும் தொடர்களை நாங்கள் தருகிறோம்" என்று கூறினார். அவர் கூறுவது போல் உள்ளே இருக்கும் கன்டென்ட்தான் நெட்ஃப்ளிக்ஸின் யூஎஸ்பி. 

ஆனாலும் அமெரிக்காவின் சராசரி குடிமகனின் வருமானத்தில் பாதியென்ன, கால்வாசி கூட பெறமுடியாத இங்குக் கிட்டத்தட்ட அதே விலை வைத்தால் எப்படிச் சரிபட்டுவரும்? இந்தக் காரணத்தால்தான் நடுத்தரவர்க்க மக்களிடம் கூட சென்று சேர முடியாமல் தவிக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். ஆனால் அடுத்த பத்துக் கோடி வாடிக்கையாளர்கள் இந்தியாவில் இருந்துதான் வரப்போகிறார்கள் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது அந்நிறுவனம். இது சாத்தியமாக 'மொபைல் ஒன்லி' போன்ற திட்டங்கள்தாம் கைகொடுக்கமுடியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்