வெளியிடப்பட்ட நேரம்: 15:43 (16/11/2018)

கடைசி தொடர்பு:15:43 (16/11/2018)

'ஃபேஸ்புக் ஊழியர்களே, ஐபோன் யூஸ் பண்ணாதீங்க!' - மார்க் கூறியதற்குக் காரணம் என்ன?

சமீபத்தில், ஃபேஸ்புக் ஊழியர்கள் அனைவரும் ஐபோன்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, ஆண்ட்ராய்டு மொபைல்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார், அந்நிறுவனத்தின் CEO மார்க் சக்கர்பெர்க். இதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் ஃபேஸ்புக்கை சாடியதுதான் காரணம் எனச் செய்திகள் வரத்தொடங்கின. ஃபேஸ்புக் பயன்பாட்டாளரின் தகவல்களைப் பாதுகாக்கத் தவறியுள்ளது. அதைவைத்து லாபம் சம்பாதிக்கப்பார்க்கிறது. ப்ரைவசி, ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்றும், ஆப்பிளில் இது என்றும் நடக்காது என்றும் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார் அவர். 

ஃபேஸ்புக்

இதுதான் மார்க்கை கோபப்படுத்தியுள்ளதென்றும், அதுதான் இந்த முடிவுக்குக் காரணம் என்றும் 'நியூயார்க் டைம்ஸ்' உட்பட பல பிரபல அமெரிக்க ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இதற்கு, ஃபேஸ்புக் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது அறிக்கையில், "டிம் குக் எங்களது வணிகத் திட்டங்களை விமர்சிப்பது வழக்கம். அதற்குத் தவறாமல் மார்க்கும் விளக்கம் அளித்தே வருகிறார். இதனால் இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். நாங்கள் பல காலமாகவே ஆண்ட்ராய்டு மொபைல்கள் உபயோகிக்க வலியுறுத்திவருகிறோம். உலகில் அதிகம் பயன்படுத்தப்படுவது அதுதான் என்பதுதான் அதற்கு ஒரே காரணம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

என்னதான் மறுப்பு தெரிவித்திருந்தாலும், இரு நிறுவனத்துக்குமிடையேயான இந்த சர்ச்சை, டெக் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திவருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க