வெளியிடப்பட்ட நேரம்: 08:41 (17/11/2018)

கடைசி தொடர்பு:08:41 (17/11/2018)

கூகுள் முதல் வாட்ஸ்அப் வரை... ஆன்லைன் பிசினஸ் ஜெயிக்க இதெல்லாம் பண்ணுங்க!

சிறு கடையோ அல்லது பெரும் ஸ்டார்ட்அப்போ... எதுவாக இருந்தாலும் இன்றைய காலத்தில் இணையத்தில் அதன் வீச்சு இல்லையெனில் வெற்றியடைவது கடினம்தான். எப்படி உங்கள் பிசினஸை இணையத்தில் பிரபலப்படுத்துவது என யோசிக்கிறீர்களா? உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை.

கூகுள் முதல் வாட்ஸ்அப் வரை... ஆன்லைன் பிசினஸ் ஜெயிக்க இதெல்லாம் பண்ணுங்க!

ந்த டிஜிட்டல் உலகத்தில் முன்பு போல ஒரு தொழிலை பிரபலப்படுத்துவதற்கு வீதி வீதியாக போஸ்டர்கள், துண்டு சீட்டுகள் கொடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. டிஜிட்டலிலேயே உங்கள் தொழிலை பற்றி மக்களிடம் எடுத்துச்செல்லலாம். இன்றைய காலகட்டத்தில் ஒரு தொழிலுக்கு இது ஆடம்பரமானது அல்ல; அத்தியாவசியமானது. உங்கள் தொழிலை எப்படியெல்லாம் மக்களிடம் எடுத்துச்செல்லலாம் என்பதற்கான சில டிஜிட்டல் மார்க்கெட்டிங் டிப்ஸ். 

உங்கள் தொழிலை இணையத்தில் பதிவுசெய்க!

முதலில் நீங்கள் இப்படி ஒரு தொழில் செய்கிறீர்கள் என்பதைத் தெளிவாக அனைவருக்கும் தெரியப்படுத்தவேண்டும். அதற்கு உங்கள் ஏரியாவில் இருக்கும் ஆன்லைன் பிசினஸ் டைரக்டரிகளில் உங்கள் தொழிலின் பெயர், தொடர்பு எண், முகவரி போன்றவற்றை பதிவுசெய்யுங்கள். பொதுவாக உங்கள் தொழில்தொடர்பாக தேடும் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் இருப்பது தெரிய இது ஓர் எளிய வழி. இதை Just-dial, Sulekha, yellow-pages போன்ற பிரபல தளங்களில் முதலில் செய்யுங்கள்.

கூகுள் மை பிசினஸ் 

கூகுளில் ஒரு கடையை தேடினாலே, ஒரு தொழிலைத் தேடினாலோ வரும் பக்கத்தின் ஒரு புறத்தில் அதைப்பற்றிய தகவல்கள் மற்றும் மேப்பில் அது இருக்கும் இடம் ஆகியவை வருவதைப் பார்த்திருப்பீர்கள். இதை நீங்கள் தொடங்கியிருக்கும் தொழிலிற்கும் கொண்டுவரலாம். இதற்கு 'கூகுள் மை பிசினஸ்' என்ற தளத்தில் உங்கள் தொழிலை பதிவுசெய்யுங்கள். உங்கள் தகவல்களை கொடுங்கள், கூகுள் மேப்ஸில் உங்களது இடம் இல்லை என்றால் அதைச்சேருங்கள். வேலை நேரம், விடுமுறைகள் எனக் கேட்கப்படும் மற்ற அனைத்தையும் பதிவிடுங்கள். உங்களது தகவல்களின் உண்மைத்துவத்தை சோதனை செய்து உங்கள் தொழிலை சேர்த்துக்கொள்ளும் கூகுள். இதன்மூலம் கூகுள் தேடல்களில் உங்கள் தொழிலின் பெயரும் வரும். இதில் மாற்றங்களும் அவ்வப்போது நீங்களே செய்துகொள்ளமுடியும். இதற்கென்றே செயலி ஒன்றையும் வைத்திருக்கிறது கூகுள். அதையும் நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கூகுள் ஆன்லைன் பிசினஸ்

சமூகவலைதளங்களில் பக்கம் ஆரம்பிக்கலாம்!

இன்று மக்களை எளிதாகச் சென்றுசேருவதற்கு சமூகவலைதளங்களை விடச் சிறந்த வழி எதுவுமே கிடையாது. உங்களது தொழிலின் பெயரில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் கணக்குகள் தொடங்குங்கள். தகவல்களைச் சரியாக கொடுக்கத் தவறாதீர்கள். உங்களது தொழில் தயாரிப்பு சார்ந்தது என்றால் அந்த பொருளின் படங்களையும், சேவையென்றால் உங்கள் இடத்தின் படங்களையும் பதிவுசெய்யுங்கள். இதற்காகப் பெரிய புகைப்படக்கலைஞர்களை அழைக்கவேண்டும் என்ற அவசியம் இல்லையென்றாலும், நல்ல புகைப்படங்களாக எடுத்து பதிவுசெய்வது நல்லது. வீடியோவாக எடுக்கமுடிந்தால் கூடுதல் சிறப்பு. இந்தப் படங்கள், மற்றும் வீடியோக்களை கூகுள் மேப்ஸிலும் உங்கள் இடத்தின் கீழ் பதிவுசெய்யுங்கள். இப்போது 360 டிகிரியில் எடுக்கப்பட்ட போட்டோ, வீடியோக்கள் எடுத்துப் பதிவுசெய்யமுடியும். இவை வாடிக்கையாளர்களுக்கு உங்கள் தொழிலை பற்றி இன்னும் ஒரு தெளிவான பார்வையைக் கொடுக்கும். சமூகவலைதளங்களில் அவ்வப்போது சலுகைகள் மற்றும் சிறப்பு சேவைகளைப் பற்றி பதிவுசெய்யவும். வெறுமனே பெயருக்கென்று கணக்கு வைத்திருக்காமல் உங்கள் பதிவுகளில் மக்களை ஈடுபாட்டுடன் பங்குபெறச் செய்யுங்கள். மேலும் விளம்பரங்களையும் இந்தச் சமூகவலைதளங்களில் கொடுக்கமுடியும்.

social media

வாட்ஸ்அப் பிசினஸ் 

வாடிக்கையாளர்களிடம் பேசுவதற்கென்றே சிறப்பாக 'வாட்ஸ்அப் பிசினஸ்' என்ற செயலியை கொடுக்கிறது வாட்ஸ்அப். இதில் சாதாரண சாட்டிங்கை தாண்டிப் பல சிறப்பு பிசினஸ் வசதிகளையும் தருகிறது வாட்ஸ்அப். வாடிக்கையாளர்களிடம் சரியான தொடர்பை நிலைநிறுத்த இது மிகவும் உதவும். இந்த தொடர்பு நல்ல ஒரு நிறுவனத்திற்கு மிகவும் முக்கியம்.

Whatsapp

இணையதளம் ஒன்று ஆரம்பிக்கலாம்!
 
இது மட்டும் போதாது அடுத்தகட்டம் போகவேண்டும் என்று எண்ணினால் இணையதளம் ஆரம்பிப்பதுதான் ஒரே வழி. இதை ஏதேனும் மென்பொருள் நிறுவனத்திடம் கொடுத்து உருவாக்கச் சொல்லலாம். இதில் தேவையான தகவல்கள், படங்கள், தொடர்பு வசதிகள் என அனைத்தையும் குறிப்பிட மறக்காதீர்கள். 'Contact us' பகுதி மிகமுக்கியம். SEO, SEM பற்றி நன்றாகத் தெரிந்தவர்களிடம் இதைக் கொடுப்பது நல்லது. அப்போது தான் உங்கள் தளம் கூகுள் போன்ற தளங்களில் தேடும்போது முதலில் வரும். இன்னும் ஒருபடி மேலே சென்றால் இணையதளம் கூடவே ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வசதியையும் செயலி ஒன்றையும் உருவாக்கலாம். ஒரு நல்ல feedback சிஸ்டமும் மிக முக்கியம். இதுதான் நீங்கள் செய்யும் தவறுகள் என்னவென்று உங்களிடமே எடுத்துக்கூறும். அப்போதுதான் அதைத் திருத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். மேலும் கூகுள் Adwords போன்ற தளங்களில் விளம்பரமும் செய்யலாம்.

தொழில் தொடங்குபவர்கள் டிஜிட்டலில் என்னென்ன செய்யவேண்டும் என்பதை விளக்கும் 'Digital Unlocked' என்ற கோர்ஸ் ஒன்றையும் வைத்திருக்கிறது கூகுள். இதில் மேலே கூறப்பட்டவை இன்னும் தெளிவாகவும் மற்றும் பல விஷயங்கள் நல்ல உதாரணங்களுடன் கற்றுத்தரப்படும். வெற்றிகரமாகப் 26 பிரிவுகளையும் படித்து முடித்துவிட்டால் கூகுளின் சான்றிதழும் உங்களுக்குக் கிடைக்கும். நிஜத்தில் மட்டும் ரிப்பன் வெட்டிக் கடைதிறந்தால் போதாது; இப்படி டிஜிட்டலிலும் கடையைத் திறந்தாக வேண்டிய காலம் இது. எனவே அங்கும் உடனடியாக உங்கள் தொழிலை நிலைநிறுத்தி வெற்றிகாணுங்கள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்