`பதவி விலகுவாரா மார்க் சக்கர்பெர்க்?’ - அதிகரிக்கும் ஃபேஸ்புக் முதலீட்டாளர்களின் அழுத்தம் | Investors pressurise Facebook CEO and Head Mark to resign

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (17/11/2018)

கடைசி தொடர்பு:17:10 (17/11/2018)

`பதவி விலகுவாரா மார்க் சக்கர்பெர்க்?’ - அதிகரிக்கும் ஃபேஸ்புக் முதலீட்டாளர்களின் அழுத்தம்

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் தலைவரும் CEO-வுமான மார்க் சக்கர்பெர்க் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென முதலீட்டாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்திய சர்ச்சைகள்தான் இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி ரிபப்ளிக்கன் கட்சிக்குச் சொந்தமான அரசியல் ஆலோசனை மற்றும் மக்கள் தொடர்பு நிறுவனத்துக்குப் பணம் கொடுத்து போட்டி நிறுவனங்களைப் பற்றி அவதூறு பரப்பியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

ஃபேஸ்புக்

``ஃபேஸ்புக், தான் ஏதோ விசேஷமான நிறுவனம் போன்று நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், இதுவும் ஒரு பொது நிறுவனம்தான். தலைமைக்கும் செயல் துறைக்கும் ஒரு பிரிவு இருக்க வேண்டும்’’ என்றார் கணிசமான அளவிலான பங்குகளை வைத்திருக்கும் ஜோனாஸ் க்ரோன். இவர் Trillium Asset Management என்ற நிறுவனத்தின் துணைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இரண்டையும் ஒரே ஆள் பார்த்துக்கொள்ளும்போது, தவறுகளை வேண்டுமென்றே மறைக்க முடியும் என்று கூறுகிறார் அர்ஜுனா கேப்பிடல் நிறுவனத்தைச் சேர்ந்த மற்றுமொரு முதலீட்டாளரான நடாஷா லாம்ப்.

ஆனால், ஃபேஸ்புக் தரப்பில் நியூயார்க் டைம்ஸ் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 2017-க்குப் பிறகு நேற்று பங்குச்சந்தையில் பெரிய வீழ்ச்சியைக் கண்டது ஃபேஸ்புக். 3% குறைந்து $139.53-ல் இருக்கிறது அதன் விலை. இந்த அழுத்தங்களால் மார்க் பதவி விலகுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க