வெளியிடப்பட்ட நேரம்: 09:54 (25/11/2018)

கடைசி தொடர்பு:12:41 (25/11/2018)

செம அப்டேட் கேமரா, நாட்ச் டிசைன்... ரெட்மி நோட் 6 புரோவில் என்ன ஸ்பெஷல்? #RedmiNote6Pro

இதற்கு முந்தைய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சந்தையைக் கலக்கியதைப் போல ரெட்மி நோட் 6 புரோவும் ஹிட்டாகுமா?

செம அப்டேட் கேமரா, நாட்ச் டிசைன்... ரெட்மி நோட் 6 புரோவில் என்ன ஸ்பெஷல்? #RedmiNote6Pro

ரெட்மி நோட் 6 புரோ என்ற புதிய ஸ்மார்ட்போனை கடந்த 22-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷியோமி. ஏற்கனவே தாய்லாந்து போன்ற சில வெளிநாடுகளில் விற்பனைக்கு வந்து விட்ட இந்த ஸ்மார்ட்போன் தற்பொழுது இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் போனின் முந்தைய வெர்ஷனான ரெட்மி நோட் 5 கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் ஒன்பது மாதங்களைக் கடந்த பிறகும் கூட இன்றைக்கும் சந்தையில் மோஸ்ட் வான்டட் மொபைலாக இருக்கிறது. இந்நிலையில்தான் நோட் சீரிஸில் ரெட்மி நோட் 6 புரோ என்ற ஸ்மார்ட்போனை புதிதாக களமிறக்கியிருக்கிறது ஷியோமி. ஷியோமிக்கு இந்திய மார்கெட்டில் பெயர் பெற்றுத் தந்ததில் நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு முக்கிய இடமுண்டு. அதன் காரணமாகவே ஒவ்வொரு முறை நோட் சீரிஸில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் போது அதில் கூடுதல் கவனம் செலுத்தும். இந்த முறையும் பல்வேறு புதிய அப்டேட்களுடன் வெளியாகியிருக்கும் ரெட்மி நோட் 6 புரோவில் என்ன ஸ்பெஷல்?

கேமரா... கேமரா... கேமரா மட்டும்தான் பாஸ் 

ரெட்மி நோட் 6 புரோ

என்ன ஸ்பெஷல் என்று பார்த்தால், 'இதுல கேமராதான் செம மாஸ்' என்கிறது ஷியோமி. இந்த செக்மென்ட்டைப் பொறுத்தவரையில் ஷியோமி ஸ்கோர் செய்யும் விஷயம் அதுதான். மற்ற நிறுவனங்கள் டிஸ்ப்ளே, பேட்டரி, புராஸசர் எனப் பல்வேறு வசதிகளில் அள்ளிக் கொடுத்தாலும் கேமரா விஷயத்தில் மட்டும் கை வைத்து விடுவார்கள். ஆனால் ஷியோமி அப்படிக் கிடையாது. எப்பொழுதுமே கேமரா மட்டும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கிறது. அதனால்தான் ரெட்மி நோட் 6 புரோவில் கேமரா என்ற விஷயத்தைக் கொஞ்சம் கூடுதலாகக் கவனித்திருக்கிறது. ரெட்மி நோட் 5 புரோவைப் போலவே 12 + 5 மெகாபிக்ஸல் பின்புற கேமரா இதிலும் இருக்கிறது. ஆனால் சென்சாரின் பிக்ஸல் திறனைச் சற்று அதிகரித்திருப்பதால் இன்னும் தெளிவான போட்டோக்களை எடுக்க முடியும். அதேபோல 12 + 2 மெகாபிக்ஸல் முன்புற கேமராவும் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது. இதுவும் ரெட்மி நோட் 5 புரோவுடன் ஒப்பிடும் போது கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆக மொத்தம் இந்த போனில் மொத்தம் நான்கு கேமராக்கள் இருக்கின்றன. இந்த கேமராக்களின் மூலமாக எடுக்கப்படும் போட்டோக்களின் தரத்தை மேம்படுத்த AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறோம் என்கிறது ஷியோமி. இதன் மூலமாக எடுக்கப்படும் சூழலுக்கு தகுந்தவாறு போட்டோக்களை இந்தத் தொழில்நுட்பம் மேம்படுத்தும். மேலும் Portrait மோட்களில் எடுக்கப்படும் செல்ஃபிகளுக்கென கூடுதல் எபெக்ட்களை இந்த AI தொழில்நுட்பம் கொடுக்கிறது. 

அதே பேட்டரி... அதே புராசஸர் 

ரெட்மி

கேமரா தவிர்த்து ரெட்மி நோட் 6 புரோவில் அப்டேட் செய்யப்பட்டுள்ள மற்றொரு விஷயம் டிஸ்ப்ளே. கடந்த முறையே ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் நாட்ச் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் அதில் கொடுக்கப்படவில்லை. ஆனால் இந்த முறை டிஸ்ப்ளேவில் நாட்ச் இடம் பெற்றிருக்கிறது. மேலும் இதில் உள்ள டிஸ்ப்ளே 6.26 இன்ச் அளவும் 19:9 ரேஷியோ கொண்டதாகவும் இருக்கிறது. வடிவமைப்பிலும் பெரிய அளவில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. பின்புறம் மட்டும் சற்று வளைவான வடிவமைப்பாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேமராவைப் போலவே ஷியோமியின் மற்றொரு பலம் அதன் பேட்டரி. ரெட்மியின் நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இதற்கு முன்னர் 4000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கும். அதை இந்தத் தடவையும் மாற்றம் செய்ய விரும்பவில்லை.எனவே இதிலும் அதே அளவு பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 6 புரோ

கூடுதலாக Quick Charge 3.0 என்ற வேகமான சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இது மொபைலை முன்பை விடக் குறைவான நேரத்தில் சார்ஜ் செய்ய உதவும். ஆனால் அதற்கான சார்ஜர் இந்த மொபைலுடன் கொடுக்கப்படுவதில்லை. தேவைப்பட்டால் சார்ஜரை தனியாக வாங்கிக் கொள்ளலாம். இரண்டு சிம்களுக்கும் VoLTE- வசதி இருக்கிறது. கூடுதலாக Wi-Fi Passthrough என்ற வசதி மூலமாக மொபைல் இன்டர்நெட்டை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொள்வதைப் போல, வைஃபை-யையும் பகிர்ந்து கொள்ளலாம். ரெட்மி நோட் 5 புரோவில் இருந்த அதே ஆக்டாகோர் ஸ்னாப்ட்ராகன் 636 புராசஸர் இதிலும் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. 6 GB ரேம் 64 GB இன்டர்னல் மெமரி மாடல் 15,999 ரூபாய்க்கும் மற்றும் 4 GB ரேம் 64 GB இன்டர்னல் மெமரி மாடல் 13,999 ரூபாய்க்கும் கிடைக்கும்.


டிரெண்டிங் @ விகடன்