நம் டிக்கெட்டை வேறொருவர் பெயருக்கு மாற்றலாம்... எப்படி? - IRCTC டிப்ஸ்! | Things to know about IRCTC ticket booking

வெளியிடப்பட்ட நேரம்: 08:38 (27/11/2018)

கடைசி தொடர்பு:12:58 (27/11/2018)

நம் டிக்கெட்டை வேறொருவர் பெயருக்கு மாற்றலாம்... எப்படி? - IRCTC டிப்ஸ்!

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் அடிக்கடி டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கூட இதைக் கவனித்திருக்க மாட்டார்கள்.

நம் டிக்கெட்டை வேறொருவர் பெயருக்கு மாற்றலாம்... எப்படி? - IRCTC டிப்ஸ்!

யில்வே முன்பதிவென்றாலே இன்று பெரும்பாலும் ஆன்லைன்தான் என்றாகிவிட்டது. இதற்கான முன்பதிவு தளமான IRCTC தளத்திலும், ரயில் முன்பதிவு பற்றியும் ஓரளவு அனைவருக்கும் பரிச்சயம் இல்லாத சில வசதிகளைப் பற்றி பார்ப்போம்.

உங்கள் ரயில் டிக்கெட்டை இன்னொருவருக்கு மாற்ற முடியுமா?

முடியும், ஆனால் அவர் உங்களது தந்தை, தாய், மனைவி/கணவர், சகோதரர், சகோதரி ஆகிய உறவுகளில் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் இதை IRCTC இணையதளத்தில் செய்யமுடியாது. அருகில் உள்ள ரயில்நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்துக்குச் சென்றுதான் இதைச் செய்யமுடியும். ரயில் புறப்படும் நேரத்திலிருந்து 24 மணிநேரங்களுக்கு முன் உங்களது இ-டிக்கெட்டை பிரிண்ட் செய்து (electronic reservation slip) அதையும், உங்களது ID ப்ரூஃப் ஏதேனும் ஒன்றையும், மாற்ற நினைப்பவருக்கும் உங்களுக்குமான உறவை உறுதிசெய்யும் ஏதேனும் ஓர் ஆவணத்தையும் அங்கு கொடுத்தால் உங்கள் டிக்கெட் அவர் பெயருக்கு மாற்றித்தரப்படும். பணிக்காகப் பயணம் செய்யும் அரசு ஊழியர்களுக்கும் டிக்கெட்டை இன்னொருவருக்கு மாற்றச் சிறப்பு அனுமதி உண்டு.

டிக்கெட்டில் எழுத்துப்பிழை ஆகிவிட்டால் என்ன செய்வது?

ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போது சிறிய எழுத்துப்பிழைகள் ஏற்பட்டுவிட்டால் கவலைகொள்ளவேண்டாம், டிக்கெட் பரிசோதனையாளரால் அதை மாற்றிக்கொள்ளமுடியும். ஆனால், அதற்கென்று பெயரே வேறு பெயராக தெரியும் அளவுக்குப் பிழை இருத்தல் கூடாது. இதைப்போன்ற விஷயங்களில் டிக்கெட் பரிசோதனையாளர் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. பெயர் வேறாக இருந்தால் நீங்கள் டிக்கெட் இல்லாமல் பயணித்ததாகதான் எடுத்துக்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரீமியம் தட்கல் 

தட்கல் ரயில் டிக்கெட்கள் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது ரயில் புறப்படும் நாளுக்கு முந்தைய நாள் கொடுக்கப்படும், இதனுடன் பிரீமியம் தட்கல் என்ற பிரிவு டிக்கெட்களும் கொடுக்கப்படும். ஆனால், பிரீமியம் தட்கல் என்றால் என்னவென்று புரியாமல் அதை அப்படியே விட்டுவிடுவர். பிரீமியம் தட்கல் என்றால் என்ன? இதற்கும் சாதாரண தட்கலுக்கும் இருப்பது ஒரே ஒரு வித்தியாசம்தான். தட்கலுக்கு வசூலிக்கப்படும் சிறப்பு கட்டணத்துடன் பிரீமியம் தட்கல் டிக்கெட்களுக்கு 'Dynamic Fare' என்ற கட்டணமும் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணம் என்பது மக்கள் டிக்கெட் எடுக்க எடுக்க அதிகரிக்கும். அதாவது 120 டிக்கெட்கள் பிரீமியம் தட்கல் பிரிவில் விற்கப்படுகிறது என்றால் முதல் சில டிக்கெட்கள் எடுப்பவர்களுக்கு 'Dynamic Fare' இருக்காது. பின் அது ஏறிக்கொண்டே இருக்கும். கடைசி சில டிக்கெட்கள் மட்டும் மீதமிருக்கும்போது மிக அதிகமாக இருக்கும் டிக்கெட்டின் விலை. எனவே தட்கல் டிக்கெட்கள் கொடுக்கும் நேரத்தில் சரியாக முன்பதிவு செய்தால் டிக்கெட் விலை சாதாரணமாக இருக்கும், தட்கலுக்கு பதில் இதையும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். மேலும் அவசரமாக ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை வருகையில் பிரீமியம் தட்கல் பிரிவில் டிக்கெட் இருக்கிறதா என்று பார்க்கலாம். பல நேரங்களில் சார்ட் ரெடி ஆகும் முன்வரை இதில் டிக்கெட் இருக்கும். ஆனால், விலை அதிகமாக இருக்கும். இது அவசர வேளைகளில் கூடுதல் விலை என்றாலும் பரவாயில்லை என்று இருக்கும்போது உதவும்.

ரயில் முன்பதிவு - ஆன்லைன் டிக்கெட்

'Auto Upgradation'

ஸ்லீப்பர் டிக்கெட் எடுத்து ஏசியில் பயணிக்க விருப்பமா? அதற்கும் வாய்ப்பளிக்கிறது IRCTC. நீங்கள் ஸ்லீப்பரில் முன்பதிவு செய்யும்போது 'Consider for Auto Upgradation' என்ற செக்பாக்ஸை டிக் செய்திருந்தால் உங்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டலாம். அதாவது நீங்கள் ஸ்லீப்பர் முன்பதிவு செய்து சார்ட் தயார் செய்யும்போது ஏசி கோச்சில் காலி இடங்கள் இருந்தால் உங்கள் டிக்கெட் ஏசி கோச்சிற்கு மாற்ற வாய்ப்புண்டு. 

AutoUpgrade - IRCTC

Cash on Delivery 

அமேசான், ஃபிளிப்கார்ட்டை போன்று ரயில் டிக்கெட்டையும் வீட்டில் 'Cash on Delivery'-யாக பெறமுடியும். BookmyTrain என்ற செயலி மூலம் இதைச் செய்யலாம். சமீபத்தில்தான் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதால் சில ஊர்களில்தான் இந்த வசதி இருக்கும். மேலும் வாடிக்கையாளர்கள் சிலருக்கு செயலி சரியாக வேலை செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே, உங்களுக்குச் சரியாக வேலை செய்கிறதென்றால் ரயில் புறப்படுவதற்கு ஐந்து நாள்கள் முன் வரை இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளமுடியும். உங்களிடம் பணம் பெறமுடியவில்லை என்றால் நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட் ரத்து செய்யப்படும்.

COD

ரயில் ஏறும் இடத்தை மாற்றலாம்!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தபின் ஏதேனும் காரணங்களால் நீங்கள் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் ஏறமுடியாது என்ற நிலை ஏற்பட்டால் உங்களால் வழியில் இருக்கும் இன்னொரு ரயில்நிலையத்திற்கு மாற்றமுடியும். ரயில் புறப்படுவதற்கு 24 மணிநேரங்களுக்கு முன் இதை செய்யவேண்டும். உங்களது 'Booking History' சென்று உங்கள் டிக்கெட்டை தேர்வு செய்து 'Change boarding station' என்ற ஆப்சனை தேர்வு செய்து உங்களுக்கு வேண்டிய ரயில் நிலையத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். 

​​​​​​​Boarding

இதில் சிலவற்றை நீங்கள் ஏற்கெனவே அறிந்து இருக்கவும் கூடும், இதைத்தவிர ரயில் முன்பதிவு பற்றி இப்போது தெரிந்துகொண்ட வசதிகளையும் தேவையென்றால் பயன்படுத்திப் பயன்பெறவும். மேலும் பல வசதிகள் பற்றி தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close