வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (28/11/2018)

கடைசி தொடர்பு:07:28 (28/11/2018)

நொடிக்கு 27 ஜிபி... டோகோமோ, மிட்சுபிஷி நடத்திய பரிசோதனையில் அசரடித்த 5G வேகம்

 

5G

அடுத்த வருடம் உலகம் முழுவதும் 5G தொழில்நுட்பம் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் அடுத்த வருடம் 5G-யில் இயங்கும் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவோம் என அறிவித்திருக்கின்றன. பல நெட்வொர்க் நிறுவனங்கள் முன்னோட்டமாக 5G தொழில்நுட்பத்தைப் பரிசோதித்து வருகின்றன. அப்படி நடத்தப்பட்ட பரிசோதனை முயற்சி ஒன்றில் நொடிக்கு 27 ஜிபி என்ற அளவை எட்டியிருக்கிறது இணைய வேகம். ஜப்பானிய தொலைத்தொடர்பு நிறுவனமான NTT டோகோமோவும், மிட்சுபிஷி எலெக்ட்ரிக் நிறுவனமும் இணைந்து இந்தச் சோதனையை நடத்தியிருக்கின்றன. காமகுரா (Kamakura) என்ற இடத்தில் திறந்த வெளியில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.


டோகோமோ

காரில் பொருத்தப்பட்டிருந்த மொபைல் டெர்மினலுக்கு அதிகபட்சமாக 100 மீட்டர் தொலைவில் 25Gbps என்ற அளவிலும் 10 மீட்டர் தொலைவில் 27Gbps என்ற அளவிலும் இணைய வேகம் கிடைத்திருக்கிறது. ஆண்டெனா கட்டடம் ஒன்றின் சுவர் பகுதியிலும் மொபைல் டெர்மினல் ஆண்டெனா காரின் மேற்கூரைப் பகுதியிலும் பொருத்தப்பட்டிருந்ததாக டோகோமோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் இதுதான் இதுவரை நடத்தப்பட்ட 5G பரிசோதனைகளில் எட்டப்பட்ட அதிகபட்ச வேகம் எனவும் டோகோமோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.