வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (28/11/2018)

கடைசி தொடர்பு:14:30 (28/11/2018)

``இதை நிறுத்தியே ஆகணும்!" - கூகுள் நிறுவனத்துக்கு ஊழியர்களின் கடிதம்

சீனா கட்டுப்பாட்டுக்கு உடன்பட்டால் வருங்காலத்தில் பிறநாடுகளிடமிருந்தும் இதேபோல கோரிக்கைகள் எழும் என `டிராகன்ஃப்ளை புராஜெக்ட்'டிற்கு கூகுள் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கூகுள்

சீனாவில் விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகளாலும், திட்டமிட்டு நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களாலும் 2010-ல் அங்கிருந்து தன்னுடைய சர்ச் இன்ஜின் சேவையை முழுமையாக நிறுத்தியது கூகுள். இந்நிலையில், தற்போது அந்நாட்டு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு டிராகன் ஃப்ளை என்னும் புதிய சர்ச் இன்ஜின் ஒன்றை உருவாக்கி வருகிறது அந்நிறுவனம். இதன்படி அந்நாட்டு மக்களுக்குப் பிற நாடுகளில் இருப்பதுபோல அனைத்துத் தகவல்களும், கூகுளில் காட்டப்படாது. மாறாக, அரசால் அனுமதிக்கப்பட்ட செய்திகள் மட்டுமே காட்டப்படும். மேலும், கூகுள் பயனர்களின் தகவல்களையும் அந்நாட்டு அரசு கேட்டால் தரவேண்டியதிருக்கும். சர்ச்சைக்குரிய இந்த `டிராகன்ஃப்ளை புராஜெக்ட்'டிற்குப் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பிவருகின்றன. கடந்த சில மாதங்களாகவே கூகுளின் ஊழியர்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், நேற்று கூகுளின் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒன்றிணைந்து, இந்தத் திட்டத்துக்கு எதிராக அந்நிறுவனத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், ``கூகுள் சீனாவின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக 2010-ல் என்ன நிலைப்பாடு எடுத்ததோ, அதையே மீண்டும் எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோம். இந்த எதிர்ப்பு சீனாவுக்கு எதிரானது அல்ல; இணையத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும் என நினைக்கும் எண்ணத்துக்கு எதிரானது மட்டுமே. ஒருவேளை கூகுள், சீனாவில் இதனை அமல்படுத்திவிட்டால் வருங்காலத்தில் பிறநாடுகளிடமிருந்தும் இதேபோல கோரிக்கைகள் எழும். அப்போது கூகுள் அவற்றை மறுக்கமுடியாது. இது இணையக் கருத்துரிமைக்கே எதிரானதாக முடியும்" எனத் தெரிவித்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க