வெளியிடப்பட்ட நேரம்: 13:21 (01/12/2018)

கடைசி தொடர்பு:13:21 (01/12/2018)

'2.0' ரியல்மீ ப்ரோ & '3.0' ரியல்மீ U1... இரண்டில் எதை வாங்கலாம்?

Realme 2 Pro ஸ்மார்ட்போனைப் போலவேவடிவமைக்கப்பட்டிருக்கிறது ரியல்மீ U1. இரண்டிற்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசங்களும் இல்லை

'2.0' ரியல்மீ ப்ரோ & '3.0' ரியல்மீ U1... இரண்டில் எதை வாங்கலாம்?

று மாதங்களுக்கு முன்னால்தான் முதன்முதலாக இந்திய சந்தையில் கால் பதித்தது ரியல்மீ நிறுவனம். அதற்குள்ளாக நான்கு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி விட்டது. மிகக் குறுகிய காலத்திற்குள் பெரிய அளவில் வளர்ச்சியடைந்திருக்கிறது. சந்தையில் இருக்கும் தேவை அறிந்து அதற்கேற்ப ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதுதான் அதற்குக் காரணம். ஷியோமியைப் போலவே ஒரு திட்டத்தோடுதான் செயல்படுகிறது ரியல்மீ. இருபதாயிரம் ரூபாய்க்குக் குறைவான ஸ்மார்ட்போன்களை மட்டுமே இதுவரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்னால் ரியல்மீ U1 என்ற ஸ்மார்ட்போனை புதிதாகச் சந்தைக்கு கொண்டு வந்திருக்கிறது. இன்றைக்கு மொபைலில் செல்ஃபி எடுப்பதையே பலரும் விரும்புகிறார்கள். அதனால் இப்பொழுது வெளியாகும் பெரும்பாலான மொபைல்கள் அதற்கேற்றவாறே வடிவமைக்கப்படுகின்றன. ரியல்மீ U1 ஸ்மார்ட்போனிலும் முன்புற கேமராவிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 

25 MP முன்புற கேமரா... Helio P70 புராஸசர்

ரியல்மீ U1

கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Realme 2 Pro ஸ்மார்ட்போனைப் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது ரியல்மீ U1. இரண்டிற்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசங்களும் இல்லை. முந்தைய ஸ்மார்ட்போனைப் போலவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவிலும் நாட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. டிஸ்ப்ளேவின் அளவும் மாற்றம் செய்யப்படவில்லை அதே 6.3 இன்ச் 19.5:9 ரேஷியோ டிஸ்ப்ளேதான். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டு விஷயங்கள்தான் மாற்றப்பட்டிருக்கின்றன. ஒன்று இதிலிருக்கும் புராஸசர், மற்றொன்று இதில் இருக்கும் கேமரா. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை எடுத்துக் கொண்டால் சந்தையில் குவால்காம் நிறுவனத்தின் ஆதிக்கமே அதிகம். ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலும் ஸ்னாப்டிராகன் புராஸசர்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விலை சற்று அதிகம் என்றாலும் வேகம், திறன் போன்றவற்றின் காரணமாக ஸ்னாப்டிராகன் புராஸசர்கள் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

ரியல்மீ

பட்ஜெட் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் வரை இதன் பயன்பாடு அதிகம்தான். ரியல்மீ நிறுவனம் இதற்கு முன்பு வெளியிட்ட மூன்று ஸ்மார்ட்போன்களில் இரண்டில் இருப்பது ஸ்னாப்டிராகன் புராஸசர்கள்தான். குவால்காமுக்கு அடுத்தபடியாக இருப்பது மீடியாடெக் நிறுவனம். இந்த நிறுவனத்தின் புராஸசர்களை சில நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்துகின்றன. இந்நிலையில் ரியல்மீ U1 ஸ்மார்ட்போனில் மீடியாடெக்கின் Helio P70 புராஸசரை இதில் பயன்படுத்தியிருக்கிறது ரியல்மீ. இந்த புராஸசர் முதன்முதலாக இந்த ஸ்மார்ட்போனில்தான் அறிமுகப்படுத்தப்படுகிறது.

 ரியல்மீ U1

அதற்கடுத்ததாக முன்புற கேமரா, Realme 2 Pro-வில் இருப்பது 16 MP கேமராதான். ஆனால் இதில் 25 MP முன்புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இது சிறப்பான தரத்தில் செல்ஃபி எடுக்க ஏற்றதாகவே இருக்கும். ஆனால் அதே நேரத்தில் பின்புற கேமராவில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தையும் கவனிக்க வேண்டும். Realme 2 Pro-வில் இருந்த 16 MP+ 2 MP கேமராவிற்கும் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் 13+2 MP கேமராவுக்கும் நிறைய மாற்றங்கள் உள்ளன. முந்தையதில் இருந்த மெயின் கேமராவில் PDAF (Phase Detection Auto Focus) வசதி இருந்தது, ஆனால் இதில் வெறும் AF (Auto Focus ) மட்டும்தான். மேலும் அபெர்ச்சரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. 3500 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 3 GB ரேம் + 32 GB இன்டெர்னல் மெமரி வேரியன்ட் 11,999 ரூபாய்க்கும், 4 GBரேம்+64 GB இன்டெர்னல் மெமரி வேரியன்ட் 14,499 ரூபாய்க்கும் விற்பனைக்கு வருகிறது. நீலம், கோல்டு மற்றும் கறுப்பு என மூன்று நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். 14,499 ரூபாய் என்பது கிட்டத்தட்ட Realme 2 Pro-வின் விலையை நெருங்கி விடுகிறது. எனவே இதை வாங்க முடிவு செய்திருப்பவர்களுக்கு Realme 2 Pro-வா அல்லது Realme U1-னா என்ற குழப்பம் வரக்கூடும். Realme 2 Pro-வில் பயன்படுத்தப்பட்டுள்ள Snapdragon 660-ஐ விட Helio P70 சற்று திறன் கூடிய புராஸசர்தான். முன்புற கேமராவின் திறன் கூட அதிகம்தான். ஆனால் விலை மற்றும் பின்புற கேமரா போன்ற விஷயங்களை வைத்துப் பார்த்தால் Realme 2 Pro-வே சிறந்த தேர்வாக இருக்கும். முன்னர் சொன்னதைப் போலவே செல்ஃபிக்கு மட்டும் என்றால் ரியல்மீ U1-னை வாங்கலாம்.


டிரெண்டிங் @ விகடன்