'டிராயின் கட்டளைக்கு அடிபணிந்த ஆப்பிள்' -செயல்பாட்டுக்கு வந்தது DND ஆப் | Apple allows DND app on App Store

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (02/12/2018)

கடைசி தொடர்பு:05:30 (02/12/2018)

'டிராயின் கட்டளைக்கு அடிபணிந்த ஆப்பிள்' -செயல்பாட்டுக்கு வந்தது DND ஆப்

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டளைக்கு பல மாத இழுத்தடிப்பிற்குப் பிறகு பணிந்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

ஆப்பிள்

‘Do Not Disturb’ என்ற வசதியைக் கட்டாயமாக அனைத்துப் பயனாளர்களுக்கும் கட்டாயமாகத் தர வேண்டும் என்பது டிராயின் நிபந்தனைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. DND வசதியில் பதிவு செய்வதன் மூலமாக மொபைலுக்கு வரும் வியாபாரம் தொடர்பான தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை தடுக்க முடியும். இதற்கான ஆப் ஏற்கெனவே ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கென அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதைப் போல ஒர் ஆப்பை ஐஓஸ் இயங்குதளத்தில் இயங்கும் ஐபோன்களுக்காகவும் கொண்டு வர வேண்டும் என டிராய் ஆப்பிள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

ஆனால் தொடக்கம் முதலே இந்த விஷயத்தில் முரண்டு பிடித்தது ஆப்பிள் நிறுவனம். டிராய் உருவாக்கிய ஆப்பை அதன் ஆப் ஸ்டோரில் அனுமதிக்க ஆப்பிள் நிறுவனம் மறுத்து விட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது டிராய். அதில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் DND ஆப் செயல்படும் வகையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும், அப்படி மாற்றம் செய்யப்படாத ஸ்மார்ட்போன்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என டிராய் கடுமையாக எச்சரித்திருந்தது. இது ஆப்பிள் நிறுவனத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. டிராய் அளித்த காலக்கெடு இந்த மாதத்தோடு முடிவடையும் நிலையில் கட்டளைக்கு அடிபணிந்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். 9.1MB அளவு கொண்ட DND ஆப்பை ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப் ஸ்டோரில் இடம்பெற அனுமதியளித்திருக்கிறது.


[X] Close

[X] Close