வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (05/12/2018)

கடைசி தொடர்பு:10:32 (05/12/2018)

50 வருடங்களுக்குப் பிறகு ஜப்பானில் முடிவுக்கு வரும் பேஜர் சேவை

ஜப்பானில், இறுதியாக சேவை அளித்துவந்த பேஜர் நிறுவனம் ஒன்று, தனது சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. 

பேஜர்

`பேஜர்’, தொலைபேசிகளின் தந்தை. மொபைல் போன் பயன்பாட்டுக்கு முன்பே, தகவல் தொடர்புக்கு பெரும் உதவியாக இருந்த சாதனம், பேஜர். உலகம் முழுவதும் பெருமளவில் பயன்பாட்டில் இருந்துவந்தது. 90-களுக்குப் பிறகு அறிமுகமான செல்போன்களால் பேஜரின் மவுசு படிப்படியாகக் குறைந்தது. தற்போது, ஜப்பானில் சுமார்  50 வருடங்களாக அளித்துவந்த பேஜர் சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்திருக்கிறது, டோக்கியோ டெலிமெசேஜ் (Tokyo Telemessage) என்ற நிறுவனம். ஜப்பானின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனமான NTT தான் 1968-ம் ஆண்டில் முதன் முதலாக பேஜரை அறிமுகப்படுத்தியது. அந்நிறுவனம், கடந்த 2007-ம் ஆண்டில் சேவையை நிறுத்திக்கொண்டது.

இறுதியாக, டோக்கியோ டெலிமெசேஜ் நிறுவனம் மட்டுமே சேவையைத் தொடர்ந்து அளித்துவந்தது. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை, அந்நிறுவனம் சார்பில் சேவை நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், "பேஜர்கள் ஒரு காலத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருந்தன, ஆனால், இப்பொழுது அந்த எண்ணிக்கை 1,500-க்கும் கீழாகக் குறைந்திருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், இதற்கான சாதனங்களின் தயாரிப்பு  20 வருடங்களுக்கு முன் நிறுத்தப்பட்டுவிட்டது என்பதும் சேவை நிறுத்தத்திற்கான மற்றொரு முக்கியக் காரணமாக இருக்கிறது. இப்போதும்கூட, மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள் பேஜரைப் பயன்படுத்திவருகிறார்கள் என்று ஜப்பான் டைம்ஸ் நிறுவனம் அதன் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. டோக்கியோ டெலிமெசேஜ் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, அடுத்த வருடம் செப்டம்பர் மாதத்தோடு ஜப்பானில் 50 ஆண்டு பேஜர் சேவை முடிவுக்கு வரும்.