"அது என் போட்டோதான் ஆனா உங்க போன்ல எடுக்கல"- போட்டோகிராஃபரால் சிக்கிய சாம்சங் | Samsung caught using DSLR photo for its smartphone Advertising

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (06/12/2018)

கடைசி தொடர்பு:11:26 (06/12/2018)

"அது என் போட்டோதான் ஆனா உங்க போன்ல எடுக்கல"- போட்டோகிராஃபரால் சிக்கிய சாம்சங்

'DSLR கேமராவில் எடுக்கப்பட்ட போட்டோவை, ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்டது' என்று விளம்பரப்படுத்தியதால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது, சாம்சங் நிறுவனம்.

 சாம்சங்

இன்றைக்கு மொபைல் வாங்கும் பலரும், அதில் கேமரா குவாலிட்டி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள் . எனவே, வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக மொபைல் நிறுவனங்கள் விளம்பரங்களில் DSLR கேமராவில் எடுக்கப்பட்ட போட்டோக்களை பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு இருந்துவருகிறது.  சமீபகாலமாக, பல மொபைல் நிறுவனங்கள் இதைப்போல சர்ச்சையில் அடிக்கடி சிக்கிவருகின்றன. இந்நிலையில், அதேபோன்று பொய்யான போட்டோவைப் பயன்படுத்தியதால் கையும்களவுமாக சிக்கியிருக்கிறது சாம்சங். மலேசியா நாட்டு இணையதளத்தில், சாம்சங் நிறுவனம் அதன் Galaxy A8 Star என்ற ஸ்மார்ட்போனின் தகவல்களைக் கொடுத்திருந்தது. அதில், அந்த மொபைலின் கேமரா குவாலிட்டியை எடுத்துக்காட்டும் விதத்தில், ஒரு பெண்ணின் போட்டோவும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அது பொய்யாக எடிட் செய்யப்பட்ட போட்டோ என்பதைக் கண்டறிந்திருக்கிறார் டுன்ஜா ஜட்ஜிக் (Dunja Djudjic) என்ற பெண். இவர்தான், அந்த போட்டோவில் இருப்பவர், இவர் ஒரு போட்டோகிராஃபரும்கூட. இது தொடர்பான தகவல்களை இணையதளம் ஒன்றில் பதிவுசெய்திருக்கிறார் .

Dunja Djudjic

அதில், 'அந்த போட்டோ என்னுடையதுதான். ஆனால், அது சாம்சங் ஸ்மார்ட்போனில் எடுக்கப்படவில்லை, DSLR கேமராவில் எடுக்கப்பட்டது' என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இதைப் பார்த்தால் சிரிப்புதான்வருகிறது, இதற்கு போட்டோஷாப் செய்தவர்கள் ரீ டச்சிங்கில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்றும் அவரது வருத்தத்தைப் பதிவுசெய்திருக்கிறார். இந்த போட்டோ, டுன்ஜா ஜட்ஜிக்கிடம் இருந்து சாம்சங் நிறுவனம் உரிய பணம் கொடுத்து வாங்கியது என்பதால், இதனால் இரண்டு தரப்பிலும் எந்தப் பிரச்னையும் இருக்கப்போவதில்லை. இந்தத் தகவல் வெளியான பிறகும்கூட அந்த போட்டோவை நீக்காமல், இணையப் பக்கத்தில் அப்படியே வைத்திருக்கிறது சாம்சங். ஆனால், அதற்குப் பதிலாக, 'போட்டோ எடுத்துக்காட்டிற்காக உருவகப்படுத்தப்பட்டது' என்ற வாக்கியத்தை மட்டும் கூடுதலாகச் சேர்த்திருக்கிறது. 
 


[X] Close

[X] Close