ரெட்மி, ஒன்ப்ளஸ்க்கு மீண்டும் சவால் விடும் மெய்ஷூ! #MeizuIndia | Meizu returns to India and launched three new smartphones

வெளியிடப்பட்ட நேரம்: 09:59 (07/12/2018)

கடைசி தொடர்பு:09:59 (07/12/2018)

ரெட்மி, ஒன்ப்ளஸ்க்கு மீண்டும் சவால் விடும் மெய்ஷூ! #MeizuIndia

மெய்ஷூ நிறுவனம் தற்பொழுது முன்னிலையில் இருக்கும் ஷியோமி நிறுவனத்துக்குப் பெரிய போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ரெட்மி, ஒன்ப்ளஸ்க்கு மீண்டும் சவால் விடும் மெய்ஷூ! #MeizuIndia

டந்த சில வருடங்களுக்கு முன்னால்தான் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான சந்தை இந்தியாவில் வளரத் தொடங்கியது. அதன் காரணமாக ஷியோமி போன்ற பல சீன நிறுவனங்கள் புதிதாக இந்தியாவுக்குள் கால்பதித்தன. அப்படிப்பட்ட நிறுவனங்களில் ஒன்றுதான் மெய்ஷூ (Meizu). இந்தப் பெயர் சிலருக்குத் தெரிந்திருக்கக்கூடும். வந்த புதிதில் சில ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது மெய்ஷூ நிறுவனம். அவை சந்தையில் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவும் செய்தன. ஆனால் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தாமல் போனதால் சந்தையில் அதன் இடத்தை இழந்தது. சில வருடங்கள் கழித்து தற்பொழுது மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி வந்திருக்கிறது மெய்ஷூ நிறுவனம். தற்போது புதிதாக மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

 ஒன்ப்ளஸ் 6T-யுடன் போட்டி போடும் மெய்ஷூ M16th

மெய்ஷூ


Meizu M16th, M6T மற்றும் Meizu C9 என்ற மூன்று ஸ்மார்ட்போன்கள்தான் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவை. இதில் M16th மட்டும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மற்ற இரண்டும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள். சீனாவில் மிகப் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது மெய்ஷூ. இந்தியாவில் இன்னும் கூட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான சந்தை வாய்ப்புகள் அதிகமாக இருப்பதை உணர்ந்தே மீண்டும் வந்திருக்கிறது. மெய்ஷூ M16th ஸ்மார்ட்போன். அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ஒன்ப்ளஸ் 6T-யுடன் போட்டிபோடும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மெய்ஷூ

 

8GB ரேம் + 128 GB இன்டர்னல் மெமரியைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 39,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது. 6- இன்ச் 18:9 ரேஷியோ Super AMOLED டிஸ்ப்ளே இதில் இருக்கிறது. ஒன்பிளஸ் 6T-யில் இருக்கும் Snapdragon 845 புராஸசரே இதிலும் இருக்கிறது. ஃபிங்கர்பிரின்ட் சென்சார் டிஸ்ப்ளேவுக்கு உள்ளேயே கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறமாக 12 MP+ 20MP டூயல் கேமராக்கள் இருக்கின்றன. மேலும் இவற்றில் OIS, PDAF மற்றும் லேசர் AF போன்ற வசதிகளும் உண்டு. பொதுவாக ஸ்மார்ட்போன் கேமராக்களுக்கு டூயல் எல்இடி ஃபிளாஷ் மட்டுமே பெரும்பாலும் தரப்படும். ஆனால் இதில் அதிகபட்சமாக ஆறு LED ஃபிளாஷ்கள் இருக்கின்றன. முன்புற கேமரா 20 MP திறன் கொண்டது. இந்த ஸ்மார்ட்போனில் 3010 mAh பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இருக்கிறது.

ஸ்மார்ட்போன்

அடுத்ததாக Meizu C9 என்ற ஸ்மார்ட்போன் அறிமுக விலையாக 4,999 ரூபாய்க்கு வெளியிடப்பட்டுள்ளது. 5.45 இன்ச் திரை கொண்ட இது பட்ஜெட் போன் வாங்க விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2GB ரேம் மற்றும் 16 GB இன்டர்னல் மெமரி கொண்ட இதில் Unisoc SC9832E என்ற குவாட்கோர் திறன் கொண்ட புராஸசர் இருக்கிறது. இந்த சிப் செட் இதுவரை மெய்ஷூ ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டதில்லை. முதல் முறையாக இந்த ஸ்மார்ட்போனில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 13 MP பின்புற கேமராவும், 8 MP முன்புற கேமராவும் இதில் இருக்கிறது. 3000 mAh பேட்டரி இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

மெய்ஷூ

மூன்றாவதாக Meizu M6T ஸ்மார்ட்போன் 7999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5.7 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 4 GB ரேம் மற்றும் 64 இன்டர்னல் மெமரி இருக்கிறது. பின்புறமாக 13 MP + 2MP டூயல் கேமராக்கள் இருக்கின்றன. முன்புறமாக 8 MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 3300 mAh பேட்டரி இதில் இருக்கிறது. இந்த மூன்று ஸ்மார்ட்போன்கள் தவிர மேலும் இரண்டு வயர்லெஸ் இயர்போன்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். Meizu pop 6,999 ரூபாய்க்கும் EP52 Lite 1,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வரும். இந்த மூன்று ஸ்மார்ட்போன்களையுமே அமேசான் இணையதளத்தில் வாங்க முடியும். தற்பொழுது Meizu C9 ஸ்மார்ட்போன் மட்டுமே தற்பொழுது விற்பனைக்கு வருகிறது. மற்ற இரண்டு ஸ்மார்ட்போன்களும் மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என மெய்ஷூ தெரிவித்திருக்கிறது. மெய்ஷூ நிறுவனம் தற்பொழுது முன்னிலையில் இருக்கும் ஷியோமி நிறுவனத்துக்குப் பெரிய போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இன்னும் சர்வீஸ் சென்டர்கள் பற்றிய தகவல்கள் சரியாகத் தெரியவில்லை, அந்தச் சேவையை மட்டும் சரியாகக் கொடுத்து விட்டால் மெய்ஷூ மீண்டும் ஒரு ரவுண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close