அரசியல் விளம்பரங்களுக்கு கிடுக்கிப்பிடி... 2019 தேர்தலுக்குத் தயாராகும் ஃபேஸ்புக்! | Facebook announced new rules to run political ads in India ahead of next year election

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (07/12/2018)

கடைசி தொடர்பு:14:35 (07/12/2018)

அரசியல் விளம்பரங்களுக்கு கிடுக்கிப்பிடி... 2019 தேர்தலுக்குத் தயாராகும் ஃபேஸ்புக்!

சுவர் விளம்பரங்கள், தொலைக்காட்சி , பத்திரிகை விளம்பரங்கள் மற்றும் கள பிரசாரம் போலவே தற்போது அரசியல் கட்சிகளால் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் விஷயம், டிஜிட்டல் பிரசாரம். தேர்தல் வந்தால் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என எல்லா சமூக வலைதளங்களிலும் கட்சிகள் தங்களின் விளம்பரங்களைத் தொடர்ந்து வெளியிடுவது வழக்கம். மற்ற பிரசாரங்கள் போல, இந்த இணைய பிரசாரத்திற்கு இன்னும் தேர்தல் ஆணையத்தால் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லை என்பதாலும், இந்த இணைய பிரசாரம் வாக்காளர்களிடம் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலும், அரசியல் கட்சிகள் இதை மிக முக்கியமாகப் பார்க்கின்றன.

ஃபேஸ்புக்

இந்த இணையப் பிரசாரங்கள், கட்சிகளுக்கு எந்தளவுக்குப் பயனளிக்கிறதோ, அதே அளவுக்கு சமூக விரோதிகளுக்கும் பயனளிக்கின்றன. தேவையற்ற வதந்திகளைப் பரப்புதல், கட்சிகள்குறித்தும் தலைவர்கள்குறித்தும் போலிச் செய்திகள் பரப்புதல், வாக்காளர்களைக் கவர்வதற்காக, அவர்களின் தரவுகளை ஹேக் செய்தல் போன்ற சம்பவங்களும், தேர்தலை மையமாக வைத்து இணையத்தில் நடைபெறுகின்றன. ஃபேஸ்புக் - கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா சம்பவத்திற்குப் பிறகு, உலகம் முழுவதுமே இந்தச் சம்பவங்கள் குறித்து விழிப்புஉணர்வு அதிகரித்துவருகிறது.

Facebook

அனைத்து நாடுகளும் இந்த டிஜிட்டல் அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர் போன்ற நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றி, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அடுத்த ஆண்டு, இந்தியாவிலும் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதால், இந்திய அரசும் இந்த விஷயத்தில் கவனமாக இருக்கிறது. ஏற்கெனவே தேர்தல் ஆணையம் இந்த இணையப் பிரசாரம் மற்றும் கண்காணிப்பு குறித்து டெக் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திவரும் நிலையில், நேற்று ஃபேஸ்புக் அரசியல் விளம்பரங்கள் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. 

Facebook

அதில் விளக்கம் அளித்திருக்கும் அந்நிறுவனம், "ஃபேஸ்புக்கில் அரசியல் சார்ந்த விளம்பரங்களின் முக்கியத்துவத்தை நன்கு அறிவோம். எனவேதான், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் செய்யப்படும் அரசியல் விளம்பரங்களுக்கு நிறைய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறோம். இதை ஏற்கெனவே பிரேஸில், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் செய்திருக்கிறோம். தற்போது இந்தியாவில் தேர்தல் நெருங்குவதையொட்டி, இங்கேயும் அவற்றை நடைமுறைப்படுத்தவிருக்கிறோம். இதன்மூலம் அடுத்த வருடம் நடக்கும் தேர்தலில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கமுடியும். இதன்படி, ஃபேஸ்புக்கில் அரசியல் சார்ந்த விளம்பரங்கள் செய்யவிரும்பும் இந்தியர் ஒருவர், அதற்காக அவருடைய அடையாள அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இதன்மூலம், அவருடைய அடையாளம் மற்றும் அவர் எங்கிருந்து விளம்பரம் செய்கிறார் என்ற விவரம் ஆகிய இரண்டும் ஃபேஸ்புக்கால் உறுதிசெய்யப்படும். அடையாள அட்டையைச் சமர்ப்பித்தால், அதை உறுதிசெய்வதற்காக சில வாரங்கள் ஆகும் என்பதால், அடுத்த ஆண்டு தேர்தல் விளம்பரங்கள் செய்பவர்கள், இப்போதே உங்களின் விண்ணப்பங்களை ஃபேஸ்புக் மூலம் அனுப்பத் தொடங்குங்கள். இதன்மூலம், அரசியல் விளம்பரங்களின் உண்மைத்தன்மையை ஃபேஸ்புக் உறுதிசெய்வதுடன், வெளிநாட்டினரின் தலையீட்டையும் தவிர்க்க முடியும்" என்று தெரிவித்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close