வெளியிடப்பட்ட நேரம்: 14:13 (08/12/2018)

கடைசி தொடர்பு:14:13 (08/12/2018)

'இந்த தவ்ளூண்டு புராசஸர்தான் 5G சாம்பியன்!’ - குவால்காமின் #Snapdragon855

'இந்த தவ்ளூண்டு புராசஸர்தான் 5G சாம்பியன்!’  - குவால்காமின் #Snapdragon855

தாவது ஸ்மார்ட்போன் வாங்கும் முடிவில் இருக்கிறீர்களா? அது பட்ஜெட் மொபைலோ, மிட்ரேன்ஜ் போனாகவோ இருந்தால் அதில் எந்தக் குழப்பமும் தேவையில்லை. ஆனால் கொஞ்சம் அதிக விலை கொடுத்து ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கலாம் என நினைத்திருந்தால் அந்த முடிவைச் சிறிது காலம் தள்ளி போடுவதுதான் நல்லது. காரணம் இன்னும் சில மாதங்களில் அதே விலையில் 5G ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்து விடும்.

இப்பொழுது சந்தையில் 5G வசதி கொண்ட ஸ்மார்ட்போன் ஒன்றுகூட கிடையாது. எவ்வளவு அதிக விலை கொடுத்தாலும் 4Gதான் கிடைக்கும். ஆனால் அடுத்த வருடம் அப்படி இருக்கப்போவதில்லை. சந்தையை நோக்கி 5G வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் படையெடுக்கப்போகின்றன. பல முன்னணி மொபைல் நிறுவனங்கள் அடுத்த வருடத்தில் 5G வசதி கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவோம் என ஏற்கெனவே அறிவித்துவிட்டன. எனவே அடுத்த வருடத் தொடக்கத்திலேயே 5G ஸ்மார்ட்ப்போன்களின் அறிமுகம் தொடங்கிவிடும். அந்த ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துவதற்கான புராசஸரை தற்பொழுது ஹவாயில் நடைபெற்ற மாநாட்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறது குவால்காம் நிறுவனம்.

ஸ்னாப்ட்ராகன் 855... 5G ஸ்மார்ட்போனின் மூளை

ஸ்னாப்ட்ராகன் 855

அமெரிக்காவைச் சேர்ந்த குவால்காம் நிறுவனம்தான் மொபைல் புராசஸர் சந்தையில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில், குறிப்பாக ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்று வந்து விட்டால் பெரும்பாலும் அதில் பயன்படுத்தப்பட்டிருப்பது ஸ்னாப்ட்ராகன் புராசஸராகத்தான் இருக்கும். தற்பொழுது 4G தொழில்நுட்பம் பரவலாகி விட்ட நிலையில் அதற்கடுத்ததாக 5G-யை உருவாக்கும் பணியில் பல நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு வந்தன. அதற்கான பலன் இந்த வருடத்தில் கிடைத்துவிட்டது. பல நிறுவனங்கள் 5G நெட்வொர்க் அமைப்பை இறுதிக்கட்டமாகப் பரிசோதித்து வருகின்றன. இன்னும் ஸ்மார்ட்போன் மட்டும்தான் மிச்சம். அதுவும் வந்து விட்டால் 5G செயல்பாட்டுக்கு வரத் தொடங்கிவிடும். இந்நிலையில்தான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது ஸ்னாப்ட்ராகன் 855 புராசாஸர்.

5G

ஒரு ஸ்மார்ட்போன் எவ்வளவுதான் வசதிகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அதன் செயல்பாட்டை நிர்ணயிப்பது இந்த புராசாஸர்கள்தான். ஒரு விரல் நுனி அளவே இருக்கும் இவைதான் ஒரு ஸ்மார்ட்போனின் மூளையாகச் செயல்படுகின்றன. எனவே இவற்றைத் தேர்ந்தெடுப்பதில் மொபைல் நிறுவனங்கள் மிகக் கவனமாக இருக்கும். அப்படிப் பல நிறுவனங்கள் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்ட்ராகன் புராசாஸரைத்தான் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றன. எனவே அடுத்த வருடம் சாம்சங் உட்படப் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் இந்த ஸ்னாப்ட்ராகன் 855 புராசாஸர்தான் பயன்படுத்தப்படும்.

ஸ்னாப்ட்ராகன் 855 புராசாஸரின் சிறப்புகள் 

5G வசதியைத் தரும் என்பதுதான் இதன் தனிச்சிறப்பு. இதனுடன் இணைக்கப்பட்டுள்ள Snapdragon X50 5G மோடம் அதற்கான திறனைக் கொண்டுள்ளது. இரண்டும் இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக 20 மடங்கு அதிக இணைய வேகத்தைப் பெற முடியும். குவால்காமின் முந்தைய ஃபிளாக்ஷிப் புராசஸரான Snapdragon 845 புராசஸர் 10nm என்ற தயாரிப்பு முறையில் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த ஸ்னாப்ட்ராகன் 855 புராசஸர் 7nm தயாரிப்பு முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இதன் மூலமாக அதிக அளவில் மின்சக்தியைச் சேமிக்க முடியும். மேலும் இந்த புராசாஸர் மூலமாக அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரின்ட் சென்சாரை ஒரு மொபைலில் கொடுக்க முடியும் என்பது இதன் மூலமாகக் கிடைக்கும் மற்றொரு வசதி. ஏற்கனவே திரைக்கு அடியில் இயங்கும் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் வசதியுடன் இந்த வருடத்திலேயே சில மொபைல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. ஆனால் அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் என்பது முற்றிலும் வேறு விதமான செயல்பாட்டைக் கொண்டது.

இந்த வசதியைத் தரும் முதல் புராசாஸர் இதுதான். இந்த வகை ஃபிங்கர்பிரின்ட் சென்சார்கள் டிஸ்ப்ளேவிற்கு அடியில் இருந்து இயங்கும். தற்பொழுது பயன்பாட்டில் இருப்பவற்றை விடவும் இவை மிகவும் வேகமானவை. மேலும், பாதுகாப்பானவையாக இருக்கும். ஸ்மார்ட்போன் கேமராவில் 4K வீடியோக்களை HDR தரத்தில் எடுக்கக் கூடிய திறனையும் ஸ்னாப்ட்ராகன் 855 புராசாஸர் மூலமாகப் பெற முடியும். அதே போல போனில் வீடியோக்களைப் பார்க்கும்போதும் குறைவான அளவு மின்சக்தியே செலவாகும். செயற்கை நுண்ணறிவு திறனும் இந்த புராசாஸரில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மல்டிகோர் AI Engine இருப்பதால் வாய்ஸ் அசிஸ்டெண்ட் போன்ற வசதிகள் மேம்படும். இது மட்டுமின்றி கேமிங், VR போன்றவற்றிலும் சிறப்பான செயல் திறனைப் பெற முடியும். 


டிரெண்டிங் @ விகடன்