ட்விட்டர் சி.இ.ஓ ஜாக்கின் மியான்மர் பயணம் - சர்ச்சையும் விளக்கமும்! | twitter CEO jack responds to Controversy over Myanmar tour tweet

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (14/12/2018)

கடைசி தொடர்பு:09:30 (14/12/2018)

ட்விட்டர் சி.இ.ஓ ஜாக்கின் மியான்மர் பயணம் - சர்ச்சையும் விளக்கமும்!

ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்ஸி, தியானப் பயிற்சி மேற்கொள்வதற்காக மியான்மருக்குச் சென்றிருந்தார். இவரது பயணம் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது 

Jac Dorsey

தியானம் செய்வதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட ஜாக், விபாசனா எனப்படும் தியானப் பயிற்சி மேற்கொள்வதற்காக மியான்மருக்குச் சென்றிருக்கிறார். அங்கே தியானம் செய்ததுடன், அந்த தியானம் குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும், மியான்மரின் அழகு, மக்கள், உணவு குறித்தும் விரிவாக ட்விட்டரில் Thread போட்டிருந்தார். தன்னுடைய பயண அனுபவங்களை ஜாக் பகிர்வதில் தப்பில்லைதான். ஆனால், ரோஹிங்கியா இஸ்லாமியர்களின் பிரச்னை அங்கே பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது, அதுகுறித்து எதுவும் பேசாமல் வெறுமனே, மியான்மரின் அழகு, தியானம் என மட்டும் பேசுவது சரியா எனக் கேள்வி எழுப்புகின்றனர் அந்நாட்டைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள். இந்த விஷயம் ட்விட்டரில் பெரிதாகவே, இறுதியாக இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் ஜாக்.

ஜாக்

``நான் கடந்த 20 வருடங்களாகத் தியானப்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த இரண்டு வருடமாகத்தான் விபாசனா பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறேன். அமெரிக்காவில் இதுகுறித்து அறிந்து அங்கு பயிற்சி செய்தேன். பின்னர் இதைச் சிறப்பாக செய்யவேண்டுமென்றால் அதை மிகச்சிறப்பாகக் கற்றுக்கொடுத்துவரும் மியான்மருக்கே வந்து கற்றுக்கொள்ளலாம் என நினைத்துதான் இங்கே வந்தேன். இது என்னுடைய தனிப்பட்ட பயணம். எனவே, வேறு எந்த விஷயம் குறித்தும் நான் பேசவோ, விவாதிக்கவோ, அதுகுறித்த நபர்களைச் சந்திக்கவோ நான் எண்ணவில்லை.

Twitter CEO Jack in IIT delhi

அதேசமயம், மியான்மரில் நடக்கும் மனிதஉரிமை மீறல்களை நான் நன்கு அறிந்திருக்கிறேன். என்னுடைய தியானம் தொடர்பான பயணம் என்பதாலேயே வேறு எதிலும் நான் கவனம் செலுத்தவோ, கருத்து சொல்லவோ இல்லை. அதுகுறித்து பேசாமல் போவதால், அந்தப் பிரச்னையை நான் மழுங்கடிக்கிறேன் என நினைக்க வேண்டாம். ட்விட்டர் எப்போதும் மக்களுடைய கருத்துகளுக்கும், அவர்களின் விவாதங்களுக்கும் துணைசெய்யும் ஊடகமாக இருக்கும். நான் இங்கே கற்றுக்கொள்ளும் விஷயங்களைத் தொடர்ந்து உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க