வெளியிடப்பட்ட நேரம்: 02:25 (15/12/2018)

கடைசி தொடர்பு:02:25 (15/12/2018)

3 மாதத்தில் 58 மில்லியன் வீடியோக்களை நீக்கிய யூடியூப்... எதற்காக?

ன்முறையைத் தூண்டும் பேச்சுகளைக் கொண்ட மற்றும் பெண்கள் குழந்தைகளை ஆபாசமாகச் சித்திரிக்கும் மோசமான வீடியோக்கள் வெளியாவதை முழுமையாகத் தடுக்க வேண்டும் எனப் பல்வேறு நாட்டு அரசாங்கங்களும் யூடியூபிற்கு தொடர்ந்து அழுத்தம்கொடுத்து வருகின்றன. யூடியூபும் இவற்றைத் தடுப்பதற்காகத் தொழில்நுட்பரீதியாக சில முயற்சிகளை எடுத்துவருகிறது. இருந்தும்கூட, இன்னும் வன்முறையைத் தூண்டும் மற்றும் வெறுப்பை விதைக்கும் பேச்சுகளைக் கொண்ட வீடியோக்களை முழுமையாகத் தடுக்கவோ, நீக்கவோ முடிவதில்லை. இதற்கு, பயனாளர்கள் ரிப்போர்ட் செய்வது மட்டும்தான் ஒரே வழி. இதற்காக தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல், வீடியோக்களை ஆராய்ந்து நீக்குவதற்காக ஏராளமான பணியாளர்களையும் நியமித்துள்ளது யூடியூப்.

யூடியூப்

இந்த சிக்கல்குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில், மொத்தம் எவ்வளவு வீடியோக்கள், சானல்கள் இப்படி தடைசெய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது யூடியூப். இப்படி இந்நிறுவனம் தகவல்களை வெளிப்படையாக அறிவிப்பது இதுவே முதல்முறை. இதன்படி, ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரைக்கும் யூடியூபின் விதிகளை மீறிய 7.8 மில்லியன் வீடியோக்கள் அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில், மொத்தம் 224 மில்லியன் கமென்ட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஸ்பேம் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

இப்படி யூடியூபின் விதிகளை ஏதேனும் ஒரு வீடியோ மீறினால், உடனே அந்த சானலுக்கு 'ஸ்ட்ரைக்' அனுப்பப்படும். இது எதனால் அனுப்பப்பட்டது என ஆராய்ந்து, அந்த சானல் உரிமையாளர் மீண்டும் அந்தத் தவற்றைச் செய்யாமல் இருக்க வேண்டும். மாறாக, மீண்டும் விதிகளை மீறினால், இரண்டாவது 'ஸ்ட்ரைக்' அனுப்பப்படும். இப்படி 90 நாள்களுக்குள் ஒரு யூடியூப் சானல் மூன்று ஸ்ட்ரைக்குகள் வாங்கிவிட்டால், அந்த சானல் முழுமையாக யூடியூபிலிருந்து நீக்கப்படும். இது நடந்தால், அந்த சானலில் இருக்கும் அனைத்து வீடியோக்களும் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும். இப்படி மட்டும் ஜூலை - செப்டம்பர் இடையே, மொத்தம் 50.2 மில்லியன் வீடியோக்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருக்கின்றன. ஆக மொத்தம் மூன்று மாத இடைவெளியில் 58 மில்லியன் வீடியோக்களை, யூடியூப் விதிமுறைகளை மீறியதற்காக நீக்கியிருக்கிறது அந்நிறுவனம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க