புதிய `நாட்ச்’ ஸ்மார்ட்போன்கள்... சந்தையில் இழந்த இடத்தை மீட்டெடுக்குமா மைக்ரோமேக்ஸ்? | micromax launched two new smartphones with new notch designs

வெளியிடப்பட்ட நேரம்: 19:22 (19/12/2018)

கடைசி தொடர்பு:19:22 (19/12/2018)

புதிய `நாட்ச்’ ஸ்மார்ட்போன்கள்... சந்தையில் இழந்த இடத்தை மீட்டெடுக்குமா மைக்ரோமேக்ஸ்?

மைக்ரோமேக்ஸின் முதல் நாட்ச் ஸ்மார்ட்போன்கள் இதோ.

புதிய `நாட்ச்’ ஸ்மார்ட்போன்கள்... சந்தையில் இழந்த இடத்தை மீட்டெடுக்குமா மைக்ரோமேக்ஸ்?

டந்த சில வருடங்களில் சந்தையில் பின்னுக்குத் தள்ளப்பட்ட இந்திய மொபைல் நிறுவனங்களைப் பட்டியலிட்டால் அதில் மைக்ரோமேக்ஸ் நிறுவனமும் இடம்பெறும். சில வருடங்களுக்கு முன்னால் வரை சந்தையில் குறிப்பிட்ட அளவிலான இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருந்த மைக்ரோமேக்ஸ், பின்னர் அதன் இடத்தை இழந்தது. அதற்குச் சந்தையில் உருவான கடுமையான போட்டி, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் ஸ்மார்ட்போன்களை வெளியிடாதது எனப் பல காரணங்கள் அதற்குப் பின்னால் இருந்தன. ஆனாலும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் புதிய ஸ்மார்ட்போன்களை மைக்ரோமேக்ஸ் அறிமுகப்படுத்திக்கொண்டுதான் இருந்தது. 

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் கவுன்ட்டர்பாயின்ட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒரு தகவல் இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு, விற்பனையில் முதல் முறையாக நான்காவது இடத்தைப் பிடித்திருந்தது மைக்ரோமேக்ஸ். மீண்டும் எப்படியாவது சந்தையில் விட்ட இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது. அதற்காக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 13 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் முடிவில் இருப்பதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சொன்னபடியே நேற்றைக்கு இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 

மைக்ரோமேக்ஸின் முதல் நாட்ச் ஸ்மார்ட்போன்கள் 

மைக்ரோமேக்ஸ்

ஸ்மார்ட்போன்களை எடுத்துக்கொண்டால் இந்த வருடம் முழுவதும் நாட்ச்தான் ட்ரெண்டில் இருந்தது. சாம்சங் தவிர்த்து பெரும்பாலான நிறுவனங்கள் நாட்ச் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திவிட்டன. இறுதியாக அந்த வரிசையில் மைக்ரோமேக்ஸும் இணைந்திருக்கிறது. Infinity N11, Infinity N12 என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் செக்மென்ட்டை குறி வைத்துக் களமிறக்கப்பட்டுள்ளன. இவற்றில் நாட்ச்தான் மிக முக்கியமான அம்சம் என்றாலும் மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது நாட்ச் சற்று பெரிய அளவிலேயே இருக்கிறது. வசதிகளைப் பொறுத்தவரையில் இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் கிடையாது. இரண்டிலுமே 6.19 இன்ச் அளவு கொண்ட HD+ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறமாக 13 MP+5 MP டூயல் கேமரா இருக்கிறது. போட்டோக்களை மேம்படுத்துவதற்காக AI வசதியும் உண்டு. இன்ஃபினிட்டி N12-யில் 16 MP முன்புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இன்ஃபினிட்டி N11-யில் 8 MP முன்புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. குறைவான ஒளி கொண்ட இடங்களில் செல்ஃபி எடுக்க உதவும் வகையில் ஃபிளாஷ் வசதியும் உண்டு.

 Infinity N11, Infinity N12

சமீப காலமாக ஷியோமி உட்பட சில நிறுவனங்கள் மீடியாடெக் புராசாஸர்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. ஆனால் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தொடக்கம் முதலே அதன் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக் புராசஸர்களையே பயன்படுத்தி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்களிலும் அந்த நிறுவனத்தின் புராசஸரே பயன்படுத்தப்பட்டுள்ளது. 2GHz திறன் கொண்ட Helio P22 புராசஸர் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் இருக்கிறது. டிஸ்ப்ளே, கேமராவுக்கு அடுத்தபடியாக மொபைல் வாங்குபவர்கள் எதிர்பார்க்கும் விஷயம் பேட்டரி. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலுமே 4000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஷியோமி அதன் ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலும் 4000 mAh பேட்டரியைக் கொடுப்பது வழக்கம். பலரின் விருப்பமாக இருப்பதற்கு அது ஒரு முக்கியமான காரணம். எனவே, பேட்டரி விஷயத்தில் ஷியோமியைப் பின்பற்றியிருக்கிறது மைக்ரோமேக்ஸ். 

ஸ்மார்ட்போன்

இன்ஃபினிட்டி N11-னில் 2 GB ரேம் உள்ளது, இதன் விலை 8,999 ரூபாய் மற்றும் இன்ஃபினிட்டி N12-ல் 3 GB ரேம் உள்ளது இதன் விலை 9,999 ரூபாய். இரண்டிலும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. இதை மேலும் மெமரி கார்டு மூலமாக நீட்டித்துக்கொள்ளவும் முடியும். அதற்காக ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டு மற்றும் ஒரு மெமரி கார்டை பயன்படுத்தும் வகையிலான சிம் ஸ்லாட்டும் உள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வரும் 25-ம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் விற்பனைக்கு வருகின்றன. இந்திய மொபைல் சந்தையை எடுத்துக்கொண்டால் அதிக போட்டி இருப்பது பட்ஜெட் செக்மென்டில்தான். இதில் முதல் ஐந்து இடங்களில் ஷியோமி, ஒப்போ, விவோ எனச் சீன நிறுவனங்களே அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளன. ஒரு வேளை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் செயல்பட்டால் மைக்ரோமேக்ஸ் தற்பொழுது பிடித்திருக்கும் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள வாய்ப்புண்டு.


டிரெண்டிங் @ விகடன்