வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/12/2018)

கடைசி தொடர்பு:07:28 (29/12/2018)

``வெள்ளத்தால் பாதிப்பா..?” - இனிமேல் கூகுளும் எச்சரிக்கை செய்யும்

வெள்ளம் தொடர்பான எச்சரிக்கைகளை மக்களுக்கு அறிவிக்கும் திட்டத்தை தற்பொழுது இந்தியா முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது கூகுள்.

வெள்ளம்

மத்திய அரசின் நீர் வளத் துறை அமைச்சகத்தின் உதவியோடு இது செயல்படும். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் கூகுளில் “சர்ச்” செய்யும்போதும், கூகுள் மேப்’ல் தேடும்போதும், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கைத் தெரிவிக்கும். மேலும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் நோட்டிஃபிகேஷனாகவும் தெரிவிக்கப்படும். மெஷின் லேர்னிங், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றால் வெள்ளம் வருவதற்கு முன்பே எந்தெந்தப் பகுதிகளில் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை துல்லியமாக் கண்டறிய முடியும். அது மட்டுமின்றி அபாயகரமான பகுதிகளை கணித்துக் கூறவும் செய்யும். வெள்ளம் பாதித்த பிறகு பாதிப்பின் அளவு குறித்தும் அறிந்துகொள்ள முடியும் என்பதால் இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக உதவிகளையும் செய்ய முடியும்.

கூகிள்

கேரளாவில் வெள்ளம் பாதித்தபோது கூகுள் “FIND PERSON” என்கிற திட்டம் மூலம் உதவியது. ஏற்கெனவே பாட்னாவில் பரிசோதனையில் இருந்த இந்த வசதி சரியாக வேலை செய்தது. உலகில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 25 கோடி பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றனர். அதில் இந்தியாவில் மட்டும் 20 சதவிகிதம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். எனவே கூகுளின் இந்த வசதி மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.