ரியர் 48 MP ; ஃபிரன்ட் 25 MP... ஹானரின் 'வேறலெவல்'கேமரா மொபைல்! #HONORView20 | honor launches Honor View 20 smartphone in china

வெளியிடப்பட்ட நேரம்: 15:04 (29/12/2018)

கடைசி தொடர்பு:15:04 (29/12/2018)

ரியர் 48 MP ; ஃபிரன்ட் 25 MP... ஹானரின் 'வேறலெவல்'கேமரா மொபைல்! #HONORView20

தற்போது ட்ரெண்ட்டிங்கில் இருக்கும் 'நாட்ச்' டிசைனிலிருந்து வெளிவந்து புது ஸ்டைல் ஒன்றை செட் செய்திருக்கிறது ஹானர்.

ரியர் 48 MP ; ஃபிரன்ட் 25 MP... ஹானரின் 'வேறலெவல்'கேமரா மொபைல்! #HONORView20

Honor View 20 என்ற ஸ்மார்ட்போனை கடந்த புதன்கிழமை சீனாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹானர் நிறுவனம். 48 MP கேமராவைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது. அதிக விலை கொடுத்து வாங்கும் போது கேமராவும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர். எனவே அதற்கேற்றவாறு இந்த ஸ்மார்ட்போனில் கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கியாவின் சாதனையை முறியடித்த ஹானர்

கேமரா

சில வருடங்களுக்கு முன்னால் வெளியான Nokia Lumia 1020 என்ற ஸ்மார்ட்போன் இன்றைக்கும் பலர் ஞாபகம் வைத்திருப்பார்கள். காரணம் அதில் இருந்த கேமராதான். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பெரிய அளவில் பிரபலமாகாத போதே அந்த போனில் 41 மெகா பிக்ஸல் கேமரா இருந்தது. அதன் பிறகு பல ஸ்மார்ட்போன்கள் வெளியாகிவிட்டாலும் அந்தச் சாதனை நோக்கியாவின் வசமே இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் கூட வாவே (Huawei) நிறுவனம் 40 MP கேமராவைக் கொண்ட P20 Pro என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருந்தது. அப்பொழுதும் கூட நோக்கியாவின் சாதனையை அருகில் நெருங்கவே முடிந்தது. தற்பொழுது அந்த சாதனையை அதன் துணை நிறுவனமான ஹானர் மூலமாக மூலமாக முறியடித்திருக்கிறது ஹூவாய்.

பின்னால் 48 MP, முன்னால் 25 MP கேமரா

Honor View 20

6.4 இன்ச் LCD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது ஹானர் வியூ 20. இப்பொழுது வெளியாகும் ஹைஎண்ட் ஸ்மார்ட்போன்களின் AMOLED வகை டிஸ்ப்ளேவே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதில் சாதாரண LCD டிஸ்ப்ளே இருப்பது நிச்சயம் குறைதான். மேலும் இந்தப் போனின் டிஸ்ப்ளேவில் நாட்ச் கிடையாது. அதே நேரத்தில் டிஸ்ப்ளேவின் மேற்புறம் இடது மூலையில் முன்புற கேமரா மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பன்ச் ஹோல் கேமரா டிசைன் என்கிறது ஹானர். இந்த வடிவமைப்பில் வெளியாகும் முதல் ஹானர் ஸ்மார்ட்போன் இது. சாம்சங் நிறுவனம் இதேபோல டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்ட Galaxy A8s என்ற ஸ்மார்ட்போனை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. அடுத்ததாக இந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிடத்தக்க விஷயங்கள் இதில் உள்ள கேமராக்கள்தான். பின்புறமாக இருப்பது சோனியின் IMX 586 சென்சார் கேமரா. கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இதுதான் உலகின் அதிக மெகாபிக்சல் திறன் கொண்ட கேமரா சென்சார் ஆகும். மேலும் TOF என்ற சென்சாரும் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு புகைப்படத்தை 3D முறையில் படம்பிடிப்பதற்கு உதவும். முன்புறமாக 25 MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

ஹானர்

7nm புராஸஸ் முறையில் தயாரிக்கப்பட்ட HiSilicon Kirin 980 புராஸசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மின்சாரம் குறைவாகவே செலவாகும் என்பதால் பேட்டரி பேக்அப்பும் சிறப்பாக இருக்கும். இதே புராஸசர்தான் வாவேயின் Mate 20 Pro ஸ்மார்ட்போனிலும் இருக்கிறது. 6 GB ரேம் 128 GB இன்டர்னல் மெமரி, 8 GB ரேம் 128 GB இன்டர்னல் மெமரி மற்றும், 8 GB ரேம் 256 GB இன்டர்னல் மெமரி என மூன்று வேரியன்ட்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. இவை அதற்குத் தகுந்தவாறு இந்திய மதிப்பில் 30,440 ரூபாய், 35,515 ரூபாய் மற்றும் 40,590 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

HiSilicon Kirin 980

4,000 mAh பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒரு நாளைக்குத் தேவைப்படும் சார்ஜை வெறும் அரை மணி நேரத்திலேயே ஏற்றிக் கொள்ளலாம். இந்தியாவில் அமேசான் இணையதளத்தில் Honor View 20 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. ஆனால் இந்தியாவில் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. அடுத்த மாதம் இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். 


டிரெண்டிங் @ விகடன்