வெளியிடப்பட்ட நேரம்: 19:18 (02/01/2019)

கடைசி தொடர்பு:20:40 (02/01/2019)

வியக்கவைக்கும் இன்ட்ராக்டிவ் சினிமா... எப்படிச் சாத்தியப்படுத்தியது நெட்ஃபிளிக்ஸ்?

ஒவ்வொருவருக்கும் ஒரு க்ளைமாக்ஸ் வரும் நெட்ஃபிளிக்ஸின் இந்த முயற்சி இப்போது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதை டெக்னிக்கலாக எப்படிச் சாதித்தது நெட்ஃப்ளிக்ஸ்?

வியக்கவைக்கும் இன்ட்ராக்டிவ் சினிமா... எப்படிச் சாத்தியப்படுத்தியது நெட்ஃபிளிக்ஸ்?

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தங்கள் தளத்தில் புதிய முயற்சியாகப் பார்வையாளர்களின் விருப்பத்துக்கேற்ப கதை நகரும் வண்ணம் இன்ட்ராக்ட்டிவ்வாகத் தங்களின் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கவுள்ளதென கடந்த ஆண்டே தகவல்கள் வெளியாகியிருந்தன. கதையின் போக்கில் முன்னணி கதாபாத்திரம் என்ன முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதை நம் கையில் விட்டுவிடும் இந்த இன்ட்ராக்ட்டிவ் முறையை முழுவதுமாகக் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளது நெட்ஃப்ளிக்ஸ். ஏற்கெனவே 2017-ல் வந்த 'Puss in Book' என்ற குழந்தைகளுக்கான அனிமேஷன் படத்தில் இதை முயற்சி செய்து பார்த்தது. அதில் அவ்வப்போது புத்தகத்தின் இரு பக்கங்களைக் கொடுத்து அதில் ஒரு பக்கத்தை நம்மை செலக்ட் செய்யச் சொல்லும். பார்க்கும் குழந்தைகள் செலக்ட் செய்யும் பக்கத்தை வைத்துக் கதை நகரும். அதன் தொடர்ச்சியாக எதிர்பார்த்ததுபோலவே தனது முதல் இன்ட்ராக்ட்டிவ் லைவ் ஆக்ஷன் படமாக 'Bandersnatch' படத்தை தற்போது வெளியிட்டுள்ளது நெட்ஃபிளிக்ஸ். இது `பிளாக் மிரர்' தொடரின் ஸ்டாண்ட்-அலோன் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்பதான் கதை நகரும். எனவே, ஒவ்வொருவருக்கும் வேறு வேறு முடிவுகள் இருக்கும். நெட்ஃபிளிக்ஸின் இந்த முயற்சி இப்போது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஆனால், இதை டெக்னிகலாக எப்படிச் சாதித்தது நெட்ஃப்ளிக்ஸ்?

முடிவுகள்

இதில் இருந்த முதல் சிக்கல் இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதையில் கதை செல்ல வேண்டுமென்றால் அத்தனை பாதைக்கும் ஏற்றவாறு காட்சிகளை படமாக்க வேண்டும். அதை எந்த ஒரு பிசிரும் இல்லாமல் (Continuity without disturbances) சரியாக ஒளிபரப்பவும் வேண்டும். இது சாதாரணமாக எடுப்பதைவிட சுமார் மூன்று மடங்கு வேலை. இதை ஒவ்வொரு முடிவு எடுப்பதற்கும், 10 விநாடிகள் கொடுத்து, அதை வைத்து அடுத்த காட்சியை ஒரு ஷாட்டிலிருந்து இன்னொரு ஷாட்டுக்கு மாறுவதுபோல, எடிட்டிங் மூலம் ஒளிபரப்பும். இதற்கேற்ப ஷாட்கள் எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் உங்களுக்குக் காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்கு மாறுவதில் எந்த ஒரு பிசிறும் தெரியாது. எங்கும் நிற்காமல் ஓடும் இந்தப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகூட பெரிய பிரச்னை இல்லை. 

நெட்ஃபிளிக்ஸ்

இதை எப்படி மக்களிடம் எடுத்துச் செல்வது என்பதில்தான் பல தடைகள் அவர்கள் முன் இருந்தன. ஏற்கெனவே இருக்கும் நெட்ஃபிளிக்ஸில் இருப்பது சாதாரணமான வீடியோ பிளேயர் ஒன்றுதான். ஆனால் இந்தப் படத்திற்கு  அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகளுக்குப் பார்வையாளர்கள் முடிவுகளைத் தேர்வுசெய்ய வசதி ஒன்று இருக்க வேண்டும். நீங்கள் தேர்வுசெய்யும் முடிவுகளை அந்த பிளேயர் நினைவில் வைத்திருக்கவும் வேண்டும். இதற்குச் சற்று சிக்கலான மென்பொருள் ஒன்று தேவைப்பட்டது. அதை 'twine' என்னும் ஓபன்-சோர்ஸ் கேம் வடிவமைப்பு தளத்தின் உதவியுடன் செய்திருக்கிறது நெட்ஃபிளிக்ஸ். இருப்பினும் இது இயங்கும் சாதனங்களில் நல்ல ஒரு செயல்திறன் வேண்டும் என எதிர்பார்க்கும். ஆனால், நெட்ஃபிளிக்ஸ் அப்படியில்லை. கிட்டத்தட்ட அனைத்து சாதனங்களிலும் ஓடும். இந்தப் பிரச்னையை முடிந்தளவு தீர்க்க முயன்றும் ஆப்பிள் டிவி, குரோம்காஸ்ட் போன்ற சில சாதனங்களில் இந்தப் படம் ஓடாது. இதை வருங்காலத்தில் சரிசெய்துவிடுவார்கள் என நம்பலாம்.

'Flowchart' ஒன்றை மட்டும் கொண்டு இயங்க முடியாது என்பதால் இதற்காகச் சிறப்பாக 'State tracking' தொழில்நுட்பம் ஒன்றையும் வடிவமைத்துள்ளனர். இதன்மூலம் நீங்கள் இதுவரை எடுத்த முடிவுகளை எல்லாம் சேமித்து வைத்து அதைவைத்து அடுத்து என்ன காட்சி ஒளிபரப்பாக வேண்டுமென முடிவு செய்யப்படும். அதனால் இப்போது இந்தப் படம் எவ்வளவு நேரம் ஓடும் என்பதைக்கூடக் குறிப்பிட்டு சொல்ல இயலாது. ஒவ்வொருவரின் முடிவுகளுக்கு ஏற்ப அது மாறும். இந்தத் தொழில்நுட்பத்தை சேர்த்து திட்டமிடல், ஷூட்டிங் என படம் நிறைவடையக் கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆகியிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸுக்கு. ஆனால், அந்நிறுவனம் போட்டுள்ள இந்தக் கடின உழைப்பு இந்தப் படத்துக்கானது மட்டுமல்ல, இனிவரும் இது போன்ற அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் படங்களுக்கும் சேர்த்துதான்.

பிளாக் மிரர்

இந்த இன்ட்ராக்ட்டிவ் கதைசொல்லலை அடுத்த லெவலுக்கு எடுத்துச்செல்ல நெட்ஃப்ளிக்ஸைவிடச் சிறந்த நிறுவனம் எதுவாக இருக்க முடியும்? மற்ற எதையும்விட முழுமையாக ஸ்ட்ரீமிங்கை மட்டுமே நம்பி இருக்கும் நெட்ஃபிளிக்ஸ் மூலம்தான் மக்களிடம் எளிதாக இந்த இன்ட்ராக்ட்டிவ் பொழுதுபோக்கை எடுத்துச் செல்ல முடியும். அன்றாட பொழுதுபோக்கை மாற்றியமைக்கும் இது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்றுதான். வெல்டன் நெட்ஃபிளிக்ஸ்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்