``மீம் கிரியேட்டர்ஸ் நோட் ப்ளீஸ்!" போட்டோக்களிலிருந்து பேக்கிரவுண்டை இப்படியெல்லாம் நீக்கலாம்! | How to remove the backgrounds of a photo without photoshop?

வெளியிடப்பட்ட நேரம்: 19:08 (03/01/2019)

கடைசி தொடர்பு:19:08 (03/01/2019)

``மீம் கிரியேட்டர்ஸ் நோட் ப்ளீஸ்!" போட்டோக்களிலிருந்து பேக்கிரவுண்டை இப்படியெல்லாம் நீக்கலாம்!

பின்னால் இருக்கும் பேக்கிரவுண்டை நீக்க விரும்பி 'அதெல்லாம் கடினமான வேலையப்பா!' எனப் பின்வாங்கியிருக்கிறீர்களா? உங்களுக்குதான் இந்தக் கட்டுரை.

``மீம் கிரியேட்டர்ஸ் நோட் ப்ளீஸ்!

ஸ்மார்ட்போன் வளர்ச்சியால் கிட்டத்தட்ட அனைவரிடமும் ஏதேனும் ஒரு கேமரா இருக்கும் நிலை இன்று ஏற்பட்டுவிட்டது. ஒவ்வொருவரிடமும் அத்தனை புகைப்படங்கள் இருக்கின்றன. இப்படி கேமரா அனைவருக்குமானது என்றாகிவிட்ட போது அதை எடிட் செய்யும் முறைகளும் அனைவருக்குமானதாக வேண்டும் இல்லையா? அப்படித்தான் போட்டோஷாப் போன்ற முன்னணி மென்பொருள்களில் இருக்கும் எடிட்டிங் வசதிகள் எளிதான முறையில் இலவசமாக அனைவருக்கும் இப்போது கிடைக்கின்றன. இதற்கும் Image Processing, AI போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகளே காரணம். ஆனால் இவற்றைப் பற்றிப் பெரிதாக நமக்குத்தான் தெரிவதில்லை. இவற்றைப் பயன்படுத்தப் பெரிதாகப் பயிற்சியோ, மென்பொருள் அறிவோ தேவையில்லை. இன்று அப்படி எளிதாகச் செய்யமுடியும் ஒரு போட்டோ எடிட்டிங் விஷயத்தைப் பார்ப்போம்.

பல நேரங்களில் ஒரு லோகோவை தேடி பின்னணியில் ஏதேனும் இருந்து அதை நீக்கி லோகோவை மட்டும் PNG-யாக எடுக்கமுடியாமல் திணறி இருக்கிறீர்களா? இல்லை ஒரு போட்டோவில் பின்னிருக்கும் பேக்கிரவுண்ட்டில் இருக்கும் அனைத்தையும் நீக்கி ஒரு நபரை மட்டும் வெளியெடுக்க விரும்பி இருக்கிறீர்களா? இதையெல்லாம் எந்த ஒரு சிக்கலுமின்றி போட்டோஷாப் இல்லாமலேயே எளிதாகச் செய்துவிட முடியும். அது எப்படி?

ஆன்லைன் டூல்கள்:

Background Burner

இதை மிகவும் எளிமையாகப் பயன்படுத்த முடியும். இந்த ஆன்லைன் டூல் மூலம் மிகவும் சிக்கலான பேக்கிரவுண்டுகளையும் நீக்கிவிட முடியும். இதற்காக ஓர் இலவசக் கணக்கை மட்டும் இந்தத் தளத்தில் உருவாக்க வேண்டியதிருக்கும். நீங்கள் பதிவேற்றும் படங்கள் யாவும் இந்தக் கணக்கில் சேவ் ஆகிவிடும். இதை எப்படிச் செய்யலாம் என்று பார்ப்போம்.

முதலில் இந்த இணையதளத்திற்குச் சென்று வேண்டிய படத்தைப் பதிவேற்றுங்கள். பின்பு சிறிதுநேரம் காத்திருங்கள். பேக்கிரவுண்டை நீக்கிய பல்வேறு படங்களை அது உங்களுக்குக் காட்டும். இதில் விருப்பப்படும் படங்களை PNG-யாகவோ, JPEG-யாகவோ பதிவிறக்கிக் கொள்ளுங்கள். (குறிப்பு: PNG-யில் மட்டும்தான் ட்ரான்ஸ்பரென்ட்டான பின்னணியுடன் போட்டோக்கள் சேவ் ஆகும்)

Background Burner

இதற்குப் பின்னும் சில பகுதிகள் நீக்கப்படாமல் இருந்தால் `touch up' என்ற பட்டனை கிளிக் செய்து அங்கு இருக்கும் எளிமையான எடிட்டிங் வசதிகள் மூலம் அவற்றையும் நீக்கமுடியும். நீங்கள் எதிர்பார்த்த போட்டோ உங்களுக்குக் கிடைத்துவிடும். 

மொத்தமாக போட்டோக்களை பதிவேற்றி பேக்கிரவுண்டுகளை நீக்குவது போன்ற வசதிகளுக்கு ஏதேனும் சந்தாவைப் பெற வேண்டும். ஆனால், அது தொழில்ரீதியாக இதைப் பயன்படுத்துபவர்களுக்குத்தான் தேவைப்படும்.

Remove.bg

இந்த இணையதளமும் மேலே குறிப்பிடப்பட்ட அதே வேலையைத்தான் செய்யும். ஆனால், மொபைலில் பயன்படுத்தக் கூடுதல் வசதிகள் இருக்கும். மொபைல் பிரௌசரில் பயன்படுத்தும்போது நேரடியாக கேமராவில் இதைப் பயன்படுத்தி பின்னணியை நீக்கமுடியும். இந்தத் தளத்துக்குச் சென்று `Select a photo' பட்டனை க்ளிக் செய்து போட்டோவைப் பதிவேற்றுங்கள், பின்பு `Use Photo' என்ற பட்டனை க்ளிக் செய்தால் விநாடிகளில் பேக்கிரவுண்டை நீக்கித்தரும் இது. இதை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

Remove.bg

ஆனாலும் சில போட்டோக்களில் போட்டோஷாப்பில் மேனுவலாக நீக்கும் அளவுக்குத் துல்லியமாக இது இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

மொபைல் ஆப்கள்:

மீடியாகோடிங் நிறுவனத்தின் Background Eraser (Android)

ஆன்லைனில் போட்டோவை பதிவேற்றாமல் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலிலேயே இதைச் செய்யவேண்டும் என விருப்பப்பட்டால் இந்த ஆப்பை பயன்படுத்தலாம். இதில் இது மட்டுமன்றி பின்னணிக்கு மட்டும் ஃபில்டர்கள் போன்ற பிற வசதிகளும் இருக்கின்றன. இன்ஸ்டால் செய்த பிறகு இவர்களே ஒரு டுடோரியல் வீடியோ ஒன்றைப் பார்க்கச் சொல்லுவர் அதைப் பார்த்தாலே என்ன செய்யவேண்டும் என்பது எளிதாகப் புரிந்துவிடும். `Auto' என்ற பட்டனை க்ளிக் செய்தாலே கிட்டத்தட்ட பேக்கிரவுண்டில் இருக்கும் அனைத்தும் நீக்கப்பட்டுவிடும். பின்பு மீதியிருக்கும் பிசிறுகளையும் இதில் இருக்கும் எடிட்டிங் வசதிகள் மூலம் நீக்கமுடியும்.

போட்டோஷாப் அல்லாத ஆப்

சுன்வுங் ஜங் நிறுவனத்தின் Background Eraser (iOS)

ஆண்ட்ராய்டுக்கு மேலே குறிப்பிட்ட ஆப்பை போல் ஐபோன்களுக்கு இது. `Erase' என்ற டூல் கொண்டு எளிதாக பேக்கிரவுண்டை இதில் நீக்கமுடியும். இது தவிரவும் பல வசதிகள் இதில் கொடுக்கப்பட்டிருக்கும். நீக்கிய பின் பின்னணியில் சேர்க்க இவர்களே நல்ல பேக்கிரவுண்டுகள் பலவற்றையும் தருகிறார்கள். விளம்பரங்கள் வேண்டாம் என்றால் ஆப் ஸ்டோரில் இதை விலை கொடுத்தும் வாங்கலாம்.

Background Eraser

இந்த டூல்களை போட்டோஷாப் தெரிந்தவர்களே பயன்படுத்தலாம். ஏனென்றால் போட்டோஷாப்பில் இப்படி பேக்கிரவுண்டை நீக்க எவ்வளவு நேரம் ஆகுமென்பது உங்களுக்கே தெரியும். இவை அந்த வேலையை நொடிகளில் முடித்துவிடுகின்றன. 

வெறும் ஒரு பொருளையோ, நபரையோ போட்டோவிலிருந்து நீக்கவேண்டுமென்றாலும் அதற்கு எளிய வழிகள் உள்ளன. சைபர்லிங்க் போட்டோ டைரக்டர் போன்ற ஆப்களில் இதைச் செய்யமுடியும். எனவே இந்த டிஜிட்டல் யுகத்தில் இதைப் போன்ற விஷயங்களை எல்லாம் போட்டோஷாப் தெரிந்தால்தான் செய்யமுடியும் என்று நினைத்திருக்காமல் நீங்களும் உங்கள் கிரியேட்டிவிட்டியை உலகத்திற்குக் காட்டுங்கள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்