ஏறுமுகத்தில் ஜியோ; இறங்குமுகத்தில் வோடஃபோன் - டிராய் சொல்லும் புள்ளி விவரம்! | vodafone lost 70 lakhs connections

வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (03/01/2019)

கடைசி தொடர்பு:21:50 (03/01/2019)

ஏறுமுகத்தில் ஜியோ; இறங்குமுகத்தில் வோடஃபோன் - டிராய் சொல்லும் புள்ளி விவரம்!

வோடஃபோன் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 70 லட்சத்துக்கும் அதிகமான இணைப்புகளை இழந்திருப்பதாகத் தொலைபேசி கட்டுப்பாட்டு வாரியமான ட்ராய் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. 

வோடபோன்

கடந்த அக்டோபரில் ஏர்டெல் நிறுவனம் சுமார் 18 லட்சம் போன் இணைப்புகளை இழந்துள்ளது. இதைவிடக் கொஞ்சம் குறைவான அளவிலேயே செப்டம்பரில் இழந்துள்ளது. ஆனால், வோடஃபோன் நிறுவனமோ ஏறக்குறைய 70 லட்சம் இணைப்புகளை ஒரே மாதத்தில் அதாவது, கடந்த அக்டோபரில் இழந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் இந்த நிறுவனம் அடைந்த இழப்பைவிட இது அதிகமாகும். கடந்த ஆகஸ்ட்டில் 20 லட்சம் இணைப்புகளையும் செப்டம்பரில் 60 லட்சத்துக்கும் அதிகமான இழப்புகளையும் வோடஃபோன் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும், ஜியோ நிறுவனத்தின் புதிய போன் இணைப்புகளின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ட்ராய் அளிக்கும் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. கடந்த அக்டோபரில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான புதிய இணைப்புகளை ஜியோ நிறுவனம் கொடுத்துள்ளது. 

நெட்வொர்க் பயன்பாடு 

போன் இணைப்பைப் பயன்படுத்துவதில் ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் பயன்பாட்டாளர்கள் ஏறக்குறைய 98.05% என்கிற அளவில் தங்கள் நெட்வொர்க்கை பயன்படுத்தி இருப்பதாகவும், வோடஃபோன் நிறுவன பயன்பாட்டாளர்கள் 93.11% என்கிற அளவில் பயன்படுத்தி இருப்பதாகவும் ட்ராய் புள்ளிவரங்கள் சொல்கின்றன. ஆனால், ஜியோவைப் பொறுத்தவரை இது 83.33 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. பி.எஸ்.என்.எல்-ஐப் பொறுத்தவரை, இது 57.01 சதவிகிதமாக மட்டுமே உள்ளது.

சந்தைப் பங்களிப்பு

இந்தியத் தொலைத்தொடர்பு சேவையில் அதிக அளவில் சந்தை பங்களிப்பைக் கொண்டுள்ளது ஜியோ நிறுவனம். ஏறக்குறைய 52.96% சந்தைப் பங்களிப்பைக் கொண்டுள்ளது ஜியோ. ஏர்டெல் 20.44 சதவிகிதமும் வோடபோன் ஐடியா நிறுவனம் 20.43 சதவிகிதமும் பி.எஸ்.என்.எல் 4.09 சதவிகித சந்தை பங்களிப்பும் கொண்டுள்ளது!