ஐபோனிலிருந்து போடப்பட்ட ட்வீட் - ரூ.50,000 அபராதம் விதித்த ஹுவாய் | Huawei fines Employees For Tweeting From An iPhone

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (05/01/2019)

கடைசி தொடர்பு:08:00 (05/01/2019)

ஐபோனிலிருந்து போடப்பட்ட ட்வீட் - ரூ.50,000 அபராதம் விதித்த ஹுவாய்

ஆப்பிள் தவிர்த்து பிற மொபைல் நிறுவனங்கள் ட்வீட் செய்யும்போது ஐபோனில் இருந்து ட்வீட் செய்து மாட்டிக்கொள்வது என்பது சமீப காலமாக அதிகமாக நடக்கிறது. அதேபோல ஐபோனிலிருந்து ட்வீட் செய்ததால் அதன் ஊழியர்களுக்கு ஹுவாய் நிறுவனம் அபராதம் விதித்திருப்பதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.

ஹுவாய்

கடந்த வருடம் 31-ம் தேதி ஹுவாயின் அதிகாரபூர்வ ட்விட்டர் அக்கவுன்ட்டிலிருந்து 2019-ம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்துச் செய்தி ஒன்று ட்வீட் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த ட்வீட்டானது ஐபோனிலிருந்து போடப்பட்டது என்பதைப் பிரபல யூடியூப் பதிவரான மார்கஸ் பிரவுன்லே (Marques Brownlee) அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ட்வீட் செய்ததன் மூலமாகத் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளித்த ஹுவாய் ``டிஜிட்டல் தளத்தை அனைவருக்கும் கொண்டு செல்வதற்காகவும் தாங்கள் முதலீடு செய்கிறோம். அதில் எங்கள் வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் போட்டியாளர்களும் அடக்கம் எனக் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், இது தொடர்பாக ஹுவாய் நிறுவனம் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ப்லூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக அதன் சமூக ஊடகக் கணக்குகளை நிர்வகிக்கும் நிறுவனம் மீது குற்றம் சாட்டியிருக்கிறது ஹுவாய். டிஜிட்டல் மார்கெட்டிங்கில் இருக்கும் இரண்டு பணியாளர்களுக்கு 5,000 யுவான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இது இந்திய மதிப்பில் 50,000 ரூபாயாகும். மேலும். அடுத்த 12 மாதங்களுக்கு அவர்களின் பதவி உயர்வுகளையும் நிறுத்தி வைத்திருக்கிறது.