தரமான பேட்டரி; சிறப்பான சம்பவம்... எப்படி இருக்கிறது அஸூஸ் ZenFone Max Pro M2? #GadgetReview | How is the new Asus ZenFone Max Pro M2?

வெளியிடப்பட்ட நேரம்: 07:47 (21/01/2019)

கடைசி தொடர்பு:13:29 (21/01/2019)

தரமான பேட்டரி; சிறப்பான சம்பவம்... எப்படி இருக்கிறது அஸூஸ் ZenFone Max Pro M2? #GadgetReview

அஸூஸ் ZenFone Max Pro M2 மொபைல் எப்படி இருக்கிறது எனப் பயன்படுத்திப் பார்த்தோம். அதன் ரிப்போர்ட் இங்கே.

தரமான பேட்டரி; சிறப்பான சம்பவம்... எப்படி இருக்கிறது அஸூஸ் ZenFone Max Pro M2? #GadgetReview

கன் மாதிரி நிக்கும் பேட்டரி

முதலில் இந்த ZenFone Max Pro M2 மொபைலில் நம்மை ஈர்க்கும் விஷயம் இதன் பேட்டரிதான். அஸூஸ் இந்த மொபைலில் Max Pro M1-வில் இருந்த அதே அளவு பேட்டரியை  (5000 mAh) Max Pro M2-விலும் கொடுத்து இருக்கிறார்கள். பொதுவாக பேட்டரியின் mAh அளவு அதிகமாக அதிகமாக மொபைலின் எடையும் அதிகமாக இருக்குமே என்ற நம் மைண்ட்வாய்ஸ் அஸூஸ் நிறுவனத்திற்குக் கேட்டு இருக்கும் போல. அதனால் Li-polymer பேட்டரியை இதில் கொடுத்திருக்கிறார்கள். இதே 5000 mAh பேட்டரியுடன் வரும் Moto One Power மொபைலை விட இதன்  எடை குறைவாக இருப்பதை உணரமுடிகிறது. இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் அன்றாட பயன்பாட்டுக்கு ஒன்றரை நாள்வரை தாக்குப்பிடிக்கிறது.

ZenFone Max Pro M2

இது இல்லாமல் PUBG போன்ற கேம்கள் விளையாடினால்கூட ஒருநாள் வரை தாக்குப் பிடித்துவிடுகிறது இதன் பேட்டரி. இதனால் பேட்டரி விஷயத்தில் இம்முறை தரமான சம்பவத்தைச் செய்திருக்கிறது அஸூஸ் எனத் தாராளமாகச் சொல்லலாம். ஆனால் அஸூஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் forum-ல் பேட்டரி சீக்கிரமாக ட்ரெயின் ஆகிவிடுவதாகச் சிலர் புகார் தெரிவித்து வருகின்றனர். சிலருக்கு இருக்கும் இந்தப் பிரச்னையை அடுத்த அப்டேட்டில்  சரிசெய்து விடுவதாக அஸூஸ் உறுதியளித்துள்ளது. நாம் டெஸ்ட் செய்த மொபைலில் அந்த மாதிரி எந்த பிரச்னையும் இல்லை.

அசத்தும் Snapdragon 660 புராசஸர்

இந்த மிட் ரேஞ்ச் செக்மென்ட்டில் Snapdragon 660 புராசஸருடன் வெளிவருவது மூன்று மொபைல்கள்தான். அதில் ஒன்று இந்த அஸூஸ் Zenfone MAX PRO M2. மற்றவை Realme 2 PRO மற்றும் ரெட்மி A3 மாடல்கள். இந்த விலையில் வெளிவரும் மொபைல்களிலேயே இந்த Snapdragon 660 புராசஸர்தான் மிகவும் அதிக திறன் பெற்றது. அது மட்டுமல்ல. Adreno 512 GPU-வுடனும் வருவதால் கிராபிக்ஸ் எந்த ஒரு தடுமாற்றங்களுமின்றி மிகவும் ஸ்மூத்தாக வருகிறது. ஆனால் ரியல்மீ, அஸூஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே சாதாரணமாக வரும் 2.2ghz புராசஸரை 1.9 ghz-க்கு ஆல்டர் செய்தே தருகின்றன. இதனால் இந்த Under-clocked Snapdragon 660 புராசஸர், Snapdragon 636 புராசஸர்க்குதான் சமமா என்று கேட்டால், உறுதியாக இல்லை. Under-clocked என்றாலும் Snapdragon 660 புராசஸர், 660 புராசஸர்தான் என்று தனித்தன்மையை நிரூபிக்கிறது. அதனால் இது ஒரு பெரிய விஷயமில்லை. இந்த புராசஸர் மல்டிடாஸ்கிங்கிற்கும் சரி; கேமிங்கிற்கும் சரி. சிறப்பாக இருக்கிறது.

தெறிக்கவிடும் FHD+ Full View display

இந்த ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் FHD+ Full View டிஸ்ப்ளே 19:9 Aspect ratioவுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேவில் படங்கள், வீடியோக்கள் என அனைத்தும் துல்லியமாக இருக்கிறது. இது ரெட்மி நோட் 6 புரோவில் உள்ள அதே அளவிலான டிஸ்ப்ளே. இதில் உள்ள மற்றொரு சிறப்பு இந்த டிஸ்ப்ளேவைப் பாதுகாக்க கொரில்லா கிளாஸ் 6 பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செக்மென்டில் உள்ள வேறு எந்த ஸ்மார்ட்போன்களிலும் இது கிடையாது. கொரில்லா கிளாஸ் 6 பெரும்பாலும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில்தான் பயன்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனில் இருப்பது இதுதான். கொரில்லா கிளாஸ் 6 என்பதால் டிஸ்ப்ளேவுக்குக் கூடுதல் பாதுகாப்பாக இருக்கிறது. இரண்டு மூன்று முறை தவறி கீழே விழுந்தபோதும் கூட எந்த வித சேதமும் ஏற்படவில்லை. ஆனால் ஒரு பிரச்னை என்னவென்றால் வீடியோக்கள் மற்றும் கேம்கள் எல்லாம் Full View display-வில் வராமலேயே இருக்கிறது. இதையும் அஸூஸ் அடுத்த அப்டேட்டில் சரி செய்ய வேண்டும். 

டிஸ்ப்ளே

பக்கா கேமரா

கேமராவைப் பொறுத்தவரையில் சோனி IMX486 sensor உடன் கூடிய 12 + 5 மெகாபிக்ஸல் டூயல் கேமரா பின்புறமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 13 MP கேமரா முன்புறமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இருபுறமும் ஃபிளாஷ் வசதி அளிக்கப்பட்டுள்ளதால் இருளிலும் தெளிவான புகைப்படங்களை இதில் எடுக்கமுடிகிறது. அஸூஸ் தரும் கேமரா ஆப்பில் எடுக்கும் புகைப்படங்கள் நன்றாக இருந்தாலும் GCAM / GOOGLE CAMERA எடுக்கப்படும் புகைப்படங்கள் மிகச் சிறப்பாக இருக்கிறது.

சிறப்பான ஸ்பீக்கர் 

ஸ்பீக்கரைப் பொறுத்தவரையில் இன்பில்ட் 5-magnet லௌட்ஸ்பீக்கர்  NXP SmartAmp தொழில்நுட்பத்தின் உதவியுடன் தெளிவான மற்றும் இரைச்சல் இல்லாத சத்தமான ஒலியை அளிக்கிறது.

ஸ்டாக் ஆண்ட்ராய்டு

இந்த மொபைல் ஸ்டாக் ஆண்ட்ராய்டு. Unwanted Apps/Bloatware என எதுவும் இல்லாததால் சிறப்பான ஆண்ட்ராய்டு அனுபவத்தைப் பெறமுடிகிறது. மூன்று கார்டு ஸ்லாட்டுகள் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு சிம்கார்டுகள் மற்றும் மெமரிகார்டை உபயோகிக்க முடிகிறது. இரண்டு சிம்களுக்கும் 4G VoLTE தொழில்நுட்பம் அளிக்கப்பட்டுள்ளதால் கால் ட்ராப் பிரச்னைகள் இல்லை. அதுமட்டுமன்றி 2 TB வரை ஸ்டோரேஜ் விரிவாக்கிக்கொள்ளமுடியும். USB Type - C  போர்ட் இல்லாதது ஒரு சின்ன குறை. இந்த மொபைலுக்கு Android 9 pie அப்டேட் ஜனவரி இறுதியில் வழங்கப்பட வாய்ப்புள்ளது. 

15,000 ரூபாய் பட்ஜெட்டில் ஸ்டாக் ஆண்ட்ராய்டு மற்றும் நாட்ச் டிஸ்ப்ளே உடன் இருக்கும் சிறந்த மொபைகள் லிஸ்ட்டில் இந்த மொபைலையும் சேர்த்துவிடலாம். பல மாதங்களுக்கு அசூஸ் மீண்டும் இந்த மொபைல் மூலம் ரேஸில் இறங்கியிருக்கிறது. 


டிரெண்டிங் @ விகடன்