மொபைலை உளவுபார்க்கப் பணம்கொடுத்த ஃபேஸ்புக்... புதிய சர்ச்சை! | Facebook has paid 20 dollars to Teens to collect their Data for Spying

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (31/01/2019)

கடைசி தொடர்பு:10:31 (31/01/2019)

மொபைலை உளவுபார்க்கப் பணம்கொடுத்த ஃபேஸ்புக்... புதிய சர்ச்சை!

டுத்தடுத்து பிரைவசிகுறித்த பிரச்னைகளில் மாட்டிவருவதால், ஃபேஸ்புக்கிற்கு கடந்த வருடம் பெரும் அவப்பெயர் ஏற்பட்டது. இருந்தாலும், ஃபேஸ்புக் இன்னும் திருந்தவில்லை என்பதுபோல இருக்கிறது, புதிதாக வெளிவந்திருக்கும் செய்தி ஒன்று. 13 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மொபைல் பழக்கவழக்கங்களைத் தெரிந்துகொள்வதற்காக, மாதம் 20 டாலர்கள் பணம் கொடுத்து, அவர்கள் ஐபோன்களில் VPN ஒன்றை நிறுவியிருக்கிறது ஃபேஸ்புக்.

ஃபேஸ்புக்

இதை நேரடியாகச் செய்தால் சிக்கல் என்பதால், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட்டில், குறிப்பிட்ட வயதைக்கொண்ட இளைஞர்களைக் குறிவைத்து, ஃபேஸ்புக் ரிசர்ச் என்ற பெயரில் விளம்பரம்செய்திருக்கிறது. இந்த விளம்பரங்களை நேரடியாக ஃபேஸ்புக் மூலம் அளிக்காமல், வெவ்வேறு பெயர்களில் கொடுத்திருக்கிறது. இதன்மூலம், விருப்பப்பட்டு வரும் பயனர்களுக்கு ரிசர்ச் புரோகிராம் எனச் சொல்லி, மாதம் 20 டாலர் கொடுத்து அவர்களின் மொபைலின் ரூட் அனுமதியைப் பெற்றிருக்கிறது. இதன்மூலம், அவர்கள் மொபைலில் என்ன பார்க்கிறார்கள், என்ன ஆப் பயன்படுத்துகிறார்கள், என்ன பிரவுஸ் செய்கிறார்கள் என்பது வரை அனைத்தையும் ஃபேஸ்புக் பார்க்கமுடியும். மொபைல்மூலம் உளவுபார்ப்பது போலத்தான் இது. இதனை Tech Crunch இணையதளம் தன்னுடைய விசாரணையின் மூலம் உறுதிசெய்திருக்கிறது. இது, ஆப்பிளின் விதிகளுக்கு முற்றிலும் முரணானது என்பதோடு, பயனாளிகளின் டேட்டாவை இப்படி முறையற்ற வழிகளில் சேகரிப்பது மிகவும் ஆபத்தானதும்கூட.

Facebook

இதேபோல, பயனர்களின் மொபைல்களில் இருக்கும் புதிய ஆப்களைக் கண்டறியவும், அவர்கள்குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளவும், Onava Protect என்ற VPN-ஐ இதற்கு முன்பு பயன்படுத்தியது ஃபேஸ்புக். ஆனால், ஆப்பிளின் விதிகளை மீறுவதாகக்கூறி, அதைக் கடந்த வருடம் ஆப்பிள் தன்னுடைய ஆப் ஸ்டோரில் தடைசெய்தது. ஆனால், இன்னும் வெவ்வேறு பெயர்களில் அதைத் தொடர்வதாகவே இந்தச் சம்பவம் உணர்த்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து, ஃபேஸ்புக் இந்தச் சேவையை உடனே நிறுத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. இது வெறும் ஆய்வு மட்டும்தானே தவிர, உளவுபார்க்கும் செயல் அல்ல என விளக்கம் அளித்துள்ளது. இதேபோல ஆப்பிளும், ஃபேஸ்புக்கிற்கு iOS ஆப்களைச் சோதனைசெய்வதற்காக வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்திருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க