`ட்விட்டரில் ஏன் எடிட் வசதி இல்லை... இனிமேல் வருமா?' - தெளிவுப்படுத்திய ட்விட்டர் சி.இ.ஓ | Twitter CEO Jack Dorsey says twitter may be get edit option

வெளியிடப்பட்ட நேரம்: 00:11 (05/02/2019)

கடைசி தொடர்பு:07:14 (05/02/2019)

`ட்விட்டரில் ஏன் எடிட் வசதி இல்லை... இனிமேல் வருமா?' - தெளிவுப்படுத்திய ட்விட்டர் சி.இ.ஓ

ட்விட்டர்

ட்விட்டரில் நீண்ட நாள்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வரும் எடிட் வசதி கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜாக் டோர்சி தெரிவித்திருக்கிறார். ட்விட்டர் தளம் தொடங்கப்பட்டு பத்து வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை எடிட் செய்யும் வசதி கிடையாது. ட்வீட்டில் ஏதாவது தவறு இருந்தால் அதை நீக்குவது மட்டும்தான் ஒரே வழியாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னால் Joe Rogan Experience என்ற பிரபல நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ஜாக் டோர்சி. அப்பொழுது நிகழ்ச்சியை நடத்துபவர் "எடிட் வசதியைக் கொடுக்கலாமே? அசல் ட்வீட்டை மற்றவர்களும் பார்க்கும்படி சேர்த்து அதை நீங்கள் ஏன் கொடுக்கக் கூடாது?" என்று கேள்வி எழுப்பினார்.

ஜாக் டோர்சி

அதற்குப் பதிலளித்த ஜாக் டோர்சி, ``நாங்களும் அதற்கான வாய்ப்புகளைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். குறுஞ்செய்திச் சேவையை (SMS) அடிப்படையாக வைத்தே ட்விட்டர் உருவாக்கப்பட்டது என்பதால்தான் நாங்கள் எடிட் வசதியைக் கொண்டிருக்கவில்லை. குறுஞ்செய்தியை ஒரு முறை நீங்கள் அனுப்பி விட்டால் அவ்வளவுதான், அதை திரும்பப் பெற முடியாது. அதைப் போலத்தான் ஒரு ட்வீட்டும். ஒரு முறை நீங்கள் ட்வீட் செய்து விட்டால் உடனடியாக அது உலகம் முழுவதும் செல்லும். அதை நீங்கள் திரும்பப் பெற முடியாது" என்றார். மேலும் ``ஒரு வேளை ஒரு ட்வீட் அனுப்பப்படும்போது அதை 5 நொடிகள் முதல் 30 நொடிகள் வரை அதை தாமதப்படுத்தும் வசதியை நாங்கள் அறிமுகப்படுத்தலாம். அதற்குள் நீங்கள் எடிட் செய்துகொள்ளலாம். இந்தக் காலம் அதிகரிக்கப்பட்டால் அது ஒரு இயல்பான உரையாடலுக்கான தன்மையை இழக்கச் செய்து விடக் கூடும்" என்றும் தெரிவித்தார். இதனால் ட்விட்டரில் எடிட் வசதி கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எடிட் வசதிக்கும் ட்விட்டரில் சிலர் ஆதரவும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். எடிட் செய்யும் வசதி வந்து விட்டால் ட்விட்டர் அதன் தனித்தன்மையை இழந்து விடும் என்பதே இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் கருத்தாக இருந்து வருகிறது.