14 வயது சிறுவனின் படிப்புச் செலவை ஏற்ற ஆப்பிள்! - எதற்காக தெரியுமா? | Apple to Contribute Towards The Education of Teen Who Discovered a Bug regarding Face-time video calling service!

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (08/02/2019)

கடைசி தொடர்பு:12:20 (08/02/2019)

14 வயது சிறுவனின் படிப்புச் செலவை ஏற்ற ஆப்பிள்! - எதற்காக தெரியுமா?

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனின் படிப்புச் செலவுக்கு உதவப்போவதாக அறிவித்துள்ளது ஆப்பிள் நிறுவனம். எதற்காக என்றால், ஆப்பிளின் ஃபேஸ்டைம் (FaceTime) வீடியோ காலிங் சேவையில் இருந்த முக்கியமான பக் (கோளாறு) ஒன்றைக் கண்டறிந்திருந்தான் அந்த சிறுவன். அது வீடியோ காலிங் சேவையில், ஒருவருக்குக் கால் செய்து, அவர் அட்டெண்டு செய்யாவிட்டாலும் அவரது மைக்கில் வரும் ஒலியைக் கேட்க ஒரு வழி இருந்தது. அதைதான் இந்தச் சிறுவன் கண்டுபிடித்திருந்தான். 

Grant Thompson

இதற்குக் காரணமாக இருந்த குரூப் காலிங் வசதியை சில நாள்களுக்கு ஆப்பிள் நிறுத்திவைக்கும் அளவுக்குப் பிரச்னை பெரிதானது. கிராண்ட் தாம்சன் என்னும் இந்தச் சிறுவன்தான் தன் தாயின் உதவியுடன் இதை ஆப்பிள் நிறுவனத்திடம் முதலில் தெரிவித்துள்ளார். இதைச் சரிசெய்யும் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்ட அந்த நிறுவனம் ஏற்கெனவே இதற்காக அந்தச் சிறுவனுக்கு நன்றி தெரிவித்திருந்தது. தற்போது கூடுதலாக அவனது படிப்புச் செலவுக்கும் உதவப்போவதாகவும் அறிவித்துள்ளது ஆப்பிள். 

ஆப்பிள்

இந்தக் கோளாறைப் பற்றி ஆப்பிள் நிறுவனம் கூறுகையில், 'இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டதுடன் விடாமல் மீண்டும் ஒருமுறை மொத்த ஃபேஸ்டைம் சேவையிலும் இதேபோன்ற வேறு கோளாறுகள் இருக்கிறதா என்று முழுமையாகச் சோதனை செய்துள்ளோம். அதற்கேற்ப மென்பொருள் மற்றும் சர்வர் என இரண்டிலும் மாற்றங்கள் செய்துள்ளோம். இந்தக் குறைகளை மக்களிடம் கேட்டு அவற்றைச் சரிசெய்யும் முறையிலும் மாற்றங்கள் கொண்டுவர முடிவெடுத்துள்ளதாம்'' என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு சார்பில் இரண்டு பிரதிநிதிகள் ஆப்பிளின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக்குக்கு கேள்வி எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க