`குட் மார்னிங்' மெசேஜ்களை நிறுத்தச்சொல்கிறதா வாட்ஸ்அப்?  | WhatsApp is insisting to stop bulk messages in sight with the upcoming elections

வெளியிடப்பட்ட நேரம்: 14:49 (08/02/2019)

கடைசி தொடர்பு:14:49 (08/02/2019)

`குட் மார்னிங்' மெசேஜ்களை நிறுத்தச்சொல்கிறதா வாட்ஸ்அப்? 

போலிச் செய்திகள் மற்றும் வதந்திகள் பரவாமல் தடுக்க மாதம் சுமார் 20 லட்சம் கணக்குகளை டெலீட் செய்துவருவதாகத் தெரிவித்துள்ளது வாட்ஸ்அப். தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான இந்த நிறுவனத்திற்கு ஏற்கெனவே இந்த விஷயத்தில் இந்திய அரசு அழுத்தம் தந்துகொண்டிருந்தது.

வாட்ஸ்அப்

இதைத்தொடர்ந்துதான் மொத்தம் 5 பேருக்குத்தான் ஒரு மெசேஜை ஃபார்வர்டு செய்யமுடியும் என்ற கட்டுப்பாடு இந்தியாவில் விதிக்கப்பட்டது. இப்போது அது உலகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. தாங்கள் ஒரு தனிநபர் தொலைத்தொடர்பு சேவை தானே தவிர மொத்தமாகப் பலரைச் சென்றடைய உதவும் தளம் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறது வாட்ஸ்அப், அதைச் செயலிலும் காட்டவிரும்புகிறது.

இதில் ஒரு கட்டமாக சந்தேகத்திற்குரிய கணக்குகளை ரிப்போர்ட் செய்யுமாறு பயனாளர்களை ஊக்குவிப்பதன்மூலம் பல மோசடி கணக்குகளை நீக்கமுடியும் என நம்புகிறது வாட்ஸ்அப். இருப்பினும் தற்போது நீக்கப்பட்டுவரும் கணக்குகளில் 95 சதவிகிதம் ``abnormal behaviour" (இயல்பற்ற செயல்கள்) கொண்டிருப்பதால்தான் நீக்கப்பட்டிருக்கிறதாம். எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத `inactive' கணக்குகளும் இதில் சேரும். 

மெசேஜ்

இதைத்தொடர்ந்து பல்க் மெசேஜிங்கிற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமாம். அதனால் அதிகமாக `குட் மார்னிங்' மெசேஜ் அனுப்பினால் கூட உங்கள் கணக்கு நீக்கப்பட வாய்ப்புகள் உண்டு. ஆனால் இன்னும் இதைப்பற்றிய தெளிவான வரைமுறைகள் என்னவென்று தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.

Automated மெசேஜ்கள் அனுப்பும் கணக்குகளில் மேலே `டைப்பிங்' என்று வராது. போலிக் கணக்குகள் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே அதிக அளவில் பலருக்கு மெசேஜ் அனுப்பும். இதே போன்று சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளைக் கண்டறிந்தும் கணக்குகளை நீக்கிவருகிறது வாட்ஸ்அப். கடந்த தேர்தல்களில் சில முக்கியக் கட்சிகள் ஃபார்வர்ட்களுக்கு பதில் வாட்ஸ்அப் குரூப்கள் அமைத்து பிரசாரம் மேற்கொண்டதால் கட்சிகளுடன் பேசி வரைமுறைகளை நிலைநாட்டவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது வாட்ஸ்அப். இதுபோக விளம்பரங்கள் மூலம் மக்களிடம் இதுதொடர்பான விழிப்புஉணர்வு ஏற்படுத்தவும் முற்பட்டுள்ளது வாட்ஸ்அப். அதில் முன்வைக்கப்படும் முக்கிய வாக்கியம் 'spread joy, not rumours'.

நீங்க எப்படி பீல் பண்றீங்க