தொடர் சரிவில் ஐபோன் விற்பனை... வீழ்ச்சியடைகிறதா ஆப்பிள் சாம்ராஜ்யம்? | Gartner report says iphone sales are declining

வெளியிடப்பட்ட நேரம்: 17:21 (24/02/2019)

கடைசி தொடர்பு:17:21 (24/02/2019)

தொடர் சரிவில் ஐபோன் விற்பனை... வீழ்ச்சியடைகிறதா ஆப்பிள் சாம்ராஜ்யம்?

விற்பனையில் ஐபோன்களை கொஞ்சம் கொஞ்சமாக பின்தள்ளி வருகின்றன ஆண்ட்ராய்டு மொபைல்கள்.

தொடர் சரிவில் ஐபோன் விற்பனை... வீழ்ச்சியடைகிறதா ஆப்பிள் சாம்ராஜ்யம்?

ன்றைக்கு ஸ்மார்ட்போன்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இயங்குதளங்களின் வரிசையில் முதலிடத்தில் ஆண்ட்ராய்டும், இரண்டாவது இடத்தில் ஐஒஎஸ்-ம் இருக்கிறது. ஆண்ட்ராய்டில் இயங்கும் ஸ்மார்ட்போன்களைப் பல்வேறு நிறுவனங்கள் தயாரிப்பதால் போட்டியும் அதிகமாக இருக்கும். ஆனால் ஐஒஎஸ் இயங்குதளத்துக்கு அப்படி யாரும் கிடையாது, அங்கே ஐபோன்தான் ராஜா. முதல் ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்டு பத்து வருடங்களைக் கடந்துவிட்ட பின்னரும் அதற்கென சந்தையில் ஒரு இடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சமீப காலமாகவே ஐபோன் விற்பனை சரிவடைந்து வருவதாகவே பல அறிக்கைகள் கூறுகின்றன. அதற்குக் காரணம் என்ன? ஆப்பிளின் சாம்ராஜ்யம் படிப்படியாக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறதா ?

தொடர்ந்து சரியும் ஐபோன் விற்பனை 

கார்ட்னர்

கார்ட்னர் (Gartner) ஆய்வு நிறுவனம் கடந்த 2018-ன் காலாண்டில்  உலக அளவிலான ஸ்மார்ட்போன் விற்பனை எப்படி இருந்தது என்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி பார்க்கப்போனால் கடந்த வருடம் ஒட்டு மொத்தமாக ஸ்மார்ட்போன்கள் விற்பனை சற்று மந்தமாகவே இருந்திருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனையும் கூட குறைந்திருக்கிறது. ஆனால் பெரிய அளவிலான பாதிப்பு யாருக்கு என்று பார்த்தால் அது ஆப்பிள் நிறுவனத்துக்குத்தான். இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி 2017-ம் வருடம் இதே காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் 73 மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் 2018-ல் அதே காலாண்டில் 64 மில்லியன் ஐபோன்கள் மட்டுமே விற்பனையாகியிருக்கின்றன. இது மட்டுமல்ல இதற்கு முன்பு வெளியான பல அறிக்கைகள் ஐபோன் விற்பனை குறைந்திருப்பதையே காட்டுகின்றன. கடந்த வருடம் இறுதியில் வெளியான கவுன்ட்டர் பாயின்ட் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கையும் இதே கருத்தை முன்வைத்தது. அதே நேரம் இந்தப் பட்டியலில் ஆச்சர்யப்படும் அளவுக்கு வளர்ச்சியை எட்டியுள்ளது வாவே (Huawei) நிறுவனம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை சாம்சங் மட்டுமே ஐபோனுக்கு முதன்மையான போட்டியாளராக இருந்து வந்தது. தற்பொழுது கூடுதலாக வாவே நிறுவனமும் இணைந்துள்ளது. சீன நிறுவனமான வாவே கடந்த 2017-ம் வருடத்தின் நான்காவது காலாண்டில் சந்தையில் 10.8 சதவீதம் இடத்தைப் பிடித்திருந்தது. தற்பொழுது அது 14.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆப்பிளுக்கும், வாவேக்கும் இடையே வெறும் ஒரு சதவிகித இடைவெளி மட்டுமே இருக்கிறது. எனவே இதே நிலை தொடர்ந்து நீடித்தால் மூன்றாம் இடத்துக்கு ஆப்பிள் நிறுவனம் தள்ளப்படும் வாய்ப்புகள் உண்டு.

 ஐபோன் விற்பனை குறைய காரணம் என்ன ?

ஐபோன்

இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது ஐபோனின் விலைதான். விலை என்ற ஒரு  விஷயம்தான் ஆப்பிள் விஷயத்தில் சரிவையும், வாவே விஷயத்தில் அதற்கு ஏற்றத்தையும் கொடுத்திருக்கிறது. உலக அளவில் பார்த்தால் சீனாவில் ஐபோனின் விற்பனை கடுமையாகச் சரிவடைந்திருக்கிறது. அதே வேளையில் ஷியோமி, வாவே போன்ற ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது. சீனாவில் வாவே என்றால் இந்தியாவில் ஒன்ப்ளஸ். ப்ரீமியம் செக்மெண்டில் சமீபகாலமாக  ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் ஐபோன் விற்பனை குறைந்ததற்கு ஒன்ப்ளஸ் மிக முக்கியமான காரணம் என்கிறார்கள். இப்படி ஒரு ஸ்மார்ட்போனின்  விற்பனையைத் தீர்மானிக்கும் முக்கிய விஷயமாக விலை இருக்கிறது. எடுத்துக்காட்டாக தற்பொழுது ஐபோனின் XS ஸ்மார்ட்போன் மாடலின் ஹைஎன்ட் வேரியன்ட்டின் விலை ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இருக்கிறது. அவ்வளவு விலை கொடுத்து வாங்கும் ஒரு ஸ்மார்ட்போனில் அதற்குத் தகுந்த வசதிகள் இருக்கிறதா என்று கேட்டால் இல்லையென்றே கூறலாம். 2007-ம் ஆண்டில் ஐபோனை அவ்வளவு விலை கொடுத்து வாங்கத் தகுந்த காரணம் இருந்தது. அப்பொழுது அதிலிருந்த வசதிகள் வேறு எந்த மொபைலிலும் இருக்கவில்லை. ஆனால் இன்றைக்கு ஒரு ஐபோனில் இருப்பதை விடக் கூடுதல் வசதியைக் கொண்ட ஒரு ஆண்ட்ராய்டு  ஸ்மார்ட்போனை அதன் பாதி விலையில் வாங்கி விட முடியும்.

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவுக்குப் பிறகு வெளியான ஐபோன்களில் ஆப்பிளின் பெயர் சொல்லும் அளவுக்கு புதிய வசதிகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. கடந்த சில வருடங்களில் ஐபோனில் கொடுக்கப்பட்ட பெரிய வசதிகள் என்னவென்று பார்த்தால் அது  பேஸ் அன்லாக்கும், நாட்ச்சும்தான். கிட்டத்தட்ட அதே போல செயல்படும் ஃபேஸ் அன்லாக்கையும், நாட்ச்சையும் இருபதாயிரம் ரூபாய்க்குக் கீழ் உள்ள ஒரு ஸ்மார்ட்போனில் கொடுக்கிறது ஷியோமி. அவ்வளவு விலை கொடுத்து ஆப்பிள் என்ற பெயரை மட்டுமே வாங்க வாடிக்கையாளர்கள் தயாராக இல்லை என்பதையே தொடர்ந்து வெளியாகும் அறிக்கை முடிவுகள் காட்டுகின்றன. ஏற்கெனவே இந்த வருடம் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்,  5G ஸ்மார்ட்போன் என  சாம்சங் ஆட்டத்தைத் தொடங்கி விட்டது. அதைத் தொடர்ந்து வாவே, ஷியோமி, ஒன்ப்ளஸ் என பல்வேறு நிறுவனங்களும் அவர்கள் பங்குக்கு 5G ஸ்மார்ட்போன், ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் என அறிமுகம் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஆப்பிளிடம் இதைப் போல இந்த வருடம் வெளியாகும் ஐபோனில் கொடுக்கும் அளவுக்கு புதிய தொழில்நுட்பங்கள் எதுவும் கைவசம் இல்லை.  இந்த வருட ஐபோனில் 5G இருக்கப்போவதில்லை என்பதும் உறுதியாகிவிட்டது. இந்தப் போட்டியை சமாளிக்க ஆப்பிள் என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close