``ஃபோல்டபிள் போனை உருவாக்க வேண்டும்..." விருப்பம் தெரிவிக்கும் ஆப்பிளின் இணை நிறுவனர்! | Apple co founder says Apple to Make a Foldable iPhone

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/03/2019)

கடைசி தொடர்பு:09:16 (02/03/2019)

``ஃபோல்டபிள் போனை உருவாக்க வேண்டும்..." விருப்பம் தெரிவிக்கும் ஆப்பிளின் இணை நிறுவனர்!

ஆப்பிள்

சாம்சங், ஹுவாவே எனப் பல மொபைல் நிறுவனங்கள் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களைக் கடந்த சில நாள்களுக்கு முன்னால் அறிமுகப்படுத்திவிட்டன. இன்னும் பல நிறுவனங்கள், தொடர்ந்து இதே வடிவமைப்பில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் இதுபோன்ற விஷயங்களின் முன்னோடியாகக் கருதப்படும் ஆப்பிள், இந்த விஷயத்தில் சற்று பின்தங்கி விட்டது என்றே கூறலாம். ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் விஷயத்தில், ஆப்பிளின் போட்டியாளர்கள் பல படிகள் முன்னிலையில் இருக்கிறார்கள். அதேபோல, ஆப்பிளும் ஃபோல்டபிள் போனை உருவாக்க வேண்டும் எனத் தனது விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார் ஆப்பிளின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் (Steve Wozniak).

ஸ்டீவ் வோஸ்னியாக்

``டச் ஐடி, ஃபேஸ் ஐடி மற்றும் மொபைல் வழியான எளிமையான பணப்பரிமாற்றம் போன்றவற்றில் ஆப்பிள் முன்னோடியாக இருந்திருக்கிறது. ஆனால், ஃபோல்டபிள் மொபைல் போன்ற சில விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. இது, எனக்குக் கவலை அளிக்கிறது. ஏனென்றால், எனக்கு ஃபோல்டபிள் போன் வேண்டும்" என்று ப்ளூம்பெர்க் டி.வி-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான காப்புரிமைத் தகவல்களின்படி, ஆப்பிள் மடக்கும் திரையைக் கொண்ட போனை உருவாக்கும் முயற்சியில் இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. எனவே, ஸ்டீவ் வோஸ்னியாக்கின் விருப்பம் மிக விரைவில் நிறைவேறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. 


[X] Close

[X] Close