₹ 8,999 பட்ஜெட், AI புராஸசர்... ரெட்மி நோட் 7 உடன் மோதும் ரியல்மீ 3 #RealMe3 | Realme launches new smartphone Realme 3

வெளியிடப்பட்ட நேரம்: 18:23 (04/03/2019)

கடைசி தொடர்பு:18:23 (04/03/2019)

₹ 8,999 பட்ஜெட், AI புராஸசர்... ரெட்மி நோட் 7 உடன் மோதும் ரியல்மீ 3 #RealMe3

சாம்சங், ஷியோமி எனப் பெரிய நிறுவனங்கள் பட்ஜெட் செக்மென்ட்டில் முட்டி மோதிக்கொண்டிருக்க ரியல்மீ அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் தாக்குப்பிடிக்குமா?

₹ 8,999 பட்ஜெட், AI புராஸசர்... ரெட்மி நோட் 7 உடன் மோதும் ரியல்மீ 3 #RealMe3

சாம்சங், ஷியோமி தொடங்கி பல மொபைல் நிறுவனங்கள் புதிதாக அறிமுகப்படுத்திய புதிய ஸ்மார்ட்போன்களால் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது பட்ஜெட் ஸ்மார்ட்போன் சந்தை. இந்நிலையில் இந்த வருடத்தில் தனது முதல் போனை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரியல்மீ நிறுவனம். ஒப்போவின் துணை நிறுவனமாகக் கடந்த வருடம் சந்தையில் நுழைந்த ரியல்மீ சந்தையில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. தொடக்கம் முதலே பட்ஜெட் செக்மென்ட்டில் மட்டும் கவனம் செலுத்தி வரும் இந்த நிறுவனம் ஷியோமியின் ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்குப் பெரிய அளவில் போட்டியாக இருந்தது.

ரியல்மீ

கடந்த வருடம் அறிமுகப்படுத்திய அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் பரவலாக வரவேற்பு இருந்த நிலையில் ரியல்மீ 3 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். ஆனால், கடந்த முறை போல பட்ஜெட் செக்மென்ட் நிலவரம் இல்லை. கடந்த முறை ரியல்மீ, முதல் போனை அறிமுகப்படுத்தும்போது அதற்கு இருந்த பெரிய போட்டியாளர் ஷியோமி மட்டும்தான். ஆனால், இப்பொழுது அதோடு சாம்சங் நிறுவனமும் இணைந்திருக்கிறது. இப்படி சாம்சங், ஷியோமி எனப் பெரிய நிறுவனங்கள் பட்ஜெட் செக்மென்ட்டில் முட்டி மோதிக் கொண்டிருக்க சிறிய நிறுவனமான ரியல்மீ தாக்குப்பிடிக்குமா?

AI புராஸசர், பெரிய பேட்டரி... ரெட்மியுடன் போட்டிபோட இது மட்டும் போதுமா ?

ரியல்மீ 3

சமீபத்தில் வெளியான ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனுக்கு ரியல்மீ 3 போட்டியாக இருக்கும் என்று முடிவெடுத்து விட்டது ரியல்மீ நிறுவனம். இதை ஸ்மார்ட்போனின் அறிமுக மேடையில் மறைமுகமாகவும் தெரிவித்துவிட்டது. ரெட்மி நோட் 7-னில் இருக்கும் வசதிகள் அனைத்துமே பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஆனால், அதோடு போட்டியிடும் அளவுக்கு ரியல்மீ 3 ஸ்மார்ட்போனில் வசதிகள் இல்லையென்றே கூறலாம். முதலில் வெளிப்புறத் தோற்றத்தை எடுத்துக்கொள்ளலாம். ரெட்மி நோட் 7-னின் பின்புறமாகக் கண்ணாடி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் பிளாஸ்டிக்தான் அதைக் கண்ணாடி போல மாற்றியமைத்திருக்கிறது. முன்பக்கமாக இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஒரே மாதிரியான நாட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. 6.22 இன்ச் டிஸ்ப்ளே இதில் இருக்கிறது இது நோட் 7-ஐ விட அளவு சற்று குறைவானது. மேலும் டிஸ்ப்ளேவின் பாதுகாப்பிற்காக Gorilla Glass 3 இதில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரெட்மி நோட் 7-னில் இதை விட மேம்பட்ட Gorilla Glass 5 இருக்கிறது. இப்படி அனைத்து விதத்திலும் வசதிகள் குறைவாகவே இருக்கும் ரியல்மீ 3 சில இடங்களில் மட்டும் ஸ்கோர் செய்கிறது.

மீடியாடெக் Helio P70

ரியல்மீ 3 ஸ்மார்ட்போனில் ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் மெமரி கார்டைப் பயன்படுத்த முடியும். ஆனால், ரெட்மி நோட் 7-னில் அப்படிப் பயன்படுத்த முடியாது. இரண்டாவது இதில் இருக்கும் AI திறன் கொண்ட புராஸசர். இதில் மீடியாடெக்கின் Helio P70 என்ற புராஸசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போனில் இருக்கும் சில விஷயங்களில் சிறப்பான செயல்திறனைப் பெறலாம். குறிப்பாக கேமரா விஷயத்தில் இந்த ஸ்மார்ட்போனில் பின்புறமாக 13+2 MP கேமரா இருக்கிறது. முன்புறமாக 13 MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. AI மூலமாக இரவு நேரங்களில் தெளிவான புகைப்படத்தை எடுக்க முடியும். பேட்டரியின் செயல்திறனும் அதிகரிக்கும். AI என்ற விஷயத்தைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் மீடியாடெக் புராஸசர்களின் மற்ற செயல்திறன் கொஞ்சம் சுமார் ரகம்தான். குவால்காம் ஸ்னாப்டிராகன் புராஸசர்களுடன் ஒப்பிடும் போது மீடியாடெக் புராஸசர்கள் விலை குறைவாகவே கிடைக்கும். ஆனால், அதற்கேற்ற வகையில் மீடியாடெக் புராஸசர்களின் செயல்திறனும் சற்று குறைவாகவே இருக்கும். ஆனால், போனின் தயாரிப்பு விலையைக் குறைப்பதற்காகச் சில மொபைல் நிறுவனங்கள் இதை வாங்கிப் பயன்படுத்துகின்றன. 4230 mAh பேட்டரி இதில் இருக்கிறது. இது ரெட்மி நோட் 7-ஐ விட சற்று அதிகமாகும். ஆனால், இந்த விஷயத்தில் சாம்சங்கின் M10 ஸ்மார்ட்போன் போட்டிக்கு வருகிறது.

கேமரா

ஷியோமியைப் போல ஸ்மார்ட்போனில் தேவையில்லாத விளம்பரங்களைக் காட்டுவதில்லை என்கிறது ரியல்மீ. மேலும் தங்களது ஸ்மார்ட்போனில் ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவத்தைத் தரவும் முயற்சி செய்திருக்கிறது. ரெட்மி போனில் வரும் விளம்பரங்கள் கடுப்பைக் கிளப்புகின்றன என்றால் ரியல்மீ பக்கம் ஒதுங்கலாம். மற்றபடி இதன் வசதிகளை இதே செக்மென்ட்டில் உள்ள பிற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ரியல்மீ 3 ஸ்மார்ட்போன் சந்தையில் வரவேற்பைப் பெறுவது என்பது சந்தேகம்தான்.

3 GB + 32 GB வேரியன்ட் 8,999 ரூபாய் மற்றும் 4 GB + 64 GB வேரியன்ட் 10,999 என்ற விலையில் வரும் 12-ம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் ரியல்மீ 3 விற்பனைக்கு வருகிறது. இதோடு மட்டுமன்றி ஷியோமியின் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனுடன் போட்டி போடும் வகையில்  ரியல்மீ 3 புரோ என்ற ஸ்மார்ட்போனை வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அது ரெட்மி நோட் 7 புரோவை விடச் சிறப்பானதாக இருக்கும் எனவும் ரியல்மீ தெரிவித்துள்ளது.  


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close