ஓட்டுக்கு பணமா... கையும் களவுமாக சிக்கவைக்க ஓர் ஆப்! #CVigil | Election commission's CVigil app helps voters to raise complaints

வெளியிடப்பட்ட நேரம்: 14:47 (05/03/2019)

கடைசி தொடர்பு:14:47 (05/03/2019)

ஓட்டுக்கு பணமா... கையும் களவுமாக சிக்கவைக்க ஓர் ஆப்! #CVigil

பணம்கொடுப்பது, பரிசுப்பொருள்கள் விநியோகிப்பது என தேர்தல் சமயங்களில் நடக்கும் முறைகேடுகளைப் புகாராக பதிவு செய்ய வாய்ப்பளிக்கிறது இந்த ஆப்.

ஓட்டுக்கு பணமா... கையும் களவுமாக சிக்கவைக்க ஓர் ஆப்! #CVigil

த்திரிகைகள், தொலைக்காட்சி, பொது இடங்கள் என எல்லாவற்றிலும் தேர்தல் பற்றிய பேச்சே அதிகமாகப் பேசப்படுகிறது. அனைத்துக்கட்சி பிரமுகர்களும் கூட்டணி அமைப்பதில் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் நடத்தும் பேரணி மற்றும் பிரசாரங்கள் விரைவில் சூடுபிடிக்கவிருக்கின்றன. அரசியல் களம் அனல் கக்கவிருக்கிறது. அதில், கருத்துகளும் - எதிர்க்கருத்துகளும், குற்றச்சாட்டுகளும் அதற்குப் பதில்களும் எனத் தேர்தல் திருவிழா பயணம் களைகட்டத் தொடங்கிவிட்டது. இதை கருத்தில்கொண்டு தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் செய்ய 'சி விஜில்' (C Vigil-Vigilant Citizen) என்ற ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த வருடமே இந்தச் செயலியை அறிமுகம் செய்துவிட்டாலும் இப்போதுதான் இதற்கான தேவை அதிகரித்திருக்கிறது. 

CVigil ஆப்

அரசியல் பிரமுகர்கள் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வது, அடியாட்களை வைத்து மிரட்டுவது, பரிசுகள், பொருள்கள், குடி பிரியர்களுக்கு மதுபானம் அளிப்பது, மண்டபங்களில் விருந்து வைத்து அவர்களின் கவனத்தை திசை திருப்புவது போன்ற நடத்தை விதிமீறல்களில் ஈடுபடுவது மற்றும் பொய்யான தகவல்களை பரப்புவது, ஒரு கட்சி, மற்றொரு கட்சியை அவதூறாக விமர்சிப்பது, பணம் கொடுத்து செய்திகளைப் பிரசுரிக்கச் செய்வது போன்ற அனைத்து நடத்தை விதிமீறல்கள் தொடர்பாகவும் எளிதில் புகார் அளிக்கக்கூடிய வகையில் `சி விஜில்’ செயலியைத் தேர்தல் ஆணையம் வடிவமைத்திருக்கிறது.

பதிவிறக்கம் செய்வது எப்படி?

முதலில் ‘C Vigil’ செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் (இன்ஸ்டால்) முடிந்த பிறகு இந்தச் செயலியினுள் சென்று மொழியைத் தேர்வுசெய்ய வேண்டும். அதன்பிறகு செல்போன் எண்ணைப் பதிவு செய்தால், ஒருமுறை பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டு (OTP) வரும். அதை உள்ளிட்ட பிறகு பெயர், முகவரி, பின்கோடு ஆகியவற்றைப் பூர்த்தி செய்யவும். அதைத் தொடர்ந்து செயலியைப் பயன்படுத்தலாம். செல்போன் எண்ணைப் பதிவு செய்யாமலும் செயலியைப் பயன்படுத்தலாம். ஆனால், location ஆப்ஷனை allow செய்ய வேண்டும்.

CVigil App

புகார் அளிப்பது எப்படி ?

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் நிகழ்வை புகைப்படம் அல்லது 2 நிமிட வீடியோவாக  எடுத்து புகாராக பதிவு செய்யலாம்.  இருப்பிடத்தைக் காட்டுவதற்காக Auto location capture ஆப்ஷன் வசதியாக இருக்கும். ஆனால், ஏற்கெனவே எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோவை இந்த செயலி மூலம் அனுப்பமுடியாது.

புகாரின் பிரதிபலன் என்னவாயிருக்கும் ?

செயலியானது புகார் பதிவை ஏற்க சுமார் 5 நிமிட நேரம் எடுத்துக்கொள்ளும். புகார் அளித்தபிறகு, அனுப்பியவரின் செல்போனுக்கு, அடையாள எண் (Unique ID) அனுப்பப்படும். இந்த எண்ணைக் கொண்டு, நமது புகார் என்ன நிலையில் இருக்கிறது என்பதை டிராக் (Track) செய்து தெரிந்துகொள்ளலாம். அனுப்பக்கூடிய புகார்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு (அதிகாரிகளுக்கு) செல்லும். பின்னர், தேர்தல் பறக்கும்படை அல்லது தனிப்படை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு 15 நிமிடத்தில் விரைந்து சென்று, அரை மணி நேரத்துக்குள் விசாரணை நடத்துவார்கள். புகாரின் உண்மைத்தன்மையை அறிந்து, மாவட்டத் தேர்தல் அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். அவர் இதுகுறித்து 50 நிமிடங்களுக்குள் விசாரணை நடத்துவார். பின்னர் தேர்தல் ஆணையத்தின் தேசிய குறைதீர்வுமையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புகார் அளித்த 100 நிமிடங்களுக்குள் புகார் மீது உரிய  நடவடிக்கை எடுக்கப்படும்.

CVigil App

தற்போது எந்த ஒரு புகாரையும் இதில் பதிவிட இயலாது. தேர்தல் நடத்தை விதிகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு செயலி செயல்பாட்டுக்கு வரும். தேர்தல் முடிவுக்குப் பிறகு செயலி செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஊடகங்களைச் சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ``விரைவில் சி விஜில் ஆப் செயல்பாட்டுக்கு வரும். இதில் புகார் அளிக்கும் வாக்காளர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close