ஃபேஸ்புக் கணக்கை உடனடியாக அழியுங்கள்... எச்சரிக்கும் வாட்ஸ்அப்பின் இணை நிறுவனர் | WhatsApp Co-Founder Brian Acton advice students to delete facebook

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (15/03/2019)

கடைசி தொடர்பு:17:50 (15/03/2019)

ஃபேஸ்புக் கணக்கை உடனடியாக அழியுங்கள்... எச்சரிக்கும் வாட்ஸ்அப்பின் இணை நிறுவனர்

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் கணக்கை உடனடியாக அழித்து விடுங்கள் என மாணவர்களை அறிவுறுத்தியிருக்கிறார்  வாட்ஸ்அப்பின் இணை நிறுவனரான பிரையன் ஆக்டன். கலிபோர்னியாவில் இருக்கும்  ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர்களோடு உரையாடியபோது இதை அவர் தெரிவித்திருக்கிறார். 2009-ம் ஆண்டில் வாட்ஸ்அப்பைத் தொடங்கிய பிரையன் ஆக்டன் அதைக் கடந்த 2014-ம் ஆண்டில் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் விற்றார். அதன் பிறகு வாட்ஸ்அப்பிலிருந்து வெளியேறிய அவர் புதிதாக சிக்னல் என்ற புதிய ஆப்பை வடிவமைத்து வெளியிட்டார்.

வாட்ஸ்அப்

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்துக்குப் பிறகு ஃபேஸ்புக்கை கடுமையாக விமர்சித்தும் வருகிறார். இந்த நிலையில், பல்கலைக்கழக மாணவர்களிடையே பேசும்போது `` அவர்களுக்கு அனைத்து அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறோம். அது நிச்சயம் நல்ல முடிவல்ல. நாம் அவர்களது பொருள்களை வாங்குகிறோம். அதற்காக இணையதளத்தில் பதிவு செய்கிறோம். எனவே ஃபேஸ்புக் கணக்கை அழிப்பதுதான் சரியானதாக இருக்கும்.'' என்று கூறினார். கடந்த வருடம் ஃபோர்ப்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் பயனாளர்களின் தனியுரிமையை ஒரு பெரிய லாபத்துக்காக விற்றுவிட்டேன் எனவும் தற்பொழுது அந்த உணர்வுடனேயே தினமும் வாழவேண்டியிருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.


[X] Close

[X] Close