`ஏப்ரல் 2-ம் தேதிதான் கடைசி... டவுன்லோடு பண்ணிக்கோங்க!' - கூகுள் ப்ளஸ்க்கு டாடா | Google shutting down google plus in few days

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (20/03/2019)

கடைசி தொடர்பு:13:40 (20/03/2019)

`ஏப்ரல் 2-ம் தேதிதான் கடைசி... டவுன்லோடு பண்ணிக்கோங்க!' - கூகுள் ப்ளஸ்க்கு டாடா

கூகுள்

ஃபேஸ்புக்குடன் போட்டி போடும் நோக்கில் கடந்த 2011-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது கூகுள் ப்ளஸ் சேவை. தொடக்கத்தில் வரவேற்பு இருந்தாலும் பின்னர் வெகுவாகக் குறைந்து போனது. மேலும், பாதுகாப்பு விஷயங்களிலும் பல சிக்கல்கள் தொடர்ந்து எழுந்து கொண்டேயிருந்தது. அதைத் தொடர்ந்து ப்ளஸ் சேவையை நிறுத்தப்போவதாகக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தது கூகுள். அதன்படி வரும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி முதல் ப்ளஸ் சேவை நிரந்தரமாக முடிவுக்கு வருகிறது. அன்றைய தினத்திலிருந்து கணக்குகள் அனைத்தையும் நிரந்தரமாக அழிக்கும் வேலையைக் கூகுள் தொடங்கவிருக்கிறது.

Google Plus

எனவே, அதற்கு முன்பாக ப்ளஸ் கணக்கிலிருந்து போட்டோக்கள், வீடியோக்கள் எனத் தேவைப்படும் டேட்டாக்களை டவுன்லோட் செய்துகொள்ள அதன் பயனாளர்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அதற்காக நேரம் அதிகமாகத் தேவைப்படலாம் என்பதால் மார்ச் 31-ம் தேதிக்கு முன்னால் தரவிறக்கம் செய்யத் தொடங்குவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஞாபகப்படுத்தும் வகையில் இறுதியாக எச்சரிக்கை செய்யும் வகையில் மெயில் ஒன்றும் பயனாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி வேறு இன்பாக்ஸ் என்ற இமெயில் ஆப் சேவையையும் அன்றைய தினம் முடிவுக்குக் கொண்டு வரப்போவதாகக் கூகுள் தெரிவித்துள்ளது.