அதிக சப்ஸ்கிரைபர்கள்... உலகின் நம்பர் ஒன் யூடியூப் சேனல் இந்த இந்திய சேனல்தான்! | Indian T-series channel now has most subscribers in the youtube

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (22/03/2019)

கடைசி தொடர்பு:13:55 (22/03/2019)

அதிக சப்ஸ்கிரைபர்கள்... உலகின் நம்பர் ஒன் யூடியூப் சேனல் இந்த இந்திய சேனல்தான்!

பிப்ரவரி 2005-ல் தொடங்கப்பட்ட இணையதளமான யூடியூபை அக்டோபர் 2006-ல் கூகுள் வாங்கியது. தற்போது உலகில் மக்கள் அதிகம் விரும்பிப் பயன்படுத்தும் முன்னணி வீடியோ தளமாக இருக்கிறது யூடியூப். இதில் உலகிலேயே அதிக சந்தாதாரர்கள் மற்றும் பார்வையாளர்களைக் கொண்ட யூடியூப் சேனல்கள் அவ்வப்போது அந்நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படும். அந்தச் சேனலின் பிரபலத்தை இவை உணர்த்துவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.

T-series யூடியூப் சேனல்

அதன்படி மார்ச் 13, 2006-ல் தொடங்கப்பட்ட T-Series யூடியூப் சேனல்தான் உலகிலேயே அதிக சந்தாதாரர்கள் கொண்ட யூடியூப் சேனல்  என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஸ்வீடன் நாட்டை தலைமையிடமாகக் கொண்ட PewDiePie என்ற சேனல்தான் யூடியூபில் 90.454 மில்லியன் சந்தாதாரர்கள் பெற்று முதலிடத்தில் இருந்துவந்தது. தற்போது அதைப் பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் டி-சீரிஸ் சேனல் 6,500 சந்தாதாரர்கள் வித்தியாசத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த அறிக்கை வெளியாகும்போது டி சீரிஸ் யூடியூப் சேனலுக்கு 90.539 மில்லியன் சந்தாதாரர்கள் இருந்தனர். தற்போது 90.581 மில்லியன் சந்தாதாரர்களாக அதிகரித்துள்ளது.

 டி-சீரிஸ் யூடியூப் சேனல் முதல் இடத்தைப் பிடித்திருப்பது இது முதல் தடவை அல்ல. ஏற்கெனவே, பலமுறை முதல் இடத்துக்கும் இரண்டாம் இடத்துக்கும் சிறு சிறு சந்தாதாரர்கள் வித்தியாசத்தில் வந்துள்ளது. ஆனால், ஆயிரக்கணக்கான சந்தாதாரர்கள் வித்தியாசத்தில் டி-சீரிஸ் முதல் இடத்தைப் பிடித்திருப்பது இதுவே முதல்முறை. இந்த T-Series நிறுவனம் 29 துணை சேனல்களையும்  நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

Youtube Subscribers

தற்போது இந்த அறிக்கை தொடர்பாக  FlareTV என்ற சேனல், கருத்துக்கணிப்பை நடத்திவருகிறது. அதிலும் சுமார் 31,000 வாக்கு வித்தியாசத்தில், டி-சீரிஸ் முதல் இடத்தில் உள்ளது.T-Series மற்றும் PewDiePie ஆகிய இரு சேனலுக்கும் ஏற்பட்டுள்ள இந்த கடும்போட்டியால், கருத்துக்கணிப்பை நிகழ்த்திவரும்  FlareTV -க்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.