கேம் லவ்வர்ஸ்.... இனி எங்கும் கேம்; எதிலும் கேம்..! கூகுளின் அசத்தல் #GoogleStadia | Google launches new online game platform Stadia

வெளியிடப்பட்ட நேரம்: 17:29 (23/03/2019)

கடைசி தொடர்பு:17:29 (23/03/2019)

கேம் லவ்வர்ஸ்.... இனி எங்கும் கேம்; எதிலும் கேம்..! கூகுளின் அசத்தல் #GoogleStadia

ஸ்டேடியாதான் இனிமேல் ஆன்லைன் கேம்களின் எதிர்காலம் என்கிறது கூகுள். எங்கும் விளையாடலாம், எதிலும் விளையாடலாம் என்பது இதன் ஸ்பெஷல்!

கேம் லவ்வர்ஸ்.... இனி எங்கும் கேம்; எதிலும் கேம்..! கூகுளின் அசத்தல்  #GoogleStadia

ன்லைன் கேம்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறது கூகுள். அதற்காக ஸ்டேடியா என்ற புதிய தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதுவரை மற்ற எந்த நிறுவனங்களும் தராத புதிய அனுபவத்தை ஸ்டேடியா தரும் என்கிறது கூகுள்.

எங்கும் விளையாட்டு எதிலும் விளையாட்டு

ஸ்டேடியா - அடுத்த லெவல் கேம்

வீடியோ கேம்கள் முதலில், ஒருவர் விளையாடும் வகையில்தான் இருந்தன. ஆனால் வெறுமனே மெஷினோடு விளையாடுவது மனிதர்களுக்கு ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தத் தொடங்கியது. இரண்டு பேர் அருகில் இருந்து கொண்டே விளையாடத் தொடங்கினார்கள். பிறகு அருகில் ஒருவர் இல்லாவிட்டாலும் ஒரு ஆள் தேவைப்பட்ட போதுதான் ஆன்லைன் கேம் என்ற விஷயம் வேகமாக வளர்ந்தது. இதன் மூலமாகக் குறிப்பிட்ட அளவிலான நபர்கள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இணையம் மூலமாக இணைந்து கொண்டு விளையாடுவது சாத்தியமானது. அதற்காக ஸ்மார்ட்போன், லேப்டாப், Xbox, பிளே ஸ்டேஷன் எனப் பல சாதனங்கள் இருக்கின்றன. இவற்றின் செயல்திறனைப் பொறுத்து ஒவ்வொன்றிலும் விளையாட்டு அனுபவத்தைப் பெற முடியும். இந்நிலையில்தான் இவற்றுக்குப் போட்டி போடும் வகையில் ஸ்டேடியா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதைப் பணம் கொடுத்து வீட்டுக்கெல்லாம் வாங்கிவர முடியாது. ஸ்டேடியா என்பது டிஜிட்டல் கேம்களுக்கான ஒரு தளம் அவ்வளவுதான்.

கூகுள்

இங்கே இருக்கும் மொத்த விஷயமும் விளையாட்டு மட்டும்தான். இது உலகில் தற்போது இருக்கும் டிஜிட்டல் கேம்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் என கூகுள் நம்புகிறது. எடுத்துக்காட்டாக  Xbox, பிளே ஸ்டேஷன் போன்றவற்றில் விளையாடும் அனுபவம் என்பது பல ஆயிரங்கள் செலவழிப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஒன்று. ஸ்டேடியா மூலமாக அதைத் தலைகீழாக மாற்ற முடியும் என்கிறது கூகுள். அதற்குக் காரணம் இதில் ஒரு ஒரு கேமிற்கான டேட்டாக்கள் அனைத்தும் கூகுளின் டேட்டா சென்டரில் இருந்து நேரடியாகவே கிடைக்கும். எனவே இதற்கான ஹார்டுவேர் என்பது அவ்வளவாகத் தேவைப்படாது என்கிறது கூகுள்.

ஸ்டேடியா

எங்கும் விளையாட்டு எதிலும் விளையாட்டு என்பதுதான் ஸ்டேடியா மூலமாக கூகுள் டிஜிட்டல் உலகுக்குச் சொல்ல வரும் விஷயம். எடுத்துக்காட்டாக யூடியூபில் ஒரு கேமின் டிரெய்லரை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை விளையாடிப் பார்க்க நீங்கள் விரும்பினால் ஒன்று அதை டவுன்லோட் செய்ய வேண்டியிருக்கும். Xbox, பிளே ஸ்டேஷன் ஆகியவற்றுக்கானது என்றால் அவை தேவைப்படும். ஆனால், ஸ்டேடியா மூலமாக ஒரே கிளிக்கில் அடுத்த நொடியில் எதில் டிரெய்லரை பார்த்தோமோ அதிலிருந்தே கேமை தொடங்கி விடலாம். ஒரே க்ளிக்கில் நேரடியாக கேமுக்குள் நுழைந்துவிடலாம். அனைத்து டேட்டாவும் கூகுளின் டேட்டா சென்டரில் இருந்து கிடைக்கும். அதாவது, நாம் விளையாடும் கேம் கூகுளின் ஹார்டுவேரில் விளையாடப்படும். அதை நம் திரையில் ஸ்ட்ரீமிங் மூலம் கூகுள் ஒளிபரப்பும். இதன் மூலம் ஹார்டுவேருக்கான தேவையை கூகுள் குறைக்கிறது. அதேபோல இங்கே விளையாடுபவர்களுக்கான வசதி என்பது எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு அதிகமாக கேம் டெவலப்பர்களுக்கும் இருக்கிறது. இதன் மூலமாக டெவலப்பர்கள் எளிதாக ஒரு கேமை உருவாக்கி சோதிப்பதற்கான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஸ்டேடியாவுக்கான ஹார்டுவேர் ஒன்றையும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்டேடியா கண்ட்ரோலர்

ஸ்டேடியா கன்ட்ரோலர் என்ற இது வழக்கமான கேமிங் கன்சோல் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை விளையாடும் சாதனத்துடன் வைஃபை மூலமாக இணைத்துக் கொள்ள முடியும். விளையாடும் போது ஏதாவது சந்தேகங்கள் ஏற்பட்டால் அதைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் கூகுள் அசிஸ்டன்ட்டும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அடுத்த லெவலுக்கு எப்படிச் செல்வது என்று யோசிக்க வேண்டாம். கூகுள் அசிஸ்டன்ட்டிடம் கேட்டால் வழிகாட்டும். விளையாட்டின் சுவாரஸ்யம் என்பது அதில் இருக்கும் சவால்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில்தான் இருக்கிறது. ஆனால் கூகுள் அசிஸ்டன்ட் கேம்களில் உள்ள சிறு சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் என்பதால் சுவாரஸ்யம் சற்று குறையலாம். ஃபேஸ்புக்கில், ட்விட்டரில், மெசேஜில் என எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் ஸ்டேடியாவை அணுகமுடியும்.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா போன்ற பகுதிகளில் இந்த வருடத்துக்குள்ளாகவே பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்தியா மற்றும் ஆசியாவில் உள்ள மற்ற பகுதிகளுக்கு எப்போது இது கிடைக்கும் என்பதைப் பற்றி கூகுள் இதுவரை எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே ஸ்டீம் போன்ற தளங்கள் இதேபோன்ற சேவைகளை அளித்துவருகின்றன. தற்போது கூகுளும் களமிறங்கியிருப்பதன் மூலம் கேமர்களுக்கு கூடுதல் ஆப்ஷன் ஒன்று கிடைத்திருக்கிறது எனலாம்.


டிரெண்டிங் @ விகடன்