`மோடி 15 லட்சம் தந்துவிட்டார்!' மெசேஜ் உண்மையானு வாட்ஸ்அப்கிட்ட கேட்டோம்! #GuessReply | WhatsApp launches Fact-Checking Service in India

வெளியிடப்பட்ட நேரம்: 18:26 (03/04/2019)

கடைசி தொடர்பு:19:04 (03/04/2019)

`மோடி 15 லட்சம் தந்துவிட்டார்!' மெசேஜ் உண்மையானு வாட்ஸ்அப்கிட்ட கேட்டோம்! #GuessReply

இதுவரை ஃபார்வர்டைக் குறைத்துக் கொள்ளுங்கள் மக்களே என்று சொல்லி வந்த வாட்ஸ்அப் முதல்முறையாக செய்தியை ஃபார்வர்டு செய்யச்சொல்லி கேட்டுக்கொண்டிருக்கிறது.

`மோடி 15 லட்சம் தந்துவிட்டார்!' மெசேஜ் உண்மையானு வாட்ஸ்அப்கிட்ட கேட்டோம்! #GuessReply

ந்தியாவில் சமூக வலைதள நிறுவனங்களுக்குப் போலிச்செய்திகள் என்ற விஷயம் பெரிய சவாலாக இருந்து வருகிறது. கடந்த சில வருடங்களில் இணையப் பயன்பாடு அதிகரிக்கும்போதே அதனுடன் போலிச்செய்திகள் பரவலும் அதிகரிக்கத் தொடங்கியது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது வாட்ஸ்அப்தான். தவறாகப் பரப்பப்பட்ட தகவல்களால் கொலைகள் நடக்கும் அளவுக்கு விவகாரம் பெரிதானது. அதன்பிறகு விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த வாட்ஸ்அப் அதைக் குறைக்க பல்வேறு வசதிகளை ஆப்பில் கொண்டு வந்தது. ஃபார்வர்டு  செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது,மெசேஜூக்கு மேலே `ஃபார்வர்டு செய்யப்பட்டது' என்பதைக் குறிப்பிட்டது எனப் பல வசதிகள் போலிச் செய்திகளைக் குறைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் மேலும் புதிதாக ஒரு வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது வாட்ஸ்அப்.

உண்மை என்னன்னு தெரியணுமா... எங்களுக்கு ஃபார்வர்டு பண்ணுங்க!

வாட்ஸ்அப்

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் போலிச் செய்திகள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சேவையைப் பயன்படுத்த 9643000888 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்குத் தகவலை அனுப்பி அது சரியானதுதானா என்பதைப் பரிசோதிக்கலாம். இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிமையானது. உங்களுக்கு வாட்ஸ்அப்பில் வரும் செய்திகள் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால் மேலே குறிப்பிட்ட எண்ணுக்கு அதை அப்படியே ஃபார்வார்டு செய்தால் போதும். இந்தச் சேவை இந்தியா முழுவதும் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. எழுத்து, புகைப்படம், வீடியோ எனச் செய்தி எந்த வடிவத்திலிருந்தாலும் இந்த எண்ணுக்கு அனுப்பிவைக்கலாம். ஆங்கிலம் தவிர இந்தி, தெலுங்கு, பெங்காலி மற்றும் மலையாளம் என மொத்தம் ஐந்து மொழிகளில் இந்தச் சேவையைப் பெறமுடியும். ஒரு மெசேஜை அனுப்பும் போது சரியானது, தவறானது, விவாதத்துக்குரியது அல்லது இப்போதைக்குப் பரிசோதிக்க முடியாது என்ற பதில்களை வாட்ஸ்அப் கொடுக்கும். இந்தப் புதிய வசதிக்காக புதுடெல்லியைச் சேர்ந்த PROTO என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது வாட்ஸ்அப். மேலும் Dig Deeper Media மற்றும் Meedan என்ற நிறுவனங்களும் இந்த முயற்சியில் இணைந்துள்ளன.

Fact Check

சர்வதேச நிறுவனங்களான இவை Fact Check எனப்படும் உண்மை கண்டறியும் துறையில் உலக அளவில் பிரபலமானவை. இந்த இரண்டு நிறுவனங்களும் மெக்ஸிகோ மற்றும் பிரான்ஸில் நடந்த தேர்தல்களில் மட்டுமன்றி உலகம் முழுவதும் நடக்கக்கூடிய தேர்தலுக்கு முன்னால் போலிச்செய்திகள் பரவுவதைத் தடுக்கும் திட்டங்களில் பணியாற்றியிருக்கின்றன. இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதியின் மூலமாக ஒரு டேட்டாபேஸ் ஒன்றை உருவாக்கவும், அதன் மூலமாகப் போலிச் செய்திகளை விரைவாகச் சோதனை செய்யவும் வாட்ஸ்அப் நிறுவனம் முடிவுசெய்துள்ளது. மேலும் இது ஓர் ஆராய்ச்சி திட்டமாகவும் செயல்படுத்தப்படுகிறது. ``இந்தத் திட்டத்தின் இலக்கு என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவில், எவ்வளவு தவறான செய்திகள் வாட்ஸ்அப்பில் பரப்பப்படுகின்றன என்பதைக் கண்டறிவதுதான். இதன் மூலமாக அதிக தரவுகள் கிடைக்கும் போது, போலிச் செய்தியின் தன்மை, அதன் இடம், மொழி ஆகிய விஷயங்களை எளிதாகக் கண்டறிய அவை உதவும்" என PROTO நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மோடி

வேலை செய்கிறதா இந்த `செக் பாயின்ட்'

இது எப்படி வேலை செய்கிறது என்பதை பரிசோதனை செய்வதற்காக வாட்ஸ்அப்பில் பெறப்பட்ட ஒரு செய்தியை அந்த எண்ணுக்கு அனுப்பிவைத்தோம். ஒரு சில நிமிடங்களிலேயே குறிப்பிட்ட எண்ணிலிருந்து ஒரு ரிப்ளை வந்தது. அதில் `நீங்கள் அனுப்பியதைச் சரிபார்க்க விரும்பினால் எண் `1' வேண்டாம் என்றால் `2' என்பதைத் தேர்ந்தெடுத்து அனுப்பவும் என்று இருந்தது. `1' அனுப்பி வைத்தால் `உங்கள் கோரிக்கையைப் பெற்றுக் கொண்டோம், விரைவில் இதற்கான பதில் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்' என ஒரு மெசேஜ் வருகிறது. `2' அனுப்பினால் உங்கள் தகவலைப் பரிசோதனை செய்ய மாட்டோம் என்ற மெசேஜ் ரிப்ளையாகக் கிடைக்கிறது. பதிலைத் தெரிவிக்க விரைவில் தொடர்புகொள்வோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும் பதில் கிடைப்பதற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

Whatsapp Tipline

ஒருவேளை புதிய செய்திகளைத் தேடி பரிசோதிக்க தாமதம் ஆகிறதோ என எண்ணி, மோடி 2014-ல் அளித்த 15 லட்சம் ரூபாய் வாக்குறுதி தொடர்பான மெசேஜையும் அனுப்பினோம். இதற்கு ஊடகச் செய்திகள், அரசு அளித்த தகவல்கள் உட்படப் பல குறிப்புகள் உள்ளன. மேலும், பிரதமர் மோடி அப்போது நிஜமாகவே வாக்குறுதி கொடுத்தாரா என்பதைக் கூட அலசவேண்டாம். அப்படிப் பேசினார் என்பதையாவது குறைந்தபட்சம் உறுதிசெய்திருக்க முடியும். ஆனால், அதைக்கூட வாட்ஸ்அப் சொல்லவில்லை. இதேபோல `மோடி 15 லட்சம் தந்துவிட்டார்!' என்றும் அனுப்பினோம். அதற்கும் பதில் வரவில்லை.

இதேபோல சிக்கல் இருப்பதாகச் சமூக வலைதளங்களிலும் சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்த வசதி இந்தியா போன்று அதிகமாகப் போலிச் செய்திகள் பரவும் நாட்டுக்குத் தேவையான ஒன்றுதான். இந்த வசதி இப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதால் இதில் சில குறைகள் இருக்கக்கூடும். அதை மட்டும் வாட்ஸ்அப் நிறுவனம் சரி செய்துவிட்டால் இது நிச்சயம் போலிச் செய்திகளைத் தடுப்பதில் முக்கிய பங்குவகிக்கும். 


டிரெண்டிங் @ விகடன்