விற்பனைக்கு வந்த உலகின் முதல் 5G மொபைல்! - தென் கொரியாவுக்கு அடித்த ஜாக்பாட் | Samsung Launches First Commercial 5G Phone in South Korea

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (06/04/2019)

கடைசி தொடர்பு:16:15 (06/04/2019)

விற்பனைக்கு வந்த உலகின் முதல் 5G மொபைல்! - தென் கொரியாவுக்கு அடித்த ஜாக்பாட்

தென் கொரியா

உலகின் முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் அதன் சொந்த ஊரான தென் கொரியாவில் 5G ஸ்மார்ட்போனை முதல் முறையாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னால் கேலக்ஸி S10 ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுக நிகழ்வின் போதே 5G வசதி கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது சாம்சங். ஆனால், அது எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல்கள் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்றைக்குத் தென் கொரியாவில் விற்பனைக்கு வந்துள்ளது கேலக்ஸி S10 5G. அதோடு அந்நாட்டில் சேவை வழங்கி வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களான SK Telecom, KT மற்றும் LG Uplus ஆகிய மூன்றும் நேற்றைக்கு சியோலில் நடந்த நிகழ்ச்சியில் 5G நெட்வொர்க் சேவையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளன.

சாம்சங்

இதன் மூலமாக உலகில் வர்த்தக முறையிலான 5G நெட்வொர்க் சேவை பயன்பாட்டுக்கு வந்த முதல் நாடு என்ற பெருமையையும் தென் கொரியா பெற்றிருக்கிறது. அங்கே 5G சேவை தொடங்கப்பட்ட சில மணி நேரங்களில் அமெரிக்காவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான வெரிசோன், சிகாகோ மற்றும் மினியாபொலிஸ் ஆகிய இரண்டு இடங்களில் சேவையைத் தொடங்கியது. அமெரிக்காவில் வரும் 16-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.